Last Updated : 27 Feb, 2015 03:19 PM

 

Published : 27 Feb 2015 03:19 PM
Last Updated : 27 Feb 2015 03:19 PM

மூன்று அடி மேடையில் கிங்காங் அட்டகாசம்!

ஆசியாவின் மிகப்பெரிய தியேட்டரில் சினிமா பார்த்தவர்கள் என்ற பெருமைக்குரிய மதுரை மக்களை, உலகின் மிகச்சிறிய தியேட்டரில் நாடகம் பார்க்க வைத்துவிட்டார்கள் இங்கிலாந்தின் தி கிராண்ட் தியேட்டர் ஆப் லெம்மிங்ஸ் நிறுவனத்தினர். வெறும் மூன்று அடி அகலம், ஐந்து அடி நீளம் மட்டுமே கொண்டது இந்த தியேட்டர். படுக்க வைக்கப்பட்ட பீரோ மாதிரி இருக்கும் இந்தக் கலையரங்குக்குள் (தியேட்டர்), மேடை, பார்வையாளர் அரங்கு, டிக்கெட் கவுண்டர், அவசர வழி என அத்தனையும் உள்ளன.

முழுக்க முழுக்க ரசிகர்களைச் சிரிக்க வைப்பதற்கென்றே இப்படியொரு அரங்கத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு ஜோடி டயரை மட்டும் பொருத்திவிட்டு, இந்த மேடையை மோட்டார் சைக்கிளில் கட்டி ஊர் ஊராக இழுத்துச் செல்லலாம். ஊர் மந்தை, மரத்தடி, கண்மாய்க்கரை எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி நாடகத்தை நடத்திவிடலாம். நடிகர் சண்முகராஜாவின் நிகழ் நாடகக் குழுவினர் இவர்களை மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர். மதுரைக் கல்லூரியில் மாணவர்களுக்காகப் பிரத்யேகமாக நடந்த நாடகம் இனி உங்களுக்கு லைவ்வாக.

ஆச்சரியமும், சிரிப்பும்

நாடகம் தொடங்கியதும் நடிகர்களின் அறிமுகம். நடிகர் டேவிட், நடிகைகள் மேண்டி, கேஸி, ரோஸ் ஆகியோரின் அறிமுகம் சார்லி சாப்ளின் படம் போலப் படு வேடிக்கையாக இருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் என்றெழுதப்பட்ட டிக்கெட் கவுண்டரைத் திறந்தால் உள்ளே ஒட்டுமீசையுடன் ரோஸ் டிக்கெட் தருகிறார். ‘பயர் எக்ஸிட்’ இருப்பதைக் காட்டுவதற்காகக் குச்சியில் தீவைத்துக் கொண்டு அந்த வழியாக நுழைத்துக் காட்டுகிறார்கள். உள்ளே சோபா, படுக்கை, கழிப்பறை என அத்தனையும் உள்ளன.

நாடகத்தைக் காண வந்திருக்கிற பார்வையாளர்களில் இருவரைச் சிறப்புப் பார்வையாளராக அழைத்து, அந்தச் சிறு தியேட்டருக்குள் உட்கார வைக்கிறார்கள். முன்னதாகப் பார்வையாளர்களின் முதுகு அகலத்தை டேப் வைத்து அவர்கள் அளக்க சிரிப்பு அள்ளுகிறது. பார்வையாளர்கள் உள்ளே உட்கார்ந்ததும் நாடகம் தொடங்குகிறது.

கட்டாந்தரையில் வெள்ளித்திரை

நாடகத்தின் தலைப்பு கிங்காங் (நாம் சினிமா தியேட்டரில் பார்த்த அதே கிங்காங் படம்தான், இங்கே வெறும் நான்கு நடிகர்களைக் கொண்டு அரை மணி நேரத்தில் நிகழ்த்தப்படுகிறது). வெறுமனே மூன்று அடி அகலமுள்ள மேடைக்குள் எப்படி நாடகத்தை நடத்திக் காட்டுகிறார்கள் என்பதுதான் வேடிக்கையே. அந்த அரங்குக்கு மூன்று பக்கங்களிலும் வாசல் இருக்கிறது உள்ளே நுழைவதும், வெளியே வந்து நடிப்பதுமாக ரகளை செய்கிறார்கள்.

காட்சி 1

‘குட் ஹோப்’ என்று பெயருள்ள கப்பல் பசிபிக் கடலில் பயணிக்க ஆரம்பிக்கிறது. கப்பல் போல அட்டையில் வடிவமைக்கப்பட்ட தொப்பியை அணிந்து ரோஸ் அசைந்து அசைந்து நடக்கிறார். கேஸி கேப்டன் போல உடையணிந்து, பைப் புகைத்தபடி முன்னால் நடக்க, மாண்டியோ ஹாரன் அடித்தபடி வருகிறார். கப்பலில் போகிற பீலிங் பார்வையாளர்களுக்கும் வர வேண்டுமல்லவா? அதற்காகக் கூட்டத்தைப் பார்த்துத் தண்ணீரை ஸ்பிரே செய்கிறார்கள்.

காட்சி 2

மூடுபனி அடர்ந்த பாக் தீவைக் கப்பல் அடைகிறது. அதை உணர்த்துவதற்காகக் கோகுல் சாண்டல் பவுடரைக் கை நிறைய அள்ளி மேடையிலும், பார்வையாளர்களை நோக்கியும் வீசுகிறார்கள். ஆதிவாசிகள் கொப்பும் குலையுமாக உடையணிந்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள் (அதுவும் இவர்களே!). கப்பல் பயணிகள் ஜாலியாகத் தீவுக்குள் பயணிக்க, கிங்காங் (கேஸியின் மற்றொரு வேடம்) அறிமுகமாகிறது.

காட்சி 3

ரோஸ் வண்ணத்துப்பூச்சி வலையை வைத்துக் கொண்டு, தீவையே துவம்சம் செய்கிற அந்தக் கிங்காங்கைப் பிடிக்க முயல்கிறார். கடைசியில் வெடிகுண்டுகளை வீசுகிறார்கள். பதற்றத்தில் அவர்கள் தங்கள் ஆட்களுக்குள்ளேயே குண்டைத் தூக்கிப்போட்டுக் கொள்கிறார்கள். ஒரு வழியாக வெடிக்கும் நேரத்தில் சரியாக கிங்காங் பக்கத்தில் விழுகிறது. மயங்கிச் சரியும் கிங்காங் சங்கிலியால் கட்டப்படுகிறது.

இந்தக் காட்சி முடிந்தவுடன் இடைவேளை. நமக்கல்ல. பெட்டிக்குள் உட்கார்ந்து நாடகம் பார்க்கிற இரண்டு பேருக்கு மட்டும். அவர்களுக்கு வேடிக்கையான முறையில் கூல் டிரிங்ஸ் தருகிறார்கள். சாக்லேட்டும் கொடுக்கிறார்கள்.

காட்சி 4

நியூயார்க் சிட்டிக்கு கிங்காங் கொண்டுவரப்படுகிறது. அது சங்கிலியை அறுத்துக்கொண்டு அட்டூழியம் செய்கிறது. பார்வையாளராகிய நம்மையும் அச்சுறுத்துகிறது. அதனை வேட்டையாட ராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வலம் வருகின்றன. (நீண்ட குச்சியில் விமான, ஹெலிகாப்டர் பொம்மைகளைக் கட்டிக் கொண்டு குச்சியைச் சுழற்றுகிறார்கள்). கிங்காங் உயரமான கட்டிடத்தின் மீதேறி உறுமுகிறது.

காட்சி 5

(கிளைமாக்ஸ்) யாருக்கும் அடங்காத அந்த கிங்காங்கை நாயகி மேண்டி, ஒற்றை ரோஜாவை நீட்டி மடக்குகிறார். காதலில் விழுந்து, சாந்தமாகிறது கிங்காங். பொம்மைத் துப்பாக்கியால் அதைச் சுட்டுக்கொல்ல முயலும் போலீஸாரைப் பார்த்துக் கண்ணீருடன் கெஞ்சுகிறார் மாண்டி. (ஏற்கெனவே கர்சிப்பைத் தொப்பலாக நனைத்து வைத்துக் கொள்ளும் அவர், கண்ணைத் துடைத்துவிட்டு கர்சிப்பைப் பிழிய தண்ணீர் கொட்டுகிறது. பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.)

நாடக மேடையிலேயே நாயகி மாண்டிக்கு ஆஸ்கார் (மினியேச்சர் சிலையுடன்) விருது வழங்கப்படுகிறது. மறுபடியும் அவர் கண்ணீர்(!) விடுகிறார்.

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட இசை, நாடகத்தின் பின்னணியில் வருவது சுவாரசியம். தியேட்ட ருக்குள் உள்ள சிறு மேடையில் அவ்வப்போது திரைச்சீலையை மாற்றுகிறார்கள், நம்மூர் நாடக மேடையில் பின்னணித் திரையை மாற்றுவது போல. உரையாடல்கள் ஆங்கிலம்தான் என்றாலும் மிகமிகக் குறைவாகவே பேசப்படுகிறது. மற்றவை எல்லாம் நடிப்பு மற்றும் உடல்மொழி வாயிலாகவே புரிய வைக்கப்படுகின்றன. இந்த நாடகம் எங்கே தோன்றியது என்ற கேள்விக்கு, “இது இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகர் மார்சல் ஸ்டெயினர் என்பவரின் கற்பனையில் உருவான நாடக வடிவம். தனது முதல் காட்சியை லண்டன் நகர வீதியில் 1970-களில் அவர் நிகழ்த்திக் காட்டினார். இப்போது தி கிராண்ட் தியேட்டர் ஆப் லெம்மிங்ஸ் என்ற குழு சார்பில், நாங்கள் நாடகத்தை நடத்திவருகிறோம். இந்தியாவில் எங்கள் நாடகம் அரங்கேறியிருப்பது இதுவே முதல் முறை. ஆனால், இங்கே கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இங்கு வரலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது” என்கிறார் மூத்த நடிகர் டேவிட்.

நிகழ் நாடக இயக்கத்தின் இயக்குநரும், சினிமா நடிகருமான சண்முகராஜா, “இந்த நாடகம் உலகம் முழுக்கப் பிரபலமடைய, வித்தியாசமான சிந்தனையும், எளிய மேடையமைப்பும் ஒரு காரணம். நம்முடைய நாடகங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இது உதவும் என்பது எங்கள் நம்பிக்கை” என்கிறார்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x