Published : 26 May 2014 02:35 PM
Last Updated : 26 May 2014 02:35 PM

உணவுப் பொருளைப் பதப்படுத்த பி.டெக். படிப்பு

இந்தியாவில் லட்சக்கணக்கான ஏழைகள் பசியோடு படுக்கைக்குச் செல்கிறார்கள். அதேநேரத்தில், நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.44 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள் யாருக்கும் பயன்படாமல் வீணாவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உற்பத்தி செய்த உணவுப் பொருட்களைப் பாதுகாக்க, அவற்றைப் பதப்படுத்துதல் அவசியம். அதற்கான தொழில்நுட்பம் போதிய அளவுக்கு நம்மிடம் இல்லை.

இத்தகைய சூழலில் உணவுப் பொருள் பதப்படுத்தலில் பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் தஞ்சாவூரில் உள்ள இந்தியப் பயிர் பதப்படுத்தல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Indian Institute of Crop Processing Technology-IICPT) உணவு பதப்படுத்தல் தொடர்பான பி.டெக்., எம்டெக். பி.எச்டி. படிப்புகளை வழங்கி வருகிறது. மத்திய அரசுக்குச் சொந்தமான இந்த உயர்கல்வி நிறுவனம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய உணவுப் பொருள் பதப்படுத்தல் தொழில்கள் அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.

பி.டெக். புட் புராசசிங் இன்ஜினீயரிங் என்ற பெயரில் வழங்கப்படும் இளநிலை படிப்பில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன. பிளஸ்-2 முடித்த மாணவர்கள் இதில் சேரலாம். ஐ.ஐ.டி. ஜெ.இ.இ. மெயின் தேர்வு மதிப்பெண் (60 சதவீதம்), பிளஸ்-2 மதிப்பெண் (40 சதவீதம்) அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவ-மாணவிகள் சேர்க்கப் படுகிறார்கள். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி. வகுப்பினர் எனில் 40 சதவீத மதிப்பெண் போதும்.

இது மத்திய அரசுக் கல்வி நிறுவனம் என்பதால் ஓபிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினர் ஆகியோருக்கு அரசு விதிமுறைகளின்படி உரிய இட ஒதுக்கீடு உண்டு. பல்வேறு வகையான கல்வி உதவித்தொகைகளும், பெல்லோஷிப்புகளும் பெற வாய்ப்புகள் உள்ளன. எஸ்சி, எஸ்டி. மாணவர்களுக்கு டியூஷன் கட்டணம் கிடையாது. இந்த 4 ஆண்டுப் படிப்பில், தானியங்கள், பருப்புகள், பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பாதுகாத்துப் பதப்படுத்துவது, சேமிப்பது, கண்ணைக்கவரும் வகையில் பேக்கிங் செய்வது, டிசைனிங், மதிப்புகூட்டுப் பொருள்களாக மேம்படுத்துவது, உணவுப் பாதுகாப்பு, தரச்சோதனை என உணவுப் பொருள் பதப்படுத்தல் தொழில்நுட்பம் தொடர்பான பாடங்கள் அனைத்தும் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன.

இன்றைய தினம், உணவு பதப்படுத்தல் துறையானது மிக வேகமாக வளர்ந்துவரும் துறையாக உருவெடுத்து வருகிறது. மத்திய-மாநில அரசுகள் ஏராளமான சலுகைகள், மானியங்கள் அளித்து இத்துறையைப் பெரிதும் ஊக்குவித்துவருகின்றன. தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அரசின் மானிய உதவித் திட்டங்களைப் பயன்படுத்திச் சொந்தமாகத் தொழில்கள் தொடங்கவும் வாய்ப்புகள் ஏராளம். பி.டெக். முடிக்கும் மாணவர்கள் விரும்பினால், தொடர்ந்து இங்கேயே எம்.டெக். பி.எச்டி. எனப் படிப்பைத் தொடரலாம்.

தற்போது இந்தியப் பயிர் பதப்படுத்தல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 2014-2015-ம் கல்வி ஆண்டு பி.டெக். மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. முதலில் ஆன்லைனில் (http://admissions.iicpt.edu.in/) விவரங்களைப் பூர்த்திசெய்து அந்த ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட்-அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 (எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எனில் ரூ.300) செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ‘The Director, IICPT, Thanjavur’ என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாகக் கட்ட வேண்டும். விண்ணப்பத்தை உரிய விண்ணப்பக் கட்டண டி.டி.யுடன் ஜூன் மாதம் 13-ம் தேதிக்குள் தஞ்சாவூருக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.iicpt.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x