

ஒன்றின் நஞ்சு மற்றதின் மருந்து. நிக்கோடின் மனிதருக்குத் தீங்கு செய்யும் வேதிப்பொருள். அதைப்போன்ற வேதிப் பொருள்களை தாவரங்கள் சுரக்கும்போது அது வண்டு முதலிய பூச்சிகளுக்கு மருந்தாக செயல்படுவதைச் சமீபத்தில் டர்மவுத் கல்லூரியைச் சார்ந்த லேயப் ரிச்சர்ட்சன் (Leif Richardson) முதலியோர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
நோயாளி வண்டுகள்
வண்டு போன்ற பூச்சிகள், பலவகை தாவரங்கள் சூல் கொண்டு காய், பழம் உருவாக்கி இனப்பெருக்கம் செய்ய இன்றியமையாதவை. பூச்சிகள் தாம் ஒரு தாவரத்தின் மகரந்தத்தை எடுத்து வேறு ஒரு பூவில் சேர்த்துப் பூ சூல் கொள்ள உதவுகிறது.
குறிப்பாக வண்டு இனம் தான் மனிதன் உண்ணும் பற்பல காய்கறி முதலான தாவரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவி செய்பவை. வண்டு இனத்தின் எண்ணிக்கை குறையக் குறைய ஒரு குறிப்பிட்ட தாவரத்தில் ஏற்படும் காய்களின் எண்ணிக்கை குறைந்து போகிறது. உருவாகும் காயின் அளவும் சிறுத்துப் போகிறது என ஆய்வுகள் சுட்டுகின்றன.
காய்கறி மற்றும் பழம் தரும் பல செடிகள், கொடிகள் முதலியவற்றுக்கு மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் (Bumble) பம்புல் வண்டு எனும் வகை வண்டை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார் லேயப் ரிச்சர்ட்சன். இந்த வகை வண்டுகள் தாம் இங்கிலாந்தில் பரவலாகக் காணப்படுகின்றன.
இந்த வகை வண்டுகள் சுற்றுச்சூழல் பிரச்சினை காரணமாக நோய்வாய்பட்டு இங்கிலாந்தில் அருகி வருகின்றன எனக் கடந்த சில ஆண்டுகளாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து இருந்தனர். பூஞ்சை போன்ற ஒட்டுண்ணிகள் வண்டின் மீது படர்ந்து வண்டை நோய்வாய்ப்பட வைக்கிறது எனவும் ஆய்வுகள் கூறின.
வேதி ஆயுதங்கள்
இந்தப் பின்னணியில்தான் லேயப் ரிச்சர்ட்சனுக்கு ஒரு கேள்வி பிறந்தது. தன்னை நோக்கிப் படையெடுக்கும் பாக்டீரியா, பூஞ்சை, எறும்பு போன்ற பூச்சிகள் முதலியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நஞ்சான நிக்கோடின் போன்ற ஆல்க்கலாய்டு வேதிப்பொருள்களைத் தாவரம் சுரக்கிறது என ஏற்கனவே விஞ்ஞானிகள் அறிந்து இருந்தனர்.
இலையில் வந்து குடியேறித் தாவரத்துக்கு ஊறுவிளைவிக்கும் பூஞ்சை போன்ற உயிரினங்களைக் கொல்லவோ அல்லது அவற்றுக்கு நெருக்கடி ஏற்படுத்திக் கட்டுப்படுத்தவோதான் தாவரம் பல்வேறு வேதி ஆயுதங்களைத் தயாரிக்கிறது. ஆடு, மாடு மேயும் சில புதர்களில் முள் இருப்பதும் தாவரம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் அல்லவா?
தாவரத்தைத் தாக்கும் உயிரிகளுக்கு மட்டுமல்ல, தாவரம் தயாரிக்கும் சில ஆல்க்கலாய்டு வேதிப்பொருள்கள் மனிதன் உட்படப் பல விலங்குகளுக்கும் தீங்கானவை. புகையிலைச் செடியில் தயாராகும் நிக்கோட்டின் மனிதனுக்குத் தீங்கு. ஆனால் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தித் தாவரத்துக்கு உதவும் வண்டுகள் இதே வேதிப்பொருள்களை உண்டாலும் அவற்றுக்கு தீங்கு வருவது போலத் தெரியவில்லையே என்ற நிலையில்தான் லேயப் ரிச்சர்ட்சன் தனது ஆய்வைத் துவங்கினார்.
லேயப் ரிச்சர்ட்சன்
தாவரங்கள் இயல்பாக தன் இலைகள் மற்றும் பூக்களில் தயாரிக்கும் நிக்கோடின் போன்ற ஆல்க்கலாய்டு வேதிப்போருள்கள் அந்தப் பூவை நாடும் வண்டுகள் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற என வியந்தார் அவர். இதன் தொடர்ச்சியாக ஒரு சோதனை செய்தார் அவர்.
நஞ்சே மருந்து
இயல்பில் தாவரம் சுரக்கும் நிக்கோட்டின் போன்ற எட்டுச் சிறப்பான வேதிப்பொருள்களை அவர் தனது ஆய்வுக்குத் தேர்வு செய்து கொண்டார். தனது ஆய்வின் பகுதியாகப் பூச்சிகளின் வயிற்றில் வளரும் ஒட்டுண்ணிகளைச் சோதனை வண்டுகளில் செயற்கையாகப் புகுத்தினார். ஒட்டுண்ணிகள் தொற்றி நோய்வாய்ப்பட்ட வண்டுகளில் ஒரு பகுதிக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தாவர ஆல்க்கலாய்டு வேதிப்பொருளைச் செலுத்தினார். வேறு ஒரு பகுதி வண்டுகளுக்கு அந்த ஆல்க்கலாய்டு வேதிப்பொருளைத் தரவில்லை.
நிக்கோட்டின் போன்ற வேதிப்பொருள்கள் செலுத்தப்பட்ட வண்டுகளில் சுமார் 81 சதவீதம் நோய்க்கிருமி தாக்குதல் குறைந்து காணப்பட்டது. ஆனால் தாவர ஆல்க்கலாய்டு தரப்படாத வண்டுகளில் நோய் தீவிரம் கூடுதலாக இருந்தது. அதாவது இந்த வேதிப்பொருள் நமக்கு நஞ்சாக இருக்கலாம். ஆனால் வண்டுகளைப் பொறுத்தவரை மருந்து என்கிறார் லேயப் ரிச்சர்ட்சன். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக Proceedings of the Royal Society B. A என்ற ஆய்விதழில் சமீபத்தில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார் அவர்.
இயற்கையில் இன்று வண்டுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. நோய்க்கிருமிகள் தாக்கி வண்டுகள் அழிந்து வருகின்றன. எனவே காய்கறி தோட்டம், பழத் தோட்டம் போன்ற பகுதிகளில் வயல்களைச் சுற்றியும் புகையிலை போன்ற செடிகளை வளர்ப்பதன் மூலம் வண்டுக்குத் தேவையான மருந்தை இயற்கையாக அளிக்கலாம் எனவும் லேயப் ரிச்சர்ட்சன் ஆலோசனை தருகிறார். இவ்வாறு வண்டு இனத்தைப் பாதுகாத்துப் பயிர் தொழிலில் மேலும் அதிக விளைச்சல் பெறலாம் எனவும் இவர் ஆலோசனை கூறுகிறார்.
- கட்டுரையாளர் புது டெல்லியில் உள்ள விக்யான் பிரச்சார் நிறுவனத்தின் விஞ்ஞானி.
தொடர்புக்கு - tvv123@gmail.com