அனிமேஷன் திறக்கப்போகும் வாய்ப்புகள்

அனிமேஷன் திறக்கப்போகும் வாய்ப்புகள்
Updated on
2 min read

மருத்துவம், பொறியியல் துறைச்சார்ந்த படிப்புகள் மட்டுமே நம்பிக்கையானது என்ற எண்ணம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மாறிவருகிறது. அதை உறுதிசெய்யும் விதமாக அனிமேஷன், அட்வர்டைசிங் போன்ற படைப்பாற்றலுக்கு சவால்விடும் துறைகளில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் முன்பைவிட அதிகமாகியிருக்கிறது.

அனிமேஷன் துறையைப் பொறுத்தவரை, தற்போது இந்தியா 30 சதவீத வேகத்தில் வளர்ச்சியடைந்துவருகிறது. சர்வதேச நிறுவனங்கள் அனிமேஷன் தயாரிப்புப் பணிகளுக்கு இந்தியாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இதனால் இந்தியாவில் அனிமேட்டர்களின் தேவை அதிகரித்திருக்கிறது.

யாரெல்லாம் தேந்தெடுக்கலாம்?

அனிமேஷன் துறையைத் தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்களுக்கு படைப்பாற்றல் வேண்டும். ஒரு கதையைப் புதுமையாக சொல்வதற்கான மெனக்கெடலும், பொறுமையும் இருக்க வேண்டும். அத்துடன் அடிப்படையில் வரையும் திறன் வேண்டும். “ அனிமேஷனில் 2டி மற்றும் 3டி, விஎஃப்எக்ஸ், கேமிங், கிராஃபிக் டிசைனிங், வெப் டிசைனிங் என பல்வேறு தளங்களில் ஒரு அனிமேட்டரால் பணியாற்ற முடியும்.

அத்துடன், பிராடக்ட் ரியாலிட்டி(Product Reality), மருத்துவ ஒப்புச்செயலாக்கம்(Medical Simulation), ராணுவ ஒப்புச்செயலாக்கம் (Military Simulation), வாகனம் ஓட்டும் ஒப்புச்செயலாக்கம் (Driving Simulation), தொழில்துறைச் சார்ந்த ஒப்புச்செயலாக்கம் (Industry Simulation) எனப் பல்வேறு துறைகளில் இப்போது அனிமேட்டர்களின் தேவை உருவாகியிருக்கிறது” என்கிறார் கிரியா ஸ்கூல் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ் இயக்குநர் ராம் சாரங்கபாணி.

இது 3டி காலம்

திரைப்படங்கள், விளம்பரங்கள், மொபைல் விளையாட்டுகளின் செயலிகள் என இப்போது எல்லாமே 3டி மயமாகிக் கொண்டிருக்கிறது. “ஒரு சண்டைக்காட்சியை நேரடியாகப் படம் பிடிப்பதற்கு ஆகும் செலவைவிட 3டி அனிமேஷன் தயாரிப்புக்கு ஆகும் செலவு குறைவுதான். அதனால் இப்போது பெரும்பாலான திரைப்படங்களில் 3டி அனிமேஷன் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.

இது எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும். அதே சமயம், 2டியைப் பொறுத்தவரை, தொலைக்காட்சிகளில் கார்டூனிஸ்ட்களாகப் பிரகாசிக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன” என்கிறார் கிரியா ஸ்கூல் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர் விமல்.

என்ன படிப்புகள்?

அனிமேஷன் படிப்புகளைப் பொறுத்த வரை, ஒரு மாத படிப்பில் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்புவரை உங்கள் வசதிக்கேற்ற கால அவகாசத்தில் தேர்ந்தெடுக்கலாம். ஆறுமாத டிப்ளமா படிப்புக்கான செலவு ஒரு லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “கிரியா ஸ்கூலைப்பொறுத்தவரை ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம் ஓராண்டு எனப் பல்வேறு டிப்ளமா படிப்புகளை வழங்குகின்றோம்.

3டி, 2டி அனிமேஷனுக்கு தேவைப்படும் மென்பொருள்களை ஆறுமாத டிப்ளமா படிப்பில் முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம். அதுவே, ஓராண்டு அட்வான்ஸ்டு டிப்ளமா படிப்பு அனிமேஷனில் நிபுணத்துவம் பெற நினைப்பவர்களுக்கு உதவும்” என்கிறார் பயிற்சியாளர் விமல்.

எல்லாமே விளையாட்டுதான்

அனிமேஷன் படித்துவிட்டு தாங்களாகவே ஒரு 3டி விளையாட்டை உருவாக்கும் திறமையை வளர்த்துக்கொள்பவர்களுக்கு வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல் தொழில்முனைவர்களாகும் வாய்ப்பும் இருக்கிறது. “2டியில் ஒரு விளையாட்டை உருவாக்க அடிப்படை ஜாவாவும், படைப்பாற்றலும் இருந்தாலே போதுமானது. எளிமையாக ஒரு 2டி விளையாட்டை உருவாக்கி அதைத் தனியாக நீங்களே விற்பனையும் செய்யலாம்” என்கிறார் விமல்.

குவியும் வேலைவாய்ப்புகள்

கிரியா ஸ்கூல் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ் என்ற இந்த அனிமேஷன் பயிற்சிப்பள்ளியை ஆஸ்திரேலியாவின் கிரியா இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் நடத்துகிறது. இந்நிறுவனம், சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் சேர்த்து 7000த்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு அனிமேஷன் தொழில்நுட்பப் பணிகளைச் செய்து கொடுத்துள்ளது. ‘ஐ’, ‘ஆரம்பம்’ ‘அநேகன்’ போன்ற படங்களில் வரும் அனிமேஷன், விஎஃப்எக்ஸ் காட்சிகளை இந்நிறுவனம்தான் உருவாக்கியிருக்கிறது.

“இப்போது கிரியா, ப்ளு ராக்கெட் என்ற சர்வதேச நிறுவனத்துடன் அனிமேஷன் தயாரிப்பில் இணைந்திருப்பதால் இந்தியாவில் புதிதாக நூறு அனிமேட்டர்களை வேலைக்கு அமர்த்த உள்ளோம். இதுமட்டுமல்லாமல், இந்தியாவில் அனிமேஷன் துறையில் வேலைவாய்ப்புகள் இன்னும் அதிகமாக உருவாகும்” என்கிறார் கிரியாவின் இயக்குநர் ராம் சாரங்கபாணி.

மேலும் தகவல்களுக்கு:>http://criya.edu.in/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in