அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்
Updated on
1 min read

விரியும் வளையம்

சனிக்கிரகத்துக்கு வளையம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் நெப்டியூன்,யுரேனஸ், ஜுபிடர் ஆகிய கிரகங்களுக்கும் வளையம் இருக்கிறது. அவற்றில் தூசுகளும் வாயுக்களும் உள்ளன. இந்த நான்கு கிரகங்களுக்குத்தான் வளையம் இருக்கும் என நினைத்த விஞ்ஞானிகளின் கணிப்பு பொய்யாகி உள்ளது.

சிரான் மற்றும் சாரிக்லோ என்ற குறுங்கோள்களுக்கும் வளையங்கள் இருப்பதை அண்மையில் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடலுக்குள் தங்கம்

சீன விஞ்ஞானிகள் இந்தியப் பெருங்கடலிலும் பசிபிக் பெருங்கடலிலும் நவீன நீர்மூழ்கியை ஏறத்தாழ 7 கிலோமீட்டர் ஆழத்துக்கு அனுப்பித் தங்கம், வெள்ளி உள்ளிட்ட அரிய கனிமவளங்கள் காணப்படும் இடங்களையும் எரிமலைகளின் இருப்பிடங்களையும் ஆய்வு செய்து அறிந்துள்ளனர். ஆழ்கடலை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அமைப்பிடம் சில ஆண்டுகளுக்கு அவர்கள் இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனர்.

புதன்கிரகத்தில் ஐஸ்

புதன்கிரகம் சூரியனுக்கு அருகில் உள்ளது. பூமியை விட அதிக வெப்பம் அங்கே உள்ளது. ஆனால் அதன் துருவப் பகுதிகளில் சூரிய வெப்பம் பாயாததால் பனிக்கட்டிகள் உருவாகி இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்ணாடியே பேட்டரியாக

கண்ணாடியைப்போன்ற ஒரு சூரியச் சக்தியைச் சேமிக்கும் மின்கலத்தை அமெரிக்காவின் மிசிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் பரவலானால் கண்ணாடிகளே சோலார் செல்களாகச் செயல்படும். ஸ்மார்ட்போன்களின் திரையே கூடப் பேட்டரியாக இரட்டை வேலை செய்யலாம்.

தலை தெறிக்க ஓடும் நட்சத்திரம்

நமது பால்வெளி மண்டலம் கேலக்ஸியை விட்டு வினாடிக்கு 1200 கி.மீ வேகத்தில் பறந்து தலைதெறிக்கும் வேகத்தில் தப்பித்து ஓடுகிற US708 எனும் பெயருள்ள நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வேறு எந்த நட்சத்திரமும் போகாத வேகத்தில் நமது கேலக்ஸியை விட்டு விலகி ஓடுகிற இதன் மர்மத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in