Last Updated : 06 Mar, 2015 11:32 AM

 

Published : 06 Mar 2015 11:32 AM
Last Updated : 06 Mar 2015 11:32 AM

கிலி... ஜாலி... ஹோலி...

குளிர்காலம் முடிந்து வெயிலின் தொடக்கத்தைக் கொண்டாடும் ஒரு வசந்த விழா ஹோலி பண்டிகை. காலச்சக்கரம் சுழன்றோட இன்றோ இந்த ஹோலிப் பண்டிகை பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. வண்ணங்களின் திருவிழாவான ஹோலி அன்று தக்காளி அடிப்பது, முட்டையை வீசுவது என இளைஞர்கள் செய்யும் அலப்பறைகள் இந்தப் பண்டிகையை ஜாலியாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

ஹோலிப் பண்டிகை பற்றி புராணக் கதைகள் இருக்கின்றன. இருந்தாலும் ஹோலி என்றாலே மனதில் டக்கென தோன்றுவது வண்ணப் பொடிகள்தான். இந்தப் பண்டிகையின் முக்கியத்துவமே `பிச்கரிஸ்' என்னும் நீரைப் பீய்ச்சி அடிக்கும் குழாயில், `குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் தூளைக் கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடுவதுதான்.

நம்மூரில் பிடித்த ஆணுக்கு மஞ்சள் நீர் ஊற்றுவது, தாய் மாமன், மாமன் மகளுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்வது காலங்காலமாக திருவிழாக்களில் நடந்தேறும் ஒரு ஜாலி பொழுதுபோக்கு. அதுபோலத்தான் இந்த ஹோலியும். குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என்ற பாகுபாடெல்லாம் இந்த ஜாலி விளையாட்டுக்கு இல்லவே இல்லை. என்றாலும், இளைஞர்களின் அலப்பறைத்தான் இந்த விழாவில் தனித்து தெரியும்.

தமிழ்நாட்டில் வட இந்திய மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கொண்டாடப்பட்டுவந்த ஹோலி, இன்று தமிழக இளைஞர்களையும் மையம் கொண்டுள்ளது. குறிப்பாகக் கல்லூரிகளில் இன்று இந்த விழாவை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அன்றைய தினம் உடை கண்டமாகிவிடும், முகம் அலங்கோலமாகிவிடும் என்ற பயத்தோடு வருபவர்களையும்கூட ஜாலி மூடுக்கு கொண்டு வந்துவிடுகிறது இந்த விழா.

வெள்ளை உடையாக இருந்தால்கூட, வண்ணக் கரைசலை ஊற்றி, அதில் மாடர்ன் ஆர்ட் போடும் டெக்னிக் தெரிந்தவர்கள் நம் இளைஞர்கள். இப்போதெல்லாம் உடையிலும், உடலிலும் ஊற்றப்படும் வண்ணக் கரைசலை நீர் ஊற்றி கழுவினாலும் போகாமல் இருக்க புதுப்புது உத்திகளைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

வண்ணப் பொடி, தேங்காய் எண்ணெய், வாகன கிரீஸ், முட்டையை ஊற்றி ஒரு விதமான வஸ்துவை தயார் செய்கிறார்கள். இதைக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் அடித்து விளையாடவும் செய்கிறார்கள். கிரீஸ், முட்டை கலந்த வித்தியாசமானக் கலவை என்பதால், இந்த வண்ணம் அவ்வளவு எளிதாகப் போகாது. ஒரே நாளில் பத்து முறையாவது குளித்தால்தான் ஓரளவுக்காவது இந்த வித்தியாச வஸ்து வண்ணம் மறையும். சிலருக்கு ஓரிரு நாட்கள் ஆனாலும் முகத்தில் வண்ணத்தின் சாயல் மறையாமல் அப்படியே இருக்கும். இந்த வித்தியாசக் கலவைக்குப் பயந்தும், அதில் இருந்து தப்பிக்கவும் அன்றைய தினம் வெளியே வருவதைத் தவிர்ப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

‘அந்திமழை மேகம்... தங்க மழைத் தூவும்...’ என்று நாயகன் படத்தில் வருவது போல ஆனந்தமாக கூடி மொத்தமாக விளையாடி மகிழ்வதுதான் வட இந்தியர்களின் ஸ்டைல். தெரிந்தவர், தெரியாதவர் மேல் உரிமையோடு வண்ணப் பொடியை தூவியும், வண்ண நீரை பீய்ச்சி அடிப்பதும் காலம் காலமாக நடந்து வருகிறது. அண்மைக் காலமாக பள்ளி மாணவர்கள் கறுப்பு மையை சட்டையில் அடித்து விளையாடுவது போல, முட்டை வீசியும், தக்காளி அடித்தும் இந்த விழாவைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். குறிப்பாக இந்த முட்டை வீச்சு, தக்காளி அடி விளையாட்டு நெருங்கிய நண்பர்களுக்குள் மட்டுமே நடப்பதால் சண்டை சச்சரவின்றி அது ஜாலியாகவே முடிந்து விடுகிறது.

வண்ணப் பொடிகளும், கரைசலும் ‘கிலியைக் கொடுத்தாலும் ‘ஜாலியான அனுபவம் தரும் ‘ ஹோலிக்கு நீங்கள் ‘லாலி’ பாடலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x