

கடலோரக் காவல்படையில் உதவி கமாண்டன்ட் ஆக வேண்டுமா? இந்தியக் கடலோரப் பகுதியைப் பாதுகாக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் கடலோரக் காவல்படையானது உதவிக் கமாண்டன்ட் பணிக்குப் பட்டதாரிகளைத் தேர்வுசெய்ய இருக்கிறது.
ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தப ட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பதுடன் பிளஸ் 2 விலும் 60 சதவீத மதிப்பெண்ணுடன் கணிதம், இயற்பியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி வகுப்பினர், என்சிசி-யில் ஏ கிரேடு சான்று பெற்றிருப்பவர்கள், தேசிய அளவில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு மட்டும் பட்டப் படிப்பில் 5 சதவீத மதிப்பெண் சலுகை உண்டு.
வயது தகுதியைப் பொறுத்தவரையில், 1.9.1990-க்கும் 30.6.1994-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினருக்கு மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
முக்கியமான நிபந்தனை என்னவென்றால், திருமணம் ஆகியிருக்கக் கூடாது. பட்டப் படிப்பு இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாது. முதல்கட்டத் தேர்வு அதைத்தொடர்ந்து உளவியல் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு ஆகியவை அடங்கிய மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
உரியத் தகுதியுடைய பட்டதாரிகள் >http://www.joinindiancoastguard.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மார்ச் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதல்கட்டத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை ஏப்ரல் 6 முதல் 16-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இறுதி தேர்வில் வெற்றிபெறுவோர் பயிற்சி அளிக்கப்பட்டு நேரடியாக உதவிக் கமாண்டன்ட் பதவியில் அமர்த்தப்படுவர். அதன்பிறகு துணைக் கமாண்டன்ட், கமாண்டன்ட், டிஐஜி, ஐஜி, கூடுதல் டைரக்டர் ஜெனரல் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம்.
கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுமுறை தொடர்பான முழு விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.