Published : 09 Mar 2015 11:07 AM
Last Updated : 09 Mar 2015 11:07 AM

தொடரும் சோகம்

சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் ஒரு வருடத்துக்கு முன்பு சிறைக்கு செல்லும் போது, ரூ.10,000 கோடியெல்லாம் ஒரு விஷயமா? கூடிய விரைவில் வெளியே வந்துவிடுவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஒரு வருடத்துக்கு மேலாக சிறையில் இருப்போம் என்று சுப்ரதா ராயே நினைத்திருக்க மாட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டவர், ஜாமீன் தொகையை செலுத்த முடியாததால் இன்னும் சிறையிலேயே இருக்கிறார். ஹோட்டல், பார்முலா ஒன், தொலைக்காட்சி ரியல் எஸ்டேட், மியூச்சுவல் பண்ட் என பல துறைகளில் செயல்பட்டு வந்த நிறுவனம் இப்போது ரூ.10,000 கோடியைத் திரட்டும் பணியை மட்டும் செய்து வருகிறது.

சிறையில் இருப்பது மட்டுமல்லாமல் மேலும் பல சிக்கலில் சஹாரா குழுமம் மட்டுமின்றி அதன் தலைவர் சுப்ரதா ராயும் இருக்கிறார்.

பிரச்சினையின் வரலாறும், தொடரும் சிக்கலும்...

3 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் மூலமாக 24,000 கோடி ரூபாயை தன்னுடைய துணை நிறுவனங்கள் மூலமாக சஹாரா திரட்டியது.

டிசம்பர் 5, 2012 அன்று 15 சதவீத வட்டியுடன் இந்த தொகையை திருப்பித்தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் உடனடியாக 5,120 கோடி ரூபாயை செலுத்த உத்தரவிட்டிருந்தது. அதனை சஹாரா செலுத்திவிட்டது.

இதர தொகையை தவணை முறையில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் (செபி) செலுத்த சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாங்கள் வாடிக்கையாளர்களிடம் திரட்டிய தொகை 2,610 கோடி மட்டுமே. இதை விட கூடுதல் தொகையை செபியிடம் செலுத்திவிட்டோம் என்று சஹாரா தெரிவித்தது. ஆனால் இதனை நீதிமன்றமும் செபியும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதன் பிறகு சஹாராவின் துணை நிறுவனங்கள் முடக்கப்பட்டன. உச்சநீதி மன்றத்துக்கு சுப்ரதா ராய் கட்டாயம் வர வேண்டும் என்று உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு வராததால் ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட் பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.

மார்ச் 4, 2014 அன்று நீதிமன்றத்துக்கு வந்தார், நேராக திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். மார்ச் 26-ம் தேதி 10,000 கோடி ரூபாய் பிணை செலுத்த வேண்டும் என்றும் இதில் 5,000 கோடி ரூபாய் ரொக்கமாகவும், 5,000 கோடி ரூபாய் வங்கி மூலம் பிணை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ரூ.1.5 லட்சம் கோடி சொத்து மதிப்பு குழுமம், 10,000 கோடி ரூபாய் ஒரு விஷயம் இல்லை என்று சஹாரா அதிகாரிகள் தெரிவித்தாலும் ஒரு வருடத்துக்கு மேலாக சுப்ரதா ராய் சிறையில் இருக்கிறார்.

பிணை தொகையை திரட்ட, சிறை வளாகத்துக்குள்ளே சிறப்பு ( முதலீட்டாளர்களுடன் பேச வீடியோ கான்பிரன்ஸ் வசதி) ஏற்பாடு செய்யப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொத்துகளை விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தேவையான தொகையை திரட்ட முடியவில்லை.

இதற்கிடையே மிரா கேப்பிடல் குழும நிறுவனம் (Mirach Capital) சஹாரா குழும சொத்துகளை வாங்குவதற்கு முன்வந்தது. ஆனால் அதில் முறைகேடு நடக்கவே சஹாரா குழுமம் மிரா கேப்பிடல் மீது நீதிமன்ற நடவடிக்கையை எடுத்து வருகிறது.

இதற்கிடையே சரியான விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்று சஹாரா மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துக்கான அனுமதியை கடந்த சில நாட்களுக்கு முன்பு செபி ரத்து செய்தது.

மேலும் டிசம்பர் மாதம் முதல் பணியாளர்களுக்கு சம்பளம் தரவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 37 வருடமாக நம்பிக்கையுடன் செயல்பட்டு வரும் நிறுவனம் இது. மார்ச் வரை பணியாளர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்று சஹாரா நிறுவனம் தங்களது பணியாளர்களுக்கு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

தொடரும் சோகமாக லண்டனில் இருக்கும் Grosvenor House ஹோட்டலுக்கு வாங்கிய கடனை செலுத்தாததால் பேங்க் ஆப் சீனா இந்த ஹோட்டலை விற்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்த ஹோட்டலின் மதிப்பு 5,000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x