Last Updated : 10 Mar, 2015 03:08 PM

 

Published : 10 Mar 2015 03:08 PM
Last Updated : 10 Mar 2015 03:08 PM

அந்தச் சிட்டுக்குருவியைப் போலிருப்பேன்

வண்ணமயமான பட்டாம்பூச்சியைக் கண்டதும் பாய்ந்து பிடித்து, சீண்டி விளையாடாமல், அது இயல்பாய் சிறகடித்துப் பறப்பதைப் பார்த்து ரசிப்பவரா நீங்கள்?

கடல் அலையில் புரண்டு விளையாடுவதைக் காட்டிலும் கடற்கரையில் ஆசுவாசமாக அமர்ந்து வானமும், கடலும் முத்தமிடும் புள்ளியை ரசித்துக் கொண்டிருப்பீர்களா?

உலகமே தூங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவில் விண்மீன்களை ரசித்தபடி வானம் பார்த்துப் படுத்துக் கிடப்பதுண்டா?

தொலைக்காட்சி சேனல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தவை டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபிக், அனிமல் பிளானெட் போன்ற இயற்கையை ஒளிபரப்பும் சேனல்களா?

செல்லப் பிராணிகள் என்றால் கொள்ளை பிரியமா?

தோட்டப் பராமரிப்பு மிகவும் பிடிக்குமா?

பரபரப்பான சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைக் காட்டிலும் காடு, மலை போன்ற இயற்கை சூழல் நிறைந்த அமைதியான இடத்துக்குச் செல்லத்தான் விரும்புவீர்களா? அதிலும் மலை ஏற்றம், பனிச் சறுக்கு, ஆழ் கடல் நீச்சல் என இயற்கையோடு ஒன்றிப்போய் சாகசமாகப் பயணிக்கப் பிடிக்குமா?

இவற்றில் பெரும்பாலான கேள்விகளுக்கு ‘ஆம்’ எனப் பதிலளித்திருந்தால் அனேகமாக நீங்கள் இயற்கை ரீதியான அறிவுத்திறன் உடையவர்தான்.

அதென்ன அனேகமாக என்கிறீர்கள், உறுதியாகச் சொல்ல முடியாதா? என்று கேட்கிறீர்களா? இயற்கை ரீதியான அறிவுத்திறன் ஒருவரிடம் இருப்பதற்கு இவை மேலோட்டமான அறிகுறிகள்தான்.

நுகர்வோர் அல்ல!

காட்சி ரீதியான அறிவுத்திறன், மொழி அறிவுத்திறன் கொண்ட ஒருவர்கூட இயற்கை எழிலை ரசிக்கும் சுபாவம் கொண்டிருக்கலாம். அதே போல இயற்கைச் சூழலில் சாகசங்கள் நிகழ்த்தும் விருப்பம் கொண்ட ஒருவர் உடல் ரீதியான அறிவுத்திறன் கொண்டவராகவும் இருக்கலாம். இயற்கையைப் பொழுதுபோக்காக ரசிப்பது வேறு. இயற்கை ரீதியான அறிவு கொண்டவராகச் செயல்படுவது வேறு.

இயற்கை ரீதியான அறிவு கொண்டவர்களால் செடி, மரம், பூச்சி, பூ, விலங்கு என உயிரினங்கள் ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி, அவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை நுட்பமாகக் கண்டறிய முடியும். கல், மணல், பூச்சி, புழு என மற்றவர்கள் தொட அருவருப்பு அடையும் விஷயங்களைக்கூடக் கைகளால் தொட்டு, எடுத்து, உணர்ந்து அவற்றோடு இயைந்து வாழ விரும்புவார்கள்.

விலங்கு காட்சி சாலை, பூங்கா போன்ற இயற்கையான புறச் சூழலில் இருந்தால் உற்சாகமாக உணர்வார்கள். ஆனால் புலியைச் சீண்டிப் புகைப்படம் எடுப்பது, போகிற போக்கில், பூ, இலைகளைக் கிள்ளி எறிவது என இயற்கையை நுகர்வோர்களாக இருக்க மாட்டார்கள். இயற்கையைப் பாதுகாக்கும் எண்ணம் மேலோங்கியவர்களாக இருப்பார்கள்.

சாதனையாளர்

இது போன்ற வர்ணனைகளுக்கு உயிர் கொடுத்தவர் 2004-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பினப் பெண்ணான வங்காரி மாத்தை. ஒரு சூழலியலாளருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலகை ஆச்சரியப்படுத்திய நிகழ்வாகும். கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தை பல எதிர்ப்புகளையும், கிண்டல்களையும் எதிர்கொண்டு நைரோபி பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றுப் பின்னர் அந்தத் துறைத் தலைவராகவும் மாறியவர்.

அவர் படித்த காலத்தில் கென்ய கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்கள் உயர்கல்வி பெறுவதே அபூர்வம். ஆனால் வங்காரி மாத்தை உயிரியல் படிப்பின் மீது கொண்ட அளவுகடந்த பற்றினால் விடா முயற்சியோடு பல தடைகளைத் தாண்டி மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண், நைரோபி பல்கலைக்கழகத்தில் ஒரு துறைக்கு முதன்முதலில் தலைமை வகித்த பெண் உள்ளிட்ட பெருமைகளை வென்றெடுத்தார்.

மீண்டும் மக்களோடு

கடும் பிரயத்தனம் செய்ததன் விளைவாக உயர்ந்த நிலையை அடைந்த பிறகு தன் லட்சியத்தை அடைந்துவிட்டதாக எண்ணிச் சவுகரியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் வங்காரி மாத்தை. ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா? மீண்டும் தன் மக்களைத் தேடிப் பயணித்தார். கென்யாவின் கிராமப்புறங்களுக்கு அவர் சென்றபோது சீரழிந்த சுற்றுச்சூழலும், மோசமான சமூகச் சூழலும், வறுமையும் பெண்களின் வாழ்வை அடி ஆழம்வரை பாதித்திருப்பது தெரியவந்தது.

இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் காடுகள் அழிக்கப்படுவதே எனக் கண்டறிந்தபோது திகைத்து நிற்கவில்லை வங்காரி. நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க 1977-ல் புவி தினத்தன்று மரக்கன்றுகளை நட்டு பசுமைப் பட்டை (கிரீன் பெல்ட்) என்ற இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.

சிறிய அளவில் தொடங்கப்பட்ட பசுமைப் பட்டை இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஆப்பிரிக்கப் பெண்களின் மாபெரும் இயக்கமாக மாறியது. கென்யாவில் தற்போது ஐந்தாயிரம் சிறு பண்ணைகள் இந்த அமைப்பின் வசம் உள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மேலும் 12 நாடுகளில் இந்த இயக்கம் பரவியுள்ளது. இப்படியாகக் கடந்த 35 ஆண்டுகளில் 14 கோடிக்கும் மேலான மரக்கன்றுகளை நட்டுப் பசுமையான மரக் குடைகளை உருவாக்கியுள்ளது.

சிட்டுக்குருவியைப் போல...

ஆரம்பத்தில் வங்காரி மாத்தையின் சூழலியல் செயல்பாடுகளைக் கண்டு அவரை ஊக்குவித்தவர்களைக் காட்டிலும் விமர்சித்தவர்கள்தான் அதிகம். அத்தகைய தருணங்களில் அவர் ஒரு கதை சொல்வார், “காட்டுத் தீ திகுதிகுவென எரிந்து கொண்டிருக்க, யானை, சிங்கம் உள்ளிட்ட பெரிய விலங்குகள் பயந்தோடிப் பதைபதைப்புடன் ஒரு ஓடையோரம் நின்று காடு எரிவதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு சிட்டுக்குருவியைத் தவிர. தன் சின்ன அலகால் தண்ணீரை அள்ளி வந்து தீ மீது ஊற்றிக் கொண்டிருந்தது அந்தச் சிட்டுக்குருவி. நீரை அதிகம் அள்ளிக் கொண்டு வரக் கூடிய வாய்ப்புள்ள யானை போன்ற விலங்குகள் திகைப்புற்று நின்றபடியே, அந்தச் சிட்டுக் குருவியைப் பார்த்துச் சொல்லின. ‘நீ என்ன செய்துவிட முடியும் என நினைக்கிறாய்? காட்டுத் தீ பெரியது, நீயோ சின்னஞ்சிறிய குருவி. உன் சிறகுகளோ சிறியன, உன் அலகுகளும் சிறியவை. உன்னால் சில துளி தண்ணீரையே கொண்டு வர முடியும்.

இவற்றை வைத்துக்கொண்டு நீயென்ன செய்துவிட முடியும்?’ எனத் தொடர்ந்து நம்பிக்கை இழக்கும் வகையில் அவை பேசின. சிட்டுக்குருவி நேரத்தை வீணாக்க விரும்பாது பறந்து கொண்டே ‘என்னால் என்ன செய்ய முடியுமோ, அதைச் சிறப்பாகச் செய்ய முயற்சிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நாம் அனைவரும் இதைத் தான் செய்ய வேண்டும்’ எனச் சொன்னது.

நாம் இந்தச் சிட்டுக் குருவியைப் போல் இருக்க வேண்டும். என்னைச் சின்னஞ்சிறியவளாக அற்பமானவளாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால் நிச்சயமாக அந்த விலங்குகளைப் போல இந்தப் பூமி அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நான் அந்தச் சிட்டுக்குருவியைப் போலிருப்பேன், என்னால் என்ன சிறப்பாகச் செய்ய முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்வேன்” என்பார் வங்காரி மாத்தை.

இயற்கை ரீதியான அறிவுத்திறனின் உச்ச நிலை இது எனலாம். சுருக்கமாகச் சொல்வதானால் ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என இயற்கை முழுவதுமே மனிதனின் தேவைக்காகத்தான் என உறிஞ்சித்தள்ளாமல், ‘நானும் இயற்கையின் ஒரு சிறு துளி’ என இயற்கையைப் போற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வாழ்பவரே உண்மையான இயற்கை ரீதியான அறிவுத்திறனாளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x