Last Updated : 24 Mar, 2015 10:52 AM

 

Published : 24 Mar 2015 10:52 AM
Last Updated : 24 Mar 2015 10:52 AM

வெட்டிவேரு வாசம் 28- மோகனாக்காவின் நம்பிக்கை!

பதினைந்து வயதில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை முனைக் கடையில் விற்கப்படும் சோம்பு, பூண்டு கலந்த மொறு மொறு மசால்வடை மீது அப்படியொரு கவர்ச்சி எனக்கு.

ஒரு முன்மாலையில் மசால்வடையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன். கடைகளில் விளக்குகள் எரியத் தொடங்கி யிருந்தன. பேருந்துகளும், ரிக் ஷாக் களும், ஆட்டோக்களும், மனிதர்களும் சாலையை நிறைத்திருக்க... ஒலி ரகளை!

நாய் ஊளையைக் காட்டிலும் மோச மான பிரேக் ஒலியுடன் ஒரு பேருந்து உரசுகிற மாதிரி வந்து நின்றது. திடுக் கிட்டு ஓரம் ஒதுங்கினேன். அப்படி ஒதுங்கி யதில், அவளுடைய பாதையில் குறுக் கிட்டேன்.

50 வயதுப் பெண்மணி. தலையில் இரண்டு அங்குல நரைமுடி. நெற்றியில் திலகம் இல்லை. கழுத்தில், காதில் ஆபரணங்களும் இல்லை. திடீரென்று கண்களை விரித்து முறைத்தபடி தொண் டையை அபாரமாகக் கமறி, என் முகத் தில் காறி உமிழ்ந்தாள். எச்சில் என் நெற்றியிலிருந்து மூக்குத்தண்டிலும், கண்ணிலும் வழிந்தது.

அபரிமிதமான கோபம் பொங்க, ஒற்றை விரலை நீட்டி “ஏய்...” என்று கத்தினேன். பின்வாங்கினாள். சட்டென்று சாலையில் கிடந்த அரைச் செங்கல்லை எடுத்தாள். அதை என் மீது வீசப் பார்க்க, யாரோ செங்கல்லைப் பிடுங்கிப் போட்டார்கள்.

“பைத்தியம் நைனா. அத்தப் போய் மொறைக்கிற? அதுவரைக்கும் அடிபடாம தப்ச்சே... மூஞ்சக் கழு விக்கோ...” என்று ஒரு பூக்காரம்மா குவளையில் நீர் கொடுத்தார். கழுவிக் கொண்டேன். என் மீது துப்பியவள் எதுவுமே நடக்காதது போல் விலகிப் போனாள். மசால்வடையைத் துறந்து வீடு திரும்பினேன். அவளை இன்னொரு முறை சந்திப்பேன் என்று நினைத்துகூடப் பார்க்கவில்லை.

சிறுவயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்பவர்கள், குரங்குப்பெடல் முக்காப் பெடல் எனும் இரண்டு பருவங் களைத் தாண்டியே ஆகவேண்டும். என்னுடைய முக்காப் பெடல் பருவம். சீட்டில் அமர்ந்தால் பெடல் எட்டாது. பாரில் இருந்தபடியே பாலே செய்து பெடல் மிதிக்கவேண்டும்.

10 கிலோ ரேஷன் அரிசியை மெஷினில் கொடுத்து பாலிஷ் செய்து, மூட்டையாகக் கட்டி கேரியரில் வைத்துக்கொண்டு, முக்கால் பெடலில் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன்.

அப்போதெல்லாம் மாநகராட்சியில் மாடு பூட்டிய வண்டிதான் குப்பை அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்டது. அப்படியொரு வண்டியைக் கடந்தேன். திருப்பத்தில் அதே பெண்மணி சைக் கிளுக்கு நேரெதிரே வந்து விட்டாள். சைக் கிளைப் பார்த்து மிரண்டாள். “ஏத்தி ராதே… ஏத்திராதே…” என்று கத்தினாள்.

ஹாண்டில் பாரை இடது பக்கம் திருப்பினேன். அவளும் இடது பக்கம் ஒதுங்கினாள். வலது பக்கம் திருப்பி னால், அவளும் வலது பக்கம் பாய்ந்தாள். அரிசி மூட்டையின் பாரம் தாங்காமல் கேரியர் லொட லொடவென ஆடியது.

எதிர்பாராமல் சைக்கிள் ஹாண்டில் பாரைப் பிடித்துத் திருப்பிவிட்டாள். சுத்தமாக பாலன்ஸ் போய், வலது பக்கம் சாலையில் சரிந்தேன். சைக்கிள் என் மீது விழுந்தது.

நான் விழுந்த நேரம் குப்பை வண்டி மாடு மிகச் சரியாக எனக்குப் பின்னால் இருந்தது. பாதையில் திடீரென்று தனக்கு முன்னால் முளைத்த என்னைப் பார்த்து மிரண்டது. வண்டியை இழுத்துக்கொண்டு சைக்கிளின் மீதும் என் மீதும் காலை வைத்துக் கடந்தது.

குப்பை வண்டியின் இரும்புப் பட்டயம் அடிக்கப்பட்ட மரச் சக்கரம் சைக்கிள் மீது ஏறியது. ஸ்போக்ஸ் கம்பிகள் உடைந்து காலில் செருகின. மார்பு எலும்பை சைக்கிளின் பார் அழுத்திக்கொண்டிருந்தது. அதன் மீது குப்பை வண்டியின் இன்னொரு சக்கரம் ஏறியது. சைக்கிள் பார் மீதிருந்து வழுக்கித் தரையில் இறங்கியது. கழுத்து தப்பித்தது. மாடும் வண்டியும் விலகிச் சென்றன.

உயிர் தப்பியதை ஆச்சர்யத்துடன் உணர்ந்தேன். அடுத்த கணம் மயங்கி னேன். யாரோ கோலி சோடாவை உடைத்தார்கள். முகத்தில் பீய்ச்சினார் கள். வாயில் ஊற்றினார்கள். யாரோ அடையாளம் புரிந்து ரிக் ஷாவில் ஏற்றி என்னை வீடு சேர்த்தார்கள். யாரோ வளைந்த சக்கரங்களுடன் சைக்கிளை இழுத்து வந்து வீட்டில் போட்டார்கள்.

டாக்டர். எக்ஸ்ரே. பாத எலும்பில் முறிவு. அலோபதி. யுனானி. இரண்டு மாத படுக்கை எல்லாம் வேறு விஷயம்.

விபத்துக்கு இரண்டாம் நாள் மோக னாக்கா வந்து பார்த்தார். வீட்டு வேலை கள் செய்து பிழைப்பு நடத்திக்கொண்டி ருந்த அந்த அக்காதான் எனக்கு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்' நாவலை அறிமுகப்படுத்தியவர்.

“இன்னா கோராமை நைனா இது? மூஞ்சில எச்சத் துப்பின அதே பைத்தியந்தான் இப்பவும் தள்ளி வுட்டுதாமே. இன்னா கர்மமோ… போன ஜன்மத்தில அதுக்கு நீ இன்னாவோ கடன் பட்ருக்கே. அதான் இந்த ஜன்மத்தில இப்படித் தீத்துக்குது...” என்றார் கரிசனத்துடன்.

“அப்படிக் கூட நடக்குமா, மோகனாக்கா?”

“நீ கொயந்தைப் பையன் கண்ணு. ஒனக்கு இத்தல்லாம் புரியாது. நம்ப கூட இருக்கறவங்கல்லாம் ஜன்ம, ஜன்மமா இருந்துனு வர்றவங்கதான்...”

மோகனாக்கா போய்விட்டார். அக்கா சொன்னது இப்போதும் காதுகளில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறது.

உண்மையோ, இல்லையோ, மக்கள் ஒன்றை நம்பிவிட்டால்… அந்த நம்பிக்கை மனதின் அடியாழம் வரைக்கும் வேரோடிவிடும். சுலபத்தில் மாற்ற முடியாது.

‘அனேகன்’ திரைப்படத்தில் முந்தின பிறவிகளில் சந்தித்தவர்களையே இந்தப் பிறவியிலும் சந்திப்பதாக கதாநாயகி மது (அமைரா தஸ்தூர்) நம்புவாள். பர்மாவில் தன்னுடன் வாழப் பிரியப்பட்ட மூனா ரூனாதான் (தனுஷ்), இந்தப் பிறவியில் அஸ்வினாக எதிர்ப்படுகிறான் என்பாள்.

எங்களுக்கு நேர்ந்த சில அனு பவங்களும், மோகனாக்காவின் வார்த் தைகளும், படித்த சில மனநல மருத்து வப் புத்தகங்களும் - அந்தப் பாத்திரங் களை உயிரோட்டத்துடன் உருவாக்க வும், உலவ விடவும் எங்களுக்குத் துணை வந்தன. மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

- வாசம் வீசும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x