Published : 24 Feb 2015 12:34 PM
Last Updated : 24 Feb 2015 12:34 PM

தடையைத் தாண்டி வேலையைப் பிடிக்க: வாசகர் பக்கம்

படித்து முடித்த பின் கை நிறையச் சம்பளத்துடன் வேலை கிடைத்தால் போதும்! வேறென்ன வேண்டும்?

வேலை தேடுவோருக்குத் தடைகளாக இருப்பவை:

தன் விவரக் குறிப்பு

பயோ டேட்டா தான் உங்களுடைய உண்மையான முகம்! கையில் இருக்கும் பயோடேட்டாவில் உங்களுடைய லேட்டஸ்ட் தகவல்கள் அனைத்தும் இருக்கின்றனவா என்று ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.

அதில் உங்களுக்குத் தெரியாத ஒன்றைத் தெரியும் என குறிக்காதீர்கள். அப்படிச் செய்பவர்கள் நேர்காணலில் வெளியேற்றப்பட்டு விடுவார்கள்.

ஆப்டிடியூட் தேர்வு

தேவைக்கு அதிகமாக நேர்காணலுக்கு ஆட்கள் வரும்போது நிறுவனங்கள் ஆப்டிடியூட் டெஸ்ட் என்னும் தேர்வை வைக்கின்றன.

அந்த நிறுவனத்தின் ஆப்டிடியூட் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை இணையத்திலோ,தெரிந்தவர்கள் மூலமாகவோ தேடி எடுத்து, அந்த நிறுவனத்துக்கு ஏற்பத் தயாராகுங்கள்.

அந்தத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் பள்ளிக்கூடத்தில் படித்த கணக்கு தான்!

4 பேர் சேர்ந்து ஒரு வீட்டை 40 நாட்களில் கட்டினால் 3 பேர் அதே வீட்டைக் கட்ட எத்தனை நாட்கள் ஆகும்?

என்பன போன்ற கேள்விகள்தான் கேட்கப்படும். ஆர். எஸ். அகர்வால் எழுதிய 'குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட்' என்னும் புத்தகத்தைப் படித்தாலே போதுமானது.

சில நிறுவனங்களில் இவ்வகைக் கணக்குகளோடு சேர்த்து விடுகதைகளையும் தேர்வில் வைத்திருப்பார்கள். எளிமையான விடுகதைகளாகத் தான் இருக்கும்.

வேறு சில நிறுவனங்களில் ‘வெர்பல்’ எனப்படும் ஆங்கிலம் அறி தேர்வு நடத்துவார்கள். ஒரு ஆங்கில வார்த்தையைக் கொடுத்து அதற்கான அர்த்தம் என்ன என்பதற்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றுள் சரியானதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதற்கும் நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. 40 கேள்விகளை ஒரு மணிநேரத்தில் முடிக்கச் சொல்வார்கள். ஒழுங்கான தயாரிப்பு இல்லை என்றால் நேரப் பற்றாக்குறையில் சிக்கிக்கொள்வீர்கள்.

நேர்காணல்

நீங்களும் நிறுவன அதிகாரிகளும் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கப் போகிறீர்கள். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். எனவே நல்ல உடை உடுத்தி நேர்காணலுக்குச் செல்லுங்கள்.

# முன்னதாகவே நேர்காணலுக்குச் செல்லுங்கள். கடைசி நிமிடத்தில் கிளம்பாதீர்கள். போக்குவரத்து நெருக்கடியில் மாட்டினால் அதுவே உங்களுடைய மன நிலையை மாற்றிவிடும். சரியில்லாத மன நிலையுடன் நேர்காணலில் இருப்பதே பாதித் தோல்வி.

# நேர்காணல் அறைக்குள் போவதற்கு முன், உங்கள் செல்போனை அமைதியாக்குங்கள்.

# நேர்காணலின் முதல் கேள்வி பெரும்பாலும் ‘உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்' என்பதாகத்தான் இருக்கும். அக்கேள்விக்குத் தயாராகச் செல்லுங்கள்.

# நேர்காணல் என்பது ஒரு கலந்துரையாடல்தான். வந்திருப்பவர் - நம்முடைய நிறுவனத்துக்கு ஏற்றவரா, வேலைக்கு ஏற்றவரா, வந்திருப்பவரை வைத்து வேலை வாங்க முடியுமா, நீண்ட காலம் நம்மோடு இருப்பாரா என்று நிறுவனங்கள் சோதிக்கின்றன. எனவே, எந்தக் கேள்விக்கும் பொய்யான பதிலைச் சொல்லி விடாதீர்கள். உங்களை நிராகரித்துவிடுவார்கள்.

# தவிர்க்க முடியாத நேரங்களில், உண்மையை மறைக்கலாம்; தப்பில்லை. ஆனால் பொய் சொல்லக் கூடாது.

# நேர்காணலில் நீங்கள் சொல்லும் முதல் பதிலில் இருந்துதான் அடுத்த கேள்வியே கேட்பார்கள். எனவே ஒவ்வொரு பதிலையும் கவனமாகச் சொல்லுங்கள். எக்காரணம் கொண்டும் கவர்வதற்காகத் தவறான பதில்களைச் சொல்லாதீர்கள்.

# விரிவாக்கங்கள் வேண்டாம்

# ‘SPB' என்பவர் யார்? என்று ஒருவர் உங்களிடம் கேட்டால் ‘S.P. பாலசுப்பிரமணியம்' என்றா சொல்வீர்கள்? அவர் ஒரு பாடகர், பல படங்களில் நடித்திருக்கிறார், இசையமைத்திருக்கிறார் என்று உங்களுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்வீர்கள் அல்லவா? அதே போல் தான் நேர்காணலும்!

# ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் ‘OOPs' என்றால் என்ன? என்று கேட்கிறார்கள்; அதற்கு ‘Object Oriented Programming' என்று விரிவாக்கம் மட்டும் சொல்லக் கூடாது.

# ஒரு வரி பதில்கள் கூடாது

நேர்காணல் என்பது ஒரு கலந்துரையாடல். ஒரு வரி பதில்களோ, ஒரு வார்த்தை பதில்களோ அந்தக் கலந்துரையாடலை நீர்த்துப் போக வைத்து விடும். கூடியவரை விரிவான விளக்கங்களைக் கொடுக்க முயலுங்கள்.

நிறுவனம் பற்றிய புரிதல்

நீங்கள் எந்த நிறுவனத்துக்குப் போகிறீர்களோ, அந்த நிறுவனத்தைப் பற்றிய அடிப்படை விவரங்கள் உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். நேர்காணலில் ‘எங்க நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்' எனக் கேள்வி வரும்.

# நீங்கள் எத்தனை ஆண்டுகள் எங்கள் நிறுவனத்தில் இருப்பீர்கள்?

# வேறொரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தால் அங்கு போய் விடுவீர்களா?

# இங்கு உங்களைச் சக்கையாகப் பிழிந்து விடுவார்கள். பரவாயில்லையா?

# இன்னும் மூன்று ஆண்டுகளில் என்னவாக விரும்புகிறீர்கள்?

# எங்களிடம் இரண்டாண்டு காலம் ஒப்பந்தம் (பாண்டு) இருக்கிறது. அதற்கு ஒப்புக்கொள்கிறீர்களா?

போன்ற கடினமானக் கேள்விகளும் கேட்கப்படும். பொய் சொல்லக் கூடாது; ஆனால், உண்மையை மறைக்கலாம் என்னும் விதி இங்கும் பொருந்தும்.

கடைசி கேள்வி:

நேர்காணலின் முடிவில், ‘நீங்கள் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா?' என்று பல நிறுவனங்களில் கேட்பார்கள். எதிர்மறைக் கேள்விகளைத் தவிர்த்து விடுங்கள்.

நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் வேலைக்குச் சேர்வதற்கு முன் ஏதாவது படித்து வர வேண்டுமா?

என்பன போன்ற கேள்விகளைக் கேட்கலாம்.

இந்த தடைகளை எல்லாம் தாண்டிட்டா, இனி நீங்கள் வேலையை நோக்கி நடையைப் போடலாம்.

- முத்து, சென்னை.

தொடர்புக்கு: muthu@payilagam.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x