Last Updated : 18 Mar, 2015 12:50 PM

 

Published : 18 Mar 2015 12:50 PM
Last Updated : 18 Mar 2015 12:50 PM

உலகம் சுற்றும் குட்டித் துப்பறிவாளன்

உலகப் புகழ்பெற்ற ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்குக்கு, ஒரு காமிக்ஸ் கதாபாத்திரம் ரொம்பவும் பிடித்துப் போனது. அதை மையமாக வைத்து ஒரு திரைப்படமும் எடுத்தார். பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற அந்தப் படம் டின்டின்.

ஒரு டீன்ஏஜ் பையனை மையமாகக் கொண்டு 86 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு காமிக்ஸ் தொடர், இன்றைய டீன்ஏஜ் ரசிகர்களும் விரும்பிப் படிக்கும் அளவுக்குத் தொடர முடியுமா? முடியும் என்று சொல்வதுதான் டின்டின் காமிக்ஸ் தொடர். உலகின் 70 மொழிகளில், இருபது கோடிப் புத்தகங்களுக்கு மேல் விற்பனை ஆகியுள்ள இந்த காமிக்ஸ் தொடர், ஐந்து தலைமுறை வாசகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கிறது.

உருவான கதை:

‘இருபதாம் நூற்றாண்டு' என்ற பெல்ஜிய நாளிதழில் வியாழன்தோறும் ‘இளைஞர்களுக்கான இருபதாம் நூற்றாண்டு’ என்ற இணைப்பு வெளியானது. அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர் ஹெர்ஜ். டோடோர் என்ற சாரண இயக்கத்தைச் சேர்ந்த இளைஞனைக் கதாநாயகனாகக் கொண்டு 1926-ம் ஆண்டிலேயே ஒரு காமிக்ஸ் கதையை இவர் உருவாக்கி இருந்தார்.

அதே நாளிதழில் வேறொருவரின் கதைக்கு ஹெர்ஜ் காமிக்ஸ் படம் வரைந்துகொண்டிருந்தார். அந்தக் கதை நன்றாக இல்லை என்று ஹெர்ஜுக்குத் தோன்றியது. உடனே இதழின் ஆசிரியர், "அப்படி என்றால் ஏன் நீங்களே ஒரு காமிக்ஸ் தொடரை உருவாக்கக் கூடாது?" என்று கேட்டார். 1928-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி ஒரு டீன்ஏஜ் இளைஞனையும், நாயையும் கொண்ட ஒரு சிரிப்பு கார்ட்டூனை ஹெர்ஜ் வரைந்திருந்தார்.

அதை மையமாகக்கொண்டு, தன்னுடைய சகோதரனின் குணாதிசயங்களுடன், தனது முந்தைய படைப்பான டோடோரின் உருவ ஒற்றுமையுடன் ஜனவரி 4-ம் தேதி டின்டின் காமிக்ஸ் தொடருக்கான விளம்பரத்தை வெளியிட்டார். அதே மாதம் 10-ம் தேதி உலக மக்களைச் சந்திக்க வந்தான் டின்டின். அன்று முதல் இன்றுவரை உலக மக்களால் அதிகமாக விரும்பப்படுகிற டீன்ஏஜ் பத்திரிகையாளனாகத் தொடர்கிறான்.

டின்டின்னின் கதை:

ஸ்நோயி என்ற நாயை நண்பனாகக் கொண்ட பெல்ஜிய நாட்டு இளைஞன் டின்டின், ஒரு புலனாய்வுச் செய்தியாளன். ஜெர்மனியில் ஸ்டாலினின் அரசைப் பற்றிய ரகசியங்களை உலகுக்கு வெளிப்படுத்த மாஸ்கோவுக்குப் பயணம் செய்கிறான்.

அங்கு பல சாகசங்களை நிகழ்த்துவதாக முதல் கதை அமைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு காங்கோ, சீனா என்று பல நாடுகளுக்குச் சென்று சாகசம் செய்ய ஆரம்பித்த பிறகு, துப்பறிவாளனாகவே அதிகமாகச் செயல்பட்டான். நிஜத்தில் மனிதன் நிலவுக்குச் செல்வதற்கு 14 வருடங்களுக்கு முன்பாகவே, நிலவுக்குச் சென்று சாகசம் செய்த டின்டின், பின்னாளில் ஒரு சாகச நாயகனாக உருவெடுத்தான்.

நண்பர்கள்

ஸ்நோயி: ஃபாக்ஸ் டெரியர் வகை நாயான ஸ்நோயி, இல்லாமல் டின்டின் கதையே கிடையாது. டின்டின்னின் உற்ற நண்பன் இது. பேசும் திறமை கொண்டதாக வடிவமைக்கப்பட்ட ஸ்நோயி, டின்டின் கதாபாத்திரத்துக்கு நேர் எதிராக, கதையில் மாற்றுக்கருத்து சொல்லிக் கொண்டிருக்கும்.

முதல் எட்டுக் கதைகளில் அனைவருடனும் சகஜமாகப் பேசும் ஸ்நோயிக்கான இடத்தை ஒன்பதாவது கதையில் இருந்து கேப்டன் ஹட்டாக் பிடித்துக்கொண்டு, அவநம்பிக்கை கருத்துகளைத் தொடர்ந்து அளித்து வருகிறார். அபார அறிவுத்திறனுடன் இருக்கும் ஸ்நோயி, பலமுறை டின்டின்னை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றி இருக்கிறது. உணவுப்பிரியையான ஸ்நோயிக்கு எட்டுக் கால் பூச்சி என்றாலே பயம்.

ஹெர்ஜ் வழக்கமாகச் செல்லும் ஒரு உணவு விடுதியின் சொந்தக்காரர் வளர்த்த ஃபாக்ஸ் டெரியர் வகை நாயை மனதில் கொண்டே இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பிரெஞ்சு மொழியில் இதன் பெயர் மிலோ. இது ஹெர்ஜின் தோழியின் பெயரைக்கொண்டு உருவாக்கப்பட்டது.

கேப்டன் ஹட்டாக்:

"எப்போதும் தண்ணீரிலேயே" இருக்கும் கப்பல் கேப்டனான ஹட்டாக், முன்கோபக்காரர் என்றாலும் நல்ல மனம் படைத்தவர். எதையுமே நல்லதாகப் பார்க்கும் டின்டின் கதாபாத்திரத்துக்கு நேரெதிராக அனைத்தையும் எதிர்மறையாகப் பார்க்கும் சுபாவம் கொண்டவர். தன்னுடைய மூதாதையரின் பொக்கிஷத்தை டின்டின்னின் உதவியுடன் தேடி, பெரும் செல்வந்தராக மாறும் கேப்டன், தொடர்ந்து பல கதைகளில் டின்டின்னுக்கு உதவுவார்.

தாம்ஸன் & தாம்ப்ஸன்:

ஒரே மாதிரி உடையணிந்து வரும் இரட்டை துப்பறிவாளர்களான இவர்கள், டின்டின் கதைத்தொடரின் நகைச்சுவை நாயகர்கள். ஹெர்ஜின் தந்தை, அவருடைய சகோதரரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கதாபாத்திரங்கள், எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரின் உடையை அணிந்து கூட்டத்தோடு ஐக்கியமாகிவிட வேண்டும் என நினைத்து, அந்த ஊரிலேயே மிகவும் வித்தியாசமாக உடையணிவார்கள். அதனால், எங்கே சென்றாலும் கவனிக்கப் படுகிற நபர்களாகக் கதை முழுவதும் வருபவர்கள்.

புரொபசர் கால்குலஸ்:

புத்திக் கூர்மை நிறைந்த விஞ்ஞானி யான கால் குலசுக்கு ஒரு காதின் கேட்கும் திறன் குறைவு. அதைப் போலவே ஞாபகச் சக்தியும் அடிக்கடி சவால் விடும். பல துறைகளில் பட்டம் பெற்ற இவர், நகைச்சுவைக்கு வித்திடுவார்.

டின்டின் திரைப்படத்தின் அடுத்த பாகத்தைப் பிரபல இயக்குநர் பீட்டர் ஜாக்சன் இயக்கவுள்ளார்.

புதிய பாணி

டின்டின் காமிக்ஸ் தொடரை வரைந்த ஓவியர் ஹெர்ஜ், ‘லிங்னே க்ளேர்’ (Ligne Clair) என்ற ஓவிய முறையை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்தியவர். வண்ணங்களில் அச்சிடாமல் கறுப்பு வெள்ளையில் மட்டுமே ஒருவரை வரையும்போது அவரையும், அவரது உடைகள், நிழல் போன்றவற்றையும் வேறுபடுத்திக் காட்ட, கோடுகளால் நிழலை உருவாக்கும் விதத்துக்குப் பெயர்தான் ஹாட்சிங்.

ஆனால், ஹாட்சிங் பாணியைப் பயன்படுத்தாமலேயே அப்படி ஒரு வித்தியாசத்தைத் தெளிவான, உறுதியான கோடுகளால் ஏற்படுத்த முடியும் என்பதை ஹெர்ஜ் வரைந்து காட்டினார். அந்தத் தெளிவான கோட்டோவியப் பாணியை உலகம் முழுக்கப் பிரபலப்படுத்தினார்.

உருவாக்கியவர்:

ஹெர்ஜ் (ஜார்ஜெஸ் ரெமி)

முதலில் தோன்றிய தேதி: ஜனவரி 10, 1929

பெயர்: டின்டின்

வசிப்பது: பெல்ஜியம்

தொழில்: செய்தியாளர்

வயது: டீன்ஏஜ்

திறமைகள்:

அசாத்திய அறிவு கொண்ட இளைஞன், தற்காப்பு கலையில் தேர்ந்தவன், துப்பறிவதில் சிறந்த டின்டின், மாறுவேடம் போடுவதிலும் கைதேர்ந்தவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x