மனது இல்லை வயது: வயதான பெண்களும் படிக்கலாம்

மனது இல்லை வயது: வயதான பெண்களும் படிக்கலாம்
Updated on
2 min read

வயதான பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயமாக சம்பாதிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் பல சான்றிதழ் படிப்புகள் உள்ளன. ஆர்வத்தை மூலதனமாக கொண்டு, இவற்றைப் படித்தால் அவர்களது தனிமை துரத்தியடிக்கப்பட்டு, வருமானத்துக்கும் வழி கிடைக்கும்.

பெண்கள் அதிகம் விரும்பும் படிப்பு பியூட்டீஷியன் கோர்ஸ் (அழகுக் கலை). இதை இளம் வயது பெண்கள் மட்டும்தான் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வயதான பெண்களும் அழகுக் கலை நிபுணராக உலா வரமுடியும். பிளஸ் 2 படித்திருந்தால் போதும். படிப்புக் காலம் 6 மாதம் முதல் ஓராண்டு வரை. மெஹந்தி வைப்பது முதல் சிகை அலங்காரம் வரை ப்யூட்டீஷியன் கோர்ஸில் தனித்தனியாக வகுப்புகள் நடத்துகின்றனர்.

வீட்டில் இருந்தபடி திருமணப் பெண்களுக்கு அலங்காரம் செய்யலாம். அருகே உள்ள பெண்கள், சிறுமிகளுக்கு முக அழகு செய்து வருவாய் ஈட்டலாம். கொஞ்சம் வசதி இருந்தால் தனியாக பியூட்டி பார்லர் நடத்தலாம். வயதான பெண்களுக்கு ஏற்ற தொழில்.

அழகுக் கலைப் படிப்பில் ஆர்வம் இல்லாதவர்கள் ஓவியம் வரைதல், கிளாஸ் பெயின்ட், தஞ்சாவூர் ஆர்ட் உள்ளிட்ட பட்டயப் படிப்புகளை படிக்கலாம். குறைந்தகால சான்றிதழ் படிப்புகள் படிப்பதன்மூலம் வீட்டில் இருந்தபடி இயற்கை ஓவியங்கள், தத்ரூபமான ஓவியங்கள் வரைதல், கிளாஸ் பெயின்ட் மூலம் அலங்காரப் பொருட்கள் தயாரித்தல் என்று வருமானம் ஈட்டலாம். வித்தியாசமான ஓவியங்களுக்கு மக்களிடம் எப்போதும் வரவேற்பு உள்ளதால், இதுபோன்ற தொழில் சார்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

தோட்டக்கலை சார்ந்த படிப்புகளிலும் பெண்கள் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். வீடுகளில் மாடித் தோட்டம் அமைப்பது சம்பந்தமாக படிப்புகள் உள்ளன. தோட்டக்கலைத் துறை மூலம் இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. மாடித் தோட்டம் அமைப்பதன்மூலம் நம் வீட்டுக்குத் தேவையான காய்கறி, பழங்களை நாமே பயிரிட்டு, உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம். நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் மாடித் தோட்டம் அமைத்துக் கொடுப்பதன்மூலம் கணிசமான வருவாய் ஈட்டமுடியும். நர்சரி கார்டன், நர்சரி விற்பனை மையம் ஆகியவையும் அமைக்கலாம்.

திருமணம், வரவேற்பு, பிறந்தநாள் விழா, அலுவலக நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகளில் பிரதானமாக இருப்பது பொக்கே. பல வண்ண மலர்களைக் கொண்டு கண்கவர் பொக்கே அமைப்பது சம்பந்தமான சான்றிதழ் வகுப்புகள் உள்ளன. இதில் சேர்ந்து பொக்கே செய்யக் கற்றுக்கொண்டால், வீட்டில் இருந்தபடியே தொலைபேசி மூலமாக ஆர்டர் எடுத்து, கைநிறைய சம்பாதிக்கலாம்.

ஃபேஷன் டெக்னாலஜி கோர்ஸ் மூலம் ஆடை அலங்கார நிபுணராக முடியும். பேர்ல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டிசைன், கோத்தாரி அகாடமி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இதை கற்றுக்கொடுக்கின்றனர். ஆடையின் தேவை எப்போதும் இருந்துகொண்டே இருப்பதால், இத்தொழிலுக்கு மிகுந்த வரவேற்பு உண்டு. வித்தியாசமான ஆடை வடிவங்களை உருவாக்கி, விற்பனை செய்வதன்மூலம் தனிப்பெருமையுடன், சுய தொழிலில் முத்திரை பதிக்க முடியும்.

வீடுகளில் இருந்தபடி ‘ஹோம் மேட்’ சாக்லேட் தயாரித்து விற்பதும் வருமானம் ஈட்டுவதற்கேற்ற தொழில் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in