

ஷாக்கிள்டன் தலைமையில் அண்டார்டிகாவின் ஒரு பகுதியைத் தொட எண்ட்யூரன்ஸ் கப்பல் போய்க்கொண்டிருந்தது. அதேநேரம் இவர்களுக்கு உதவுவதற்காக அண்டார்டிகாவின் எதிர்பகுதியான ராஸ் கடலை நோக்கி அரோரா கப்பல் பயணித்தது. எண்ட்யூரன்ஸ் கப்பல் குழு அண்டார்டிகாவைத் தொட்ட பிறகு, தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தரைவழியாகத் தரவே அரோரா சென்று கொண்டிருந்தது.
பனிக் கண்டத்தைக் கடந்து செல்லத் திட்டமிட்ட இந்தப் பயணத்தில் கப்பல் குழுவினருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முழுவதையும் எண்ட்யூரன்ஸ் கப்பலே சுமந்து செல்ல முடியாது. அத்தியாவசியப் பொருட்கள் இல்லையென்றால் கப்பல் குழுவினர் உயிர் பிழைக்க முடியாது. அந்தத் தேவையை நிறைவு செய்யவே மேக்கிண்டாஷ் தலைமையில் அரோரா கப்பல் சென்றது.
வெடித்தது பிரச்சினை
ஆனால், எண்ட்யூரன்ஸ் கப்பல் அண்டார்டிகா கண்டத்தைத் தொடுவதற்கு முன்னதாகவே பிரச்சினை வெடித்தது. பயணம் தொடங்கி ஒன்றரை மாதத்தில் குளிர்காலம் தீவிரமடைய ஆரம்பித்தது. 1915 ஜனவரி 18-ம் தேதி வெண்டல் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த எண்ட்யூரன்ஸ் கப்பலைச் சூழ்ந்து பனி படர ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாகப் பனிப்பாறைகளின் நடுவே கப்பல் சிக்கிக்கொண்டது.
பனிப்பாறைகள் விலகுவதாகத் தெரியவில்லை. பனிப்பாறைகளை வெட்டியெடுத்துக் கப்பலை வெளியேற்றும் கப்பல் குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. கப்பலில் இருந்த குழுவினரின் எண்ணிக்கை 28.
பனிக் கண்டத்தின் மேலே
அடுத்த 9 மாதங்களுக்குப் பனிப்பாறைகளால் கப்பல் வடக்கு நோக்கித் தாறுமாறாக நகர்த்தப்பட்டுக்கொண்டே இருந்தது. அக்டோபர் மாதத்தில் பனிப் பாறைகள் கப்பலின் பலகைகளை உடைக்க ஆரம்பித்தன. கப்பல் உடைந்து மூழ்கத் தொடங்கியது. வேறு வழியில்லாத நிலையில் எண்ட்யூரன்ஸ் கப்பலைக் கைவிட ஷாக்கிள்டன் உத்தரவிட்டார்.
அதற்குப் பிறகும் வடக்கு நோக்கிப் பனிப்பாறைகள் நகர்ந்து கொண்டேவர, கப்பல் குழுவினர் பனிப்பாறைகளின் மீதே தற்காலிக முகாமில் பல மாதங்களுக்குத் தங்கியிருந்தனர். அவர்களிடம் அவசரகாலப் படகுகள் இருந்தன. ஆனால், அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்றால்கூட, பனிப்பாறைகள் உடைந்து படகு செல்வதற்குத் தண்ணீர் வேண்டுமே.
அவர்கள் கடல் நாய் (சீல்), பென்குயின்களை வேட்டையாடிச் சாப்பிட்டனர். கடல்நாய்களின் கொழுப்பை எரிபொருளாகப் பயன்படுத்தினர். பெரும்பாலான நேரம் எதுவும் வேலை செய்ய முடியாது என்பதால் அவசரகாலப் படகுகளைத் தலைகீழாகக் கவிழ்த்து, தூங்கும் பைகளுக்குள் புகுந்துகொண்டு அவற்றுக்குள் தூங்கினர்.
பெரும் துணிச்சல்
பனி விலக ஆரம்பித்த பிறகு அருகிலிருந்த தரைப்பகுதியான யானைத் தீவை நோக்கி அவசரகாலப் படகுகளில் முன்னேறினர். அந்தத் தீவில் இருந்து ஐந்து பேருடன் எண்ட்யூரன்ஸ் கப்பல் புறப்பட்ட தெற்கு ஜார்ஜியா தீவுக்கு அவசரகாலப் படகில் செல்லத் தயார் ஆனார் ஷாக்கிள்டன். மிகவும் குறுகலான அந்தக் கடல் பகுதியில் 1916 ஏப்ரல் 24-ம் தேதி புறப்பட்டனர்.
காதை கிழிக்கும் பலத்த காற்றும், உறைய வைக்கும் குளிர்ச்சியான தண்ணீர் படகுக்குள் புகுவதுமாகப் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தனர். திசையறிய அவர்களிடம் மாலுமிகளின் காலமானி மட்டுமே இருந்தது. அதைக் கொண்டு திசையறிந்து, மிகவும் துணிச்சலுடன் 1,287 கி.மீ. தொலைவை 17 நாட்களில் கடந்து தெற்கு ஜார்ஜியாவை அடைந்தனர்.
ஆனால், அதிலும் ஒரு துரதிருஷ்டம். அவர்கள் சென்றடைந்தது தெற்கு ஜார்ஜியாவின் மற்றொரு முனை. உதவியைப் பெற வேண்டுமானால், மறுமுனையை அடைந்தாக வேண்டும். அப்பகுதியில் நெடிதோங்கி இருந்த மலைகளை ஏறிக் கடப்பதுதான் ஒரே வழி. கடலை துணிச்சலாகக் கடந்த ஆறு பேரும் மலைகளையும் ஏறிக் கடந்தனர்.
நிறைந்தது பயணம்
மறு முனையை அடைந்து உதவியைப் பெற்றனர். யானை தீவில் எஞ்சியிருந்த கப்பல் குழுவினரை மீட்க ஷாக்கிள்டன் திரும்பி வந்தபோது, ஐந்து மாதங்கள் கடந்திருந்தன. தன் குழுவினர் அனைவரையும் எந்த உயிர் சேதமும் இல்லாமல், தெற்கு ஜார்ஜியாவுக்கு ஷாக்கிள்டன் மீட்டுக் கொண்டுவந்தார். இதுதான் எண்ட்யூரன்ஸ் கப்பல் குழுவினர் காவியப் பயணம்.
அதேநேரம், அண்டார்டிகா கண்டத்தின் மற்றொரு முனையில் இருந்த ராஸ் கடல் குழுவினரோ மாறுபட்ட பயங்கரமான அனுபவத்தை எதிர்கொண்டனர். கடும் காற்றில் சிக்கிய அவர்களுடைய அரோரா கப்பல் சேதமடைந்தது. அதில் இருந்த கருவிகளும், அத்தியாவசியப் பொருட்களும் வீணாகின. இந்தப் பிரச்சினையில் அரோரா கப்பல் குழுவைச் சேர்ந்த 3 பேர் மடிந்தனர்.