Last Updated : 09 Mar, 2015 11:55 AM

 

Published : 09 Mar 2015 11:55 AM
Last Updated : 09 Mar 2015 11:55 AM

பொதுக் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு?

கடந்த வாரம் ஆயுள் காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்களைவிட எல்ஐசி அதிக வியாபாரத்தை செய்வதாகவும், அதன் செயல்பாடு சிறப்பாக உள்ளதாகவும் பார்த்தோம். இந்தியாவில் ஆயுள் காப்பீட்டுத் துறை வளர்ந்த அளவிற்கு பொதுக் காப்பீடு வளரவில்லை என்பதையும் பார்த்தோம். இந்த வாரம் பொது காப்பீட்டுத் துறை வளர்ச்சி பற்றி பார்ப்போம்.

பொதுக் காப்பீட்டுத் துறை வளர்ச்சி

இத்துறையில் நான்கு பொதுத்துறை நிறுவனங்களும் 17 தனியார் துறை நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் 4 பொதுத்துறை நிறுவனங்களும் 9 தனியார் நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டும் நிறுவனங்களாக உள்ளன.

பிரீமியம் தொகை அடிப்படையில் பார்க்கும்போது நான்கு பொதுத் துறை நிறுவனங்கள் 55 சதவீதமும் (ரூ.38,599.71 கோடி), தனியார் நிறுவனங்கள் 45 சதவீதமும் (ரூ.32,010.30 கோடி) பெறுகின்றன.

இதில் வாகனக் காப்பீடு முதல் நிலையிலும், அடுத்ததாக மருத்துவக் காப்பீடு இருப்பதாகத் தெரிகிறது. (சந்தையில் தனியாக மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் உள்ளன, அவை இதில் சேர்க்கப்படவில்லை). இதில் புதிய காப்பீடு பாலிசிகளை விற்பதில் தனியார் நிறுவனங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.

2013-14-ல் பொதுத் துறை நிறுவனங்களின் புதிய பாலிசி விற்பனை 13% குறைந்து ரூ.6 கோடி எனவும், தனியார் நிறுவனங்களின் விற்பனை 12% அதிகரித்து ரூ.4.23 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது.

காப்பீடு கமிஷன் செலவுகள் பொதுத் துறை நிறுவனங்களுக்கு 6.5% மாகவும் தனியார் நிறுவனங்களுக்கு 5.5% ஆகவும் உள்ளது. மற்ற செலவுகள் பொதுத் துறை நிறுவனங்களுக்கு 23% எனவும், தனியார் நிறுவனங்களுக்கு 20% எனவும் உள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்களைவிட பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டஈடு கொடுக்கும் விகிதமும் அதிகம்.

இருந்த போதிலும் தனியார் துறையின் வளர்ச்சி இந்த பொதுக் காப்பீட்டுத் துறையில் வேகமாகவே உள்ளது. இவற்றிற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். பிரீமியம் தொகை குறைவாக அல்லது நஷ்ட ஈட்டை துரிதமாக செய்து முடிப்பது போன்ற காரணங்கள் இருக்கக்கூடும். இவற்றைப் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு

ஏற்கெனவே காப்பீட்டுத் துறையில் 26% வரை அந்நிய முதலீட்டை அமல்படுத்தி இருக்கிறோம். இதனால் ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டுத் துறைகளில் இந்திய மற்றும் அந்நிய முதலீடுகள் அதிகமாக உள்ளன. மார்ச் 2014, முடிய இந்த காப்பீட்டுத் துறையில் உள்ள தனியார் முதலீடுகளை கீழே உள்ள அட்டவணையில் கொடுத்துள்ளோம்.

காப்பீட்டுத் துறையில் 26% அந்நிய முதலீடு அனுமதித்தாலும், இத்துறைகளில் அந்நிய முதலீடு அதிகபட்சமான 26 சதவீதத்தை அடையவில்லை என்பதை இந்த அட்டவணை கூறுகிறது. பொதுக் காப்பீட்டுத் துறையில் 22% வரையும், ஆயுள் காப்பீட்டுத் துறையில் 23 சதவீதம் வரையும் அந்நிய முதலீடுகள் வந்துள்ளன. ஒட்டுமொத்தமாக காப்பீட்டுத் துறையில் 23% வரைதான் அந்நிய முதலீடு வந்துள்ளது. இந்தச் சூழலில் தான் 49% அந்நிய முதலீட்டை இத்துறையில் அனுமதித்துள்ளோம்.

அந்நிய முதலீடு வருமா?

டிசம்பர் 26 அன்று நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டம் எதிர்பார்க்கப்பட்ட அந்நிய முதலீட்டை எடுத்துவருமா என்ற கேள்வி உள்ளது. பொதுவாக பொருளாதார கொள்கைகள் நிலையாக இருத்தல் வேண்டும். அதனால் பொருளாதாரம் சார்ந்த சட்டங்களை அவசரச் சட்டமாக நிறைவேற்றாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவசரச் சட்டம் பொருளாதார கொள்கைக்கு நிலைத் தன்மையைக் கொடுக்காது.

ஒரு அவசர சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு ஆறு மாதத்துக்குள் நாடாளுமன்றத்தால் முறையாக நிறைவேற்றப்படவேண்டும். அதாவது, இந்த அந்நிய முதலீடு சட்டம் வருகின்ற ஜூன் மாதத்துக்குள் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்படும் என்ற உறுதியை மத்திய அரசு கொடுக்க முடியாததால் அந்நிய முதலீடு ஜூன் மாதம் வரை இந்தியாவிற்கு வராது.

அந்நிய முதலீட்டில் ஏற்கெனவே உள்ள உச்ச நிலையை அடையவில்லை என்பதால், மேலும் இந்த உச்சவரம்பை உயர்த்துவது சரியா? ஒரு சில தனியார் நிறுவனங்களில் இந்த உச்சவரம்பு அளவுக்கு அந்நிய முதலீடுகள் உள்ளன. ஆகவே அந்த நிறுவனங்களில் கூடுதல் அந்நிய முதலீடுகள் வர வாய்ப்பு உள்ளது என்று நம்பலாம்.

நமக்கு எழும் அடுத்த கேள்வி, எவ்வளவு அந்நிய முதலீடு வரும்? ரூ.25,௦௦௦ கோடி முதல் ரூ.3௦,௦௦௦ கோடிவரை வரும் என்று காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத் தலைவர் கூறுகிறார்.

தற்போது காப்பீட்டுத் துறையின் மொத்த தனியார் முதலீடு ரூ.33,848.68 கோடி இதில் உள்நாட்டு தனியார் முதலீடு ரூ.26,030.49 கோடி. எனவே, இதற்கு இணையாக 49% அந்நிய முதலீடு என்பது ரூ.25,77௦ கோடி. இதில் ஏற்கெனவே ரூ.7818.23 கோடி அந்நிய முதலீடு உள்ளது. எனவே மீதமுள்ள ரூ.18,000 கோடி அந்நிய முதலீடு அதிகபட்சமாக வரலாம்.

இதற்கும் அதிகமாக அந்நிய முதலீடு வந்தால் அதற்கு இணையாக உள்நாட்டு முதலீடும் வரவேண்டும். அவ்வளவு கூடுதல் தொகை உள்நாட்டு முதலீடு இத்துறை நோக்கி வருவதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவ்வாறு வருவதென்றால் இப்போதே வரலாம், ஆனால் வரவில்லை.

இப்படி இக்கட்டான சூழலில் உள்ள காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு வருவது கால தாமதமாகலாம்.

பொதுவாக பொருளாதார கொள்கைகள் நிலையாக இருத்தல் வேண்டும். அதனால் பொருளாதாரம் சார்ந்த சட்டங்களை அவசரச் சட்டமாக நிறைவேற்றாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவசர சட்டம் பொருளாதார கொள்கைக்கு நிலைத் தன்மையைக் கொடுக்காது.

இராம.சீனுவாசன் seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x