Last Updated : 03 Mar, 2015 02:01 PM

 

Published : 03 Mar 2015 02:01 PM
Last Updated : 03 Mar 2015 02:01 PM

’அறிவைத் தேடி இந்தியா வந்தேன்

நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்த சீன யாத்ரீகர் சுவான் ஸாங்கை, அஸ்ஸாம் மன்னர் தன் நாட்டுக்கு அழைத்தார். பிறகு அஸ்ஸாம் மன்னருடன் சேர்ந்து கனோஜை (பழைய உத்தரபிரதேசம்) தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர் ஹர்ஷரை சுவான் ஸாங் சந்தித்தார். அப்போது கனோஜில் நடக்க இருந்த புகழ்பெற்ற பவுத்த மாநாட்டுக்கு வருமாறு சுவான் ஸாங்கை, ஹர்ஷர் அழைத்தார்.

இந்த மாநாட்டில் தங்கத்தால் ஆன புத்தரின் சிலை மிகப் பெரிய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. முதலில் ஹர்ஷர் அந்தச் சிலையை வணங்கினார். பிறகு அமைச்சர்கள், அதிகாரிகள், சபையில் கூடியிருந்தவர்கள் வணங்கினார்கள். பவுத்தத் துறவிகளுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. மாநாட்டுக்குச் சுவான் ஸாங் தலைமை வகித்தார்.

விவாத வெற்றி

பிறகு நிகழ்ந்த ஒரு விவாதத்தில் வேற்று மதத்தைச் சேர்ந்த அறிஞர் குழுவைவிட சுவான் ஸாங் சிறப்பாகத் தனது கருத்தை முன்வைத்தார். இதற்கு, "சூரியனுக்கு முன் மின்மினிப் பூச்சியின் வெளிச்சம் மறைந்து போகும். அதேபோலத்தான் சுவான் ஸாங்கின் வாதமும் இருந்தது" என்று ஹர்ஷர் அவரைப் பாராட்டினார். பிறகு சுவான் ஸாங்கை தன்னுடன் யானையில் ஏற்றிச் சென்று பவனி வந்து பெருமைப்படுத்தினார் அரசர் ஹர்ஷர்.

இந்த மாநாட்டுக்குப் பிறகு சுவான் ஸாங் நாடு திரும்பத் தயார் ஆனார். ஆனால், அந்த நேரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பவுத்தம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க பிரயாகைக்கு வருமாறு ஹர்ஷர் அழைத்தார்.

தங்கம் வேண்டாம்

அது ஒரு பெரும் நிகழ்ச்சி. லட்சக்கணக்கான மக்கள் மன்னரிடம் தானம் பெறுவதற்காகப் பிரயாகையில் கூடியிருந்தனர். தங்கம், வெள்ளி, ஆடைகள் சேகரிக்கப்பட்டிருந்தன.

முதலில் மத வழிபாடு தொடங்கியது. தங்கப் புத்தச் சிலையும், அடுத்த நாள் சூரியனின் சிலையும், அடுத்த நாள் சிவனின் சிலையும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அடுத்து 75 நாட்களுக்குத் தானம் வழங்கப்பட்டது.

சுவான் ஸாங், தனக்கு வழங்கப்பட்ட ஆயிரம் தங்க நாணயங்களைப் பெற மறுத்துவிட்டார். “அறிவைத் தேடியே நான் இந்தியா வந்தேன். தங்கம் எனக்கு வேண்டாம்” என்று சுவான் ஸாங் மறுத்தார்.

தாயகம் திரும்பினார்

மாநாடு முடிந்தவுடன் பவுத்த மதம் தொடர்பான பல பொருட்களுடன் சுவான் ஸாங் இந்தியாவை விட்டுப் புறப்பட்டார்.

இரண்டு தங்கப் புத்தச் சிலைகள், ஒரு வெள்ளி புத்தர் சிலை, ஒரு சந்தனப் புத்தர் சிலை, 150 சின்னங்கள், இதற்கெல்லாம் மேலாக 657 நூல்களை அவர் சேகரித்திருந்தார். இவற்றைச் சுமந்து செல்ல அவருக்கு 22 குதிரைகள் தேவைப்பட்டன.

இந்த நூல்கள் அனைத்தையும் சீனப் புத்தத் துறவிகள், இந்திய அறிஞர்கள் இருவரின் உதவியுடன் வடமொழியில் இருந்து சீனத்தில் மொழிபெயர்ப்பதில் தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் அவர் செலவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x