Published : 30 Mar 2015 11:03 AM
Last Updated : 30 Mar 2015 11:03 AM

துணிவே தொழில்: தொழிலுக்கு முதலீடு கிடைக்குமா?

பல தொழில் முனைவோர் என்னிடம் தொழில் தொடங்குவதற்கான யோசனைகள் உள்ளன. இதற்கு எங்கு முதலீடு கிடைக்கும். முதலீட்டை திரட்டுவது எப்படி? என்று கேட்கின்றனர்.

இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் முன்பாக உங்கள் தொழிலுக்கு வெளி நபரிடமிருந்து முதலீடு திரட்ட வேண்டியது அவசியமா என்பதை நீங்கள் ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து முடிவு செய்யுங்கள்.

உங்கள் தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீடு செய்பவருக்கு பங்காக அளிக்கத் தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் தொடங்கும் தொழிலில் உழைப்பு முழுக்க முழுக்க உங்களுடையது. உழைக்காமல் முதலீடு செய்வோருக்கு பங்களிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

இன்னும் சிலர் வங்கிகளில் ஏன் கடன் வாங்க வேண்டும்? தெரிந்த அல்லது உறவினரிடம் வாங்கி தொழில் தொடங்குகிறேன் என்கின்றனர்.

வங்கிகளிடம் கடன் பெற வேண்டும் என்றால் உங்கள் தொழில் குறித்த அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையில் வங்கிக்கு திருப்தி ஏற்பட்டால்தான் கடன் கிடைக்கும். தனி நபரிடம் கடன் கிடைத்தாலும் வட்டி இல்லாமல் கடன் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அது வங்கி வட்டி விகிதத்தைக் காட்டிலும் நிச்சயம் குறைவாக இருக்காது.

வங்கிகளிடம் கடன் பெற வேண்டும் என்றால் உங்கள் தொழில் குறித்த அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையில் வங்கிக்கு திருப்தி ஏற்பட்டால்தான் கடன் கிடைக்கும். தனி நபரிடம் கடன் கிடைத்தாலும் வட்டி இல்லாமல் கடன் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அது வங்கி வட்டி விகிதத்தைக் காட்டிலும் நிச்சயம் குறைவாக இருக்காது.

உங்கள் தொழில் அல்லது நீங்கள் அளிக்கப் போகும் சேவை வெற்றி பெறுமா என்பதை ஒரு முறைக்கு லட்சம் முறை கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதா? உங்களுக்கே திருப்தி ஏற்படாவிட்டால் வேறு எந்த முதலீட்டாளரை, வங்கியை திருப்திபடுத்தி நிதியைப் பெற முடியும்?

எந்த ஒரு தொழிலைத் தொடங்குகிறீர்கள் என்றாலும் அதற்கான சந்தை வாய்ப்பு, அதற்கு வாடிக்கையாளர் மத்தியில் உள்ள வரவேற்பு அதை எந்த அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடியும் என்பதை ஆராய வேண்டும்.

உங்களது பொருளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பு இருந்தாலோ அல்லது உங்களது தொழில் யோசனையை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்பு இருந்தால் முதலீட்டாளர்கள் கிடைப்பதில் பிரச்சினை இருக்காது. நிதி திரட்டுவதும் பிரச்சினையாக இருக்காது.

நீங்கள் தொடங்கப் போகும் தொழிலில் உங்களுக்கு பிடிமானம் கிடைக்கிறதா என்று பாருங்கள். அதை சில காலம் தொடர்ந்து நடத்துங்கள். அப்போதுதான் தொழில் எது சரி எது தவறு என்பது புரியும். உங்கள் தொழிலை அடுத்த 3 ஆண்டுகளில் எந்த அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் உங்கள் நிறுவனம் எந்த நிலையை எட்ட வேண்டும் என்றும் திட்டமிடுங்கள். அதை செயல்படுத்துங்கள்.

பெரும்பாலானவர்கள் தங்களிடம் திட்ட அறிக்கை, அதாவது ஐந்து ஆண்டுகளில் தங்கள் தொழில் இந்த அளவுக்கு உயரும் என்று கூறுவர். இதெல்லாம் வெறுமனே காகித வடிவில் இருப்பவை. தொழிலுக்கான நுணுக்கம் இல்லாமல் கூறப்படுபவை. இத்தகைய தொழில் யோசனைகளுக்கு முதலீடு கிடைப்பது கடினம்.

உங்கள் தொழிலில் உங்களுக்கே நம்பிக்கை ஏற்படாவிடில் வேறு யாருக்கு நம்பிக்கை ஏற்படும்.

உங்கள் தொழில் அளிக்கும் சேவை மீது நம்பிக்கை இருந்தால் அதற்கு முதலீடு செய்ய ஆட்கள் காத்திருக்கிறார்கள். 5 லட்சம் அல்ல 50 கோடி வரை முதலீடு செய்வதற்கு நிறுவனங்கள் தயாராக உள்ளன.

சமீபத்திய செய்திகளில் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்யும் நிறுவனங்கள் குறித்த செய்தியைப் படித்திருப்பீர்கள். இத்தகைய நிறுவனங்களுக்கு முதலீடு குவிவது ஏன்? யார் இத்தகைய முதலீட்டை செய்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

இப்போதெல்லாம் வங்கி தவிர துணிகர முதலீட்டாளர்கள் என்ற ஒரு புதிய முதலீட்டாளர்கள் உருவாகியுள்ளனர். சிட்ஃபண்ட், வென்ச்சர் கேபிடல், ஈக்விடி என பலவகை முதலீடுகள் உள்ளன.

உங்கள் தொழிலுக்கு எத்தகைய முதலீடு கிடைக்கும். எங்கிருந்து கிடைக்கும் என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்.

aspireswaminathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x