Published : 17 Mar 2015 11:21 am

Updated : 17 Mar 2015 11:21 am

 

Published : 17 Mar 2015 11:21 AM
Last Updated : 17 Mar 2015 11:21 AM

வெட்டிவேரு வாசம் 27- வலிக்கவே வலிக்காது!

27

கும்பகோணத்தில் இருந்து சென்னை. சேப்பாக்கத்தில் வாடகை வீடு. எருமைக் கழிவுகள், குளோரின் வாசனையுடன் குடிநீர், பெரிய பள்ளிக்கூடம் என்று ‘மதராஸ்' பழக்கமாகிக் கொண்டிருந்தது. ஒருநாள் பக்கத்து வீட்டு தயாளன், “இன்னிக்கு மாரடிப் பண்டிகை ஊர்வலம்” என்றான்.

“அதையெல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டாம்” என்று அம்மா எச்சரித்தாள். அப்படிச் சொன்னதாலேயே திருட்டுத்தனமாகத் தயாரானேன்.

பிற்பகலில் சாலையின் இரு பக்கத் திலும் மக்கள் கூடினார்கள். ஒரு திசை யையே பார்த்தபடி அமானுஷ்ய மவுனத் துடன் நின்றார்கள். ரகசியமாக நானும்!

3 மணி இருக்கும். தூரத்தில் கூச்சல். மக்களிடம் பரபரப்பு. குடியரசு தின அணிவகுப்பு போல் ஓர் ஊர்வலம் நெருங்கியது. அனைவரும் இஸ்லாமி யர்கள். இடுப்பில் கருப்புப் பைஜாமா அணிந்திருந்தார்கள். சட்டையில்லை. வெற்று உடம்புடன் செக்கச் செவேலென இருந்தார்கள்.

அடிவயிற்றில் இருந்து குரலெடுத்து நீளமான, மந்திரம் போன்ற வார்த்தை களை உச்சரித்தபடி நடந்தார்கள். அதுமட்டுமல்ல...

உள்ளங்கைகளால் மாறி, மாறி வெற்று மார்புகளில் ’பளார், பளார்’ என்று அறைந்து கொண்டார்கள். மார்புகள் கன்றிச் சிவந்திருந் தன. சிலரது மார்புகளில் தோல் பிய்ந்து ரத்தக்களரியாக உள்சதை தெரிந்தது.

பின்னால் வந்த வேறொரு குழுவினர் கரங்களில், சங்கிலிகள். அந்த சங்கிலியில் பிணைக்கப்பட்ட எஃகுத் தகடுகளாலான கத்தி, வேல் போன்ற கூர்மையான ஆயுதங்கள். அந்த ஆயுதக் கொத்தை வீசி வீசி முதுகில் அடித்துக் கொண்டே நடந்தார்கள்.

சதைகள் பிய்ந்திருந்தன. ரத்தக்களரி. ரத்தம் கோடாக வழிந்து, முதுகுத்தண்டு வழியாக இறங்கியது.

என் தலை சுற்றியது. கால்கள் துவண்டன. கண்கள் இருண்டன. ரத்தத் துளி ஒன்று தெறித்து என் மூக்கின் நுனியை தொட்டது. பச்சை ரத்த வாடை! அப்படியே பின் வாங்கி ஒரு திண்ணையில் தொய்ந்து அமர்ந்தேன். உடம்பெல்லாம் என்னவோ செய்தது.

ஊர்வலத்தின் இறுதியில் டயர் சக்கர மாட்டு வண்டியில் தண்ணீர்ப் பீப்பாய்கள். அவற்றிலிருந்து குடிநீரை மொண்டு மொண்டு விநியோகித்தார்கள். அறைந்து முடித்திருந்தவர்கள் கருப்புச் சட்டை அணிந்து தண்ணீர் குடித்தார்கள். சட்டை மார்பிலும், முதுகிலும் ரத்தத்தில் ஒட்டியிருந்தது.

திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் தொடங்கிய ஊர்வலம் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அக்பர் சாஹிப் தெரு மசூதியில் முடிந்தது.

அதோடு நிற்கவில்லை.

மாரடிப் பண்டிகைக்கு மூன்றாம் நாள் சேப்பாக்கத்தின் டேரா பஞ்சா பகுதியில் ஒரு மைதானத்தில் 30 அடி விட்டத்துக்கு 4 அடி ஆழத்துக்கு வட்டமாகக் குழி வெட்டினார்கள். தோண்டிய மண்ணை விளிம்பில் கொட்டி மேடாக்கினார்கள். குழியில் விறகுகள் அடுக்கி நெருப்பு மூட்டப்பட்டது. சிறிது நேரத்தில் தணல் துண்டங்கள் தக, தகவென ஒளிர்ந்தன. புருவ முடி பொசுங்கும் அளவுக்கு அனல் அடித்தது.

நெருப்புக் குழியில் இஸ்லாமிய அன்பர்கள் ஒவ்வொருவராக இறங்கி தணல் மேல் 30 அடி ஓடிக் கடந்து கரையேறினார்கள். எத்தனை முறை தீ மிதித்தார்களோ தெரியவில்லை. எதிரெதிர் திசைகளில் இருந்து இறங்கி தணல் மேல் ஓடி, ஓடிக் கடந்துகொண்டே இருந்தார்கள்.

ஷெனாய்கள் முழங்க, டமாரங்கள் தட தடக்க… அந்தத் தீ மிதி விழா ஒவ்வொருவரின் இதயத் துடிப்பையும் எகிற வைத்தபடி நிகழ்ந்தது.

“இவர்களுக்கு எல்லாம் வலிக்காதா? நெருப்பு சுடாதா?” என்று அடக்க முடியாமல் தயாளனைக் கேட்டேன்.

பக்கத்தில் வட்டத் தொப்பி அணிந் திருந்த ஒரு வயோதிகர்.

“தம்பி, யார் முகத்திலாவது வேதனை இருந்ததா?” என்று கேட்டார்.

ஆவேசமும் வைராக்கியமும்தான் தென்பட்டன. வலியின் சுவடு? ம்ஹூம்… இல்லவே இல்லை!

“முகம்மது நபியின் பேரன் ஹூசைன், மனைவி, மக்கள், உறவினர்கள், ஆறு மாத கைக் குழந்தை என்று 72 பேர் குஃபா நகரத்துக்கு, பாலைவனத்தில் ஒட்டகங்களில் பயணம் செய்தார்கள். கர்பாலா என்ற இடத்தில் 30 ஆயிரம் ஆட் கள் கொண்ட படை வந்து சூழ்ந்தது. படைத் தளபதி, அவர்களை தங்கள் மன்னனுக்கு அடங்கி நடந்துகொள்ள வற்புறுத்தினான். ஹூசைன் மறுத்தார்.

‘அடிமை வாழ்க்கையைக் காட்டிலும் தன்மானத்துடன் இறப்பதே மேல்' என்றார். 10 நாட்கள் உணவு இல்லை. அருகில் இருந்த நீர் நிலைக்குச் சென்று தண்ணீர் குடிக்கக்கூட அனுமதி இல்லை. 10-வது நாளன்று எதிரிப் படை முதல் அம்பை எய்தது. ஹூசைனும் அவரது ஆட்களும் வீரமாகப் போரிட்டார்கள்.

ஆனால், வாட்களால் வெட்டப்பட்டும், கத்திகளால் குத்தப்பட்டும், அம்புகளால் துளைக்கப்பட்டும் படுகொலை செய்யப் பட்டார்கள். தங்களின் அழைப்புக்கு இணங்கி வந்தவருக்கு இந்த கதி நேர்ந்ததே என்று ஷியா முஸ்லிம்கள் ‘மொஹர்ரம்’ மாதத்தின் முதல் 10 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.

ஹூசைன் அனுபவித்த கொடுமைகளை அவர்களும் விரும்பி ஏற்கிறார்கள். அப்படியொரு வைராக்கியம் இருந்தால், உடல் சித்ரவதைகளை அனுபவித்தா லும், வலியின் வேதனை இருக்காது…” என்றார் அந்த முதியவர்.

உண்மை. அம்மன் கோயில் தீமிதி, அலகு குத்திக்கொள்ளும் பிரார்த் தனை இவற்றுக்குப் பின்னாலும், இப்படியொரு வைராக்கியத்தின் வீரியம் இருப்பதை உணர்ந்தோம்.

‘கோ’ திரைப்படம். வசந்தன் (அஜ்மல்) குப்பத்தில் எரியும் குடிசைக் குள் பாய்வான். நெருப்பு சூழ்ந்திருக்கும் குழந்தையைத் தூளியில் இருந்து அள்ளி வந்து, அதன் தாயிடம் கொடுப்பான். அவள் நெகிழ்ந்து, அழுதபடி கையெடுத் துக் கும்பிடுவாள். “நீ கடவுள்” என்பாள். குப்பத்து மக்கள் வசந்தனையும், அவன் நண்பர்களையும் சூழ்ந்துகொள்வார்கள். கொண்டாடுவார்கள்.

குழந்தையைக் காப்பாற்றுவதற்காக, பொசுக்கும் நெருப்பில் பாய்ந்தது போல், பிற்பாடு, வசந்தன் உருட்டுக்கட்டை யால் தன்னைத் தானே அடித்துக் கொள்வான்.

மண்டை பிளந்து ரத்தம் கொட்டும். அரசியல்வாதிகள் மீது பழி விழும். தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற வைராக்கியம் அவனுடைய வலிகளை மறக்கடித்திருக்கும்.

- வாசம் வீசும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com


வெட்டிவேரு வாசம்செவ்வாய் சினிமாதொடர்சுபாஅனுபவங்கள்திரைக்கதை அனுபவம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author