Last Updated : 28 Feb, 2015 10:41 AM

 

Published : 28 Feb 2015 10:41 AM
Last Updated : 28 Feb 2015 10:41 AM

வருங்காலத்துக்கான கூரை

முந்தைய காலத்தில் மரங்களை வெட்டி அதைக் கட்டுமானப் பொருளாகக் கொண்டு கூரை வீடுகள் கட்டப்பட்டன. பிறகு ஓடுகள் போன்ற பலவிதமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கூரைகள் அமைக்கப்பட்டன.

கட்டுமானத் துறையின் வளர்ச்சி கூரை வீடுகளுக்கு விடை தந்தன. ஆனாலும் பாரம்பரிய வீடுகள் இன்றும் ஓடுகளுடன் அழகாகக் காட்சியளிக்கின்றன.

ஒருபக்கம் வீட்டுக் கட்டுமானத்துக்குக் கூரைகள் அமைப்பது குறைந்தாலும் இன்னொரு பக்கம் தொழிற்கூடங்கள் அமைக்க கூரைகள் பயன்படுத்துவது தொடர்ந்தது. ஆஸ்பெஸ்டாஸ் கட்டுமானப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்ததும் இது அதிகரித்தது.

சில வீடுகளும்கூட ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டன. ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பது மிக எளிது ஒப்பீட்டளவில் விலையும் மிகக் குறைவு. அதனால் வீட்டின் மாடிப் பகுதி பெரும்பாலும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் கொண்டு அமைக்கப்பட்டன. ஆனால், ஆஸ்பெஸ்டாஸ் கட்டுமானப் பொருளில் தீமைகள் உண்டு. அது வெப்பத்தை உமிழக் கூடியது.

இன்று கூரைகள் அமைப்பதில் பல புதிய தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. அவற்றுள் ஒன்றுதான் சிலிகான் பாலிகார்பனேட் கூரைகள்.

மாற்றுப் பொருட்களை நாம் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருப்பவை அதன் அனுகூலமான அம்சங்கள் தான். மேலும் கையாள்வதற்கு எளிதானதாக இருக்க வேண்டும். வெப்பத்தைத் தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும். பராமரிப்புச் செலவு குறைவாக இருக்க வேண்டும்.

விலையும் கட்டுக்குள் இருக்க வேண்டும். இம்மாதிரியான சிறப்பம்சங்களை இந்த சிலிகான் பாலி கார்பனேட் கொண்டுள்ளது. இந்தப் பொருள் கூரை அமைப் பதற்கு மட்டுமின்றி தளம் அமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

பாலி கார்பனேட்டின் சிறப்பம்சங்கள் இதன் எடை தாங்கும் திறன் மிக அதிகம். எளிதாகக் கையாளக் கூடிய அளவில் இதன் எடையும் மிகக் குறைவு. இதனால் கட்டுமானத்தைப் பிரிப்பதும் இடம் மாற்றுவதும் எளிது. மேலும் கட்டிடத்தின் மொத்த எடையும் இதனால் குறையும். கட்டுமானத்தின் உறுதி ஸ்டீல் கூரை கட்டுமானத்தைவிடவும் அதிகமாக இருக்கும்.

பிறகு ஸ்டீல் கூரைகளைப் பயன்படுத்தும்போது அவை துருப்பிடிக்கும், தேய்மானமும் ஆகும். ஆனால் இந்த மாற்றுப் பொருளில் அந்தக் கவலை இல்லை. இவை துருப்பிடிக்கும் தன்மை அற்றவை. கூரைக் கட்டுமானங்கள் மட்டுமின்றிக் கதவுகள், அலமாரிகள் போன்றவற்றின் கைப்பிடிகளையும் இதைக் கொண்டு தயாரிக்க முடியும். எடை குறைவாகவும் கையாள எளிதாகவும் இருக்கும்.

வெப்பம் அதிகமாகத் தாங்கும் வாய்ப்புள்ள கட்டிடப் பகுதிகளில் இந்த பாலி கார்பனேட் பொருட்களைப் பயன்படுத்தலாம். இது அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியது என்பதால் விபத்துகளைத் தவிர்க்கலாம். பாலி கார்பனேட் 200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கக் கூடியது. சிலிகான் பாலி கார்பனேட், கண்ணாடி, நைலான் ஆகியவற்றைக் கலந்து பாலி கார்பனேட் தயாரிக்கிறார்கள்.

பாலியெஸ்டர், பாலி அமைட் ஆகிய வேதிப் பொருள்களும் இதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தக் கலவையை விருப்பதிற்கேற்ப உருவாக்க குறைந்த நேரமே ஆகும். அதனால் உற்பத்திச் செலவு குறைவாகத்தான் இருக்கும்.

மேலும் இந்தப் பொருள்கள் இன்றைக்குச் சென்னையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால் கிடைப்பதும் மிக எளிது. கண்ணாடி, பிளாஸ்டிக், ஜிப்சம், ஃபைபர் போன்ற பொருட்களுக்கான பாலிகார்பனேட் சிறந்த மாற்றுப் பொருளாகும். இந்தப் பொருள் இப்போது சந்தையில் அதிகம் விரும்பப்படும் பொருள் எனச் சொல்லப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x