Last Updated : 12 Apr, 2014 02:41 PM

 

Published : 12 Apr 2014 02:41 PM
Last Updated : 12 Apr 2014 02:41 PM

லீஸ்... வாடகை... எது நல்லது

சொந்த வீட்டில் குடியிருப்பவர் களுக்கு இருக்கும் பிரச்சினைகளை விட, வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்குப் பிரச்சினைகள் அதிகம் என்பதில் இருவேறு கருத்து இல்லை. சம்பளம் உயருகிறதோ இல்லையோ, ஆண்டுதோறும் வீட்டின் வாடகை மட்டும் கண்டிப்பாக உயர்ந்துவிடும். இதற்கு வீட்டின் உரிமையாளரைக் குறை சொல்வதில் பலன் இல்லை. ஏனென்றால், வீடு அமைந்திருக்கும் பகுதி, வீட்டில் இருக்கும் வசதிகள், போக்குவரத்து சாதகங்கள் ஆகியவைதான் வீட்டின் வாடகையை நிர்ணயிக்கும் காரணிகளாக அமைகின்றன. சென்னை போன்ற பெரு நகரங்களில், அலுவலகத்திற்கு அருகில் வீடு கிடைப்பது பெரும்பாலும், சிலருக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாக இருக்கிறது. ஆனால், இதற்காக அவர்கள் கொடுக்கும் வாடகை மிக அதிகமாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, சொந்தமாக வீடு வாங்க முடியாதவர்களுக்கு, வாடகை வீட்டில் இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் கணிசமான தொகையை அவர்கள் வாடகைக்காகச் செலவிடுகின்றனர். இந்த விஷயத்தை வேறு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால், இதில் உள்ள சாதகமான விஷயம் நமக்குப் புலப்படும். அதுதான் லீஸ். வீட்டை போக்கியம் அல்லது ஒத்திக்கு எடுப்பது.

புறநகர்ப் பகுதிகளில் வாடகைக்கு இருந்து கொண்டு நகர்ப் பகுதிகளுக்கு அலுவலகம் செல்பவர்களுக்கு லீஸ் வீடு கிடைப்பதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது. நகர்ப் பகுதிகளைவிடப் புறநகர் பகுதிகளில் ஏராளமான வீடுகள் லீசுக்குக் கிடைக்கின்றன. ஒருமுறை, குறிப்பிட்ட தொகையை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்து விட்டு, அதற்கான ஒப்பந்தத்தைப் போட்டவுடன், அந்த வீடு நமக்குச் சொந்த வீடு போன்றே மாறிவிடுகிறது என்பது சாதகமான விஷயம். மாதாமாதம் ஒரு கணிசமான தொகையை வாடகையாகக் கொடுப்பதில் இருந்து விடுதலையும் கிடைத்துவிடும்.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. வீட்டின் வசதி வாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்வதுடன், அந்த வீட்டில் நாம் எவ்வளவு காலம் இருக்க முடியும் என்பதையும் ஆராய்ந்த பின்னரே, அந்த வீட்டை லீசுக்கு எடுக்க வேண்டும். பொதுவாக, 11 மாதங்கள் என்ற அளவில் தான் லீஸ் ஒப்பந்தம் போடப்படும். எனவே, 11 மாதங்கள் முடிவடைந்த பின்னர், இரு தரப்பினரும் விரும்பினால், ஒப்பந்தத்தை மேலும் 11 மாதத்திற்கு நீட்டித்துக்கொள்ளலாம். சில வீட்டின் உரிமையாளர்கள் லீஸ் தொகையை அதிகரித்துக் கொடுக்கும்படி கேட்பார்கள். அப்போது லீஸ் எடுப்பவர் விரும்பினால், அதே வீட்டில் இருக்கலாம். இல்லாவிட்டால், லீஸ் தொகையை முழுதாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு வேறு வீட்டை லீசுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

இதில் சாதகமான விஷயம் என்னவென்றால், வாடகை செலுத்த வேண்டியதில்லை என்பதால், லீஸ் எடுத்தவருக்கு, 11 மாதத்திற்கான வாடகைத் தொகை மிச்சமாகும். உதாரணமாக ஆறாயிரம் ரூபாய் வாடகை செலுத்தும் நபர், அந்த வீட்டை லீசுக்கு எடுக்கும் பட்சத்தில், அவருக்கு 11 மாதங்களில் சுமார் 66 ஆயிரம் ரூபாய் மிச்சமாகிறது. அந்த வீட்டிற்கு 3 லட்சம் ரூபாய் லீஸ் தொகையாகக் கொடுத்திருந்தால், வாடகை செலுத்தாத காரணத்தால் மீதமான 66 ஆயிரம் ரூபாயை, அவரது முதலீட்டுக்குக் கிடைத்த வட்டியாகக் கருதலாம். இது வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கும் வட்டித் தொகையை விட மிகவும் அதிகம் என்பதில் சந்தேகமில்லை.

இதேபோல் ஒவ்வொரு மாதமும் அவருக்கு ஆறாயிரம் ரூபாய் மிச்சமாகும் பட்சத்தில், அதைச் சேமித்து, ஓரிரு ஆண்டுகளில் 4 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் செலுத்தி, வேறொரு வீட்டை லீசுக்கு எடுத்து மாறிக்கொள்ளலாம். எனவே, வாடகைத் தொகையைச் சேமித்து லீஸ் தொகையை அதிகரிப்பதன் மூலம், மூலதனம் அதிகரிப்பதுடன், பின்னாளில் அதனைக் கொண்டே புதிய வீட்டை வாங்குவதற்கான முன்பணமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு வீட்டை லீசுக்கு எடுப்பதால் பல்வேறு சாதகங்கள் இருந்தாலும், சில பாதகங்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், லீஸ் எடுக்கும்போது போடப்படும் ஒப்பந்தத்தைச் சரியாக வடிவமைத்துக்கொண்டால், பல பிரச்சினைகளை லீஸ் எடுப்பவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக, லீஸ் ஒப்பந்தம் போடும்போதே, வீட்டுக்கு வெள்ளையடிப்பது, வீட்டின் பராமரிப்பு செலவு ஆகியவற்றிற்கு வீட்டின் உரிமையாளரே பொறுப்பு எனத் தெளிவாகக் குறிப்பிட்டுவிட வேண்டும்.

மேலும், வீட்டைக் காலி செய்ய விரும்பினால், இரு தரப்பினரும், எத்தனை மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, வீட்டின் உரிமையாளருக்கு வீடு தேவைப்படும் பட்சத்தில், லீசுக்கு இருப்பவருக்குச் சுமார் 3 மாதங்கள் வரை கால அவகாசம் கொடுத்து விட்டுக் காலி செய்யச் சொல்லலாம். அதேபோல், வீட்டை லீஸ் எடுத்தவருக்குப் பணம் தேவைப்படும் பட்சத்தில், பணத்தைத் திருப்பித் தர, வீட்டின் உரிமையாளருக்கு 3 மாதங்கள் அவகாசம் தர வேண்டும். இதுதான் பரஸ்பர லீஸ் ஒப்பந்தமாகப் பெரும்பாலும் இருந்து வருகிறது.

ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் போது, ஏதாவது சிக்கல் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக வீட்டைக் காலி செய்து விட்டு வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட முடியும். ஆனால், லீசுக்கு வீடு எடுக்கும் பட்சத்தில், அதுபோல் எளிதாக மாறுவதில் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. எனவே, ஒரு வீட்டை லீசுக்கு எடுப்பதற்கு முன்பாக ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து விட்டே முடிவு செய்ய வேண்டும்.

வாடகைக்குக் குடியிருக்கும் போது, ஏதாவது சிக்கல் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக வீட்டைக் காலி செய்து விட்டு வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x