Last Updated : 14 Feb, 2015 03:01 PM

 

Published : 14 Feb 2015 03:01 PM
Last Updated : 14 Feb 2015 03:01 PM

விவசாயிகளுக்கு வழிகாட்டிய விடிவெள்ளி

வேளாண்மையில் வேதி உரங்களின் வரைமுறையற்ற பயன்பாட்டை அன்றைக்கே எதிர்த்தார் குமரப்பா. அவருடைய மறைவுக்குப் பின்னர் வெளியான ரேச்சல் கார்சனின் ‘மௌன வசந்தம்', பூச்சிக்கொல்லிகளின் தீமைகளைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறியது.

குமரப்பாவின் நூலகத் தொகுப்பில் ரூடால்ஃப் ஸ்டெய்னரின் உயிரித்துனைமப் பண்ணையம் (Biodynamic Farming) பற்றிய நூல் இருந்துள்ளது. உழவர்கள் தற்சார்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதில் குமரப்பா உறுதியாக இருந்துள்ளார். உழவர்களின் கைகளில் வேதி உரங்களைக் கொடுப்பது அடிமுட்டாள்தனம் (sheer folly) என்று எழுதினார் (Gram Udyog Patrika, 9(9),9(10), September and October 1947).

சமத்துவச் சாகுபடி

வேளாண்மை என்பது தொழில்மயப்படுத்தப்பட்டது அன்று, அது வாழ்தொழில் முறை (Industry Vs Occupation) என்றார். உணவுப் பொருள் விளைச்சலில் அதிகம் கவனம் செலுத்துவது, மட்கு உரம், தொழுவுரம் ஆகியவற்றால் மட்டுமே மண்ணுக்குச் செழிப்பூட்டுவது என்று வேளாண்மைக்கான திட்டத்தை முன்வைத்தார்.

அது மட்டுமல்ல மக்களுக்கான ஊட்டம் மிக்க உணவை உருவாக்கக்கூடிய சாகுபடித் திட்டத்தைப் பரிந்துரைத்தார். இவற்றிலிருந்து அவருடைய நெடிய ஆழமான பார்வை வியக்க வைக்கிறது. இதைச் சமத்துவச் சாகுபடி (Balance cultivation) என்று அவர் குறிப்பிட்டார்.

14 சென்ட் போதும்

குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கான தவசங்கள், பருப்புகள், காய்கறிகள், பால் ஆகியவற்றை உள்ளடக்கிய 2,800 கலோரித் தேவையை நிறைவு செய்யும் வகையிலான சாகுபடியும் அவர்களுக்குத் தேவையான துணியைத் தரக்கூடிய அளவிலான பருத்தியும் விளைவிக்க வேண்டும் என்று விவரித்தார்.

அது மட்டுமல்ல பண்ணையாளரின் விருப்பத்துக்கான சாகுபடிக்கு மாறாக, உள்ளூர் மக்களின் தேவைக்கான சாகுபடியே வேண்டும் என்றார். அவருடைய கணக்கு படி ஆளொன்றுக்கு 14 சென்ட் பரப்பளவில் போதுமான உணவை விளைவித்துக்கொள்ள முடியும்.

கியூபாவில் முதலில் ஒட்டுமொத்தமாகக் கரும்பை விளைவித்ததும், பின்னர்க் கடும் நெருக்கடியைச் சந்தித்து இப்போது பரவல்மயப்படுத்தப்பட்ட 'குமரப்பா பாணி' வேளாண்மையில் ஈடுபட்டு, சிக்கலில் இருந்து மீண்டுள்ளதையும் நாம் அறிவோம்.

நேருவின் அமெரிக்கப் பாசம்

சோவியத் நாட்டுடன்தான் இந்தியாவுக்கு நட்புறவு உண்டு என்று கருதியபோது அமெரிக்காவுடன் நேரு அரசாங்கம் கொண்டிருந்த ‘நட்பை' குமரப்பா போட்டு உடைத்தார் என்றே கூற வேண்டும். குறிப்பாக உணவு தவசங்களையும், நிதியையும் கொடுத்துத் தனது ஆளுமையைத் திணித்தது அமெரிக்கா.

அதன் விளைவாகவே இந்திய உழவர்களை ஓட்டாண்டியாக்கிய ‘பசுமைப் புரட்சி' இந்தியாவினுள் நுழைந்தது. இந்தியாவில் ‘சிவப்பு காய்ச்சல்' வந்துவிடக் கூடாது என்று போலியாக அச்சுறுத்தி, இந்தியாவுக்கான அன்றைய அமெரிக்கத் தூதரான செஸ்டர் பவுல்ஸ் மூலம் பரப்புரைகள் நடந்தன.

இந்தப் பின்னணியில் இந்தியாவுக்கு ‘உதவி'யாக 10,000 அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்பட்டன. இதை, இந்தியாவின் கழுத்தில் அமெரிக்கா மாட்டும் சுருக்குக் கயிறு என்றே குமரப்பா கூறினார். நேரு, சோவியத்தின் நண்பர், அமெரிக்காவின் எதிர்ப்பாளர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் அறிவாணர்களுக்கு, இது சற்று அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கக்கூடும்.

நுழைந்தது அமெரிக்கா

அதிக உணவுப் பயிர் வளர்ச்சி (Grow More Food) என்ற பெயரில் ஆல்பர்ட் மேயர் என்ற அமெரிக்கரைக் கொண்ட திட்டத்தை நேரு அரசு அனுமதித்தது, குமரப்பாவுக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. இத்திட்டம் 1948-52 ஆண்டளவில் உத்தரப்பிரதேசத்தில் எடாவா என்ற இடத்தில் செயல்படுத்தப்பட்டது.

ஏற்கனவே, மிகத் தெளிவாக இந்திய ஊரகப் பகுதிகளுக்கான திட்டங்கள், காந்தியப் பொருளியல் முறையில் தீட்டப்பட்டு இருந்தன. இதற்காகக் குமரப்பா கடுமையாக உழைத்து, மக்களின் உண்மையான நிலைமை என்ன என்பது பற்றிய தரவுகளைத் திரட்டி உருவாக்கி இருந்தார்.

ஆனால், அதற்கு மாறாக அமெரிக்கப் பொறியாளர் ஒருவரைக் கொண்டு சமுதாய மேம்பாட்டு திட்டம் முன்மொழியப்பட்டதைக் குமரப்பாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்க ‘வல்லுநர்'களின் வருகையால் இந்தியா தனது தற்சார்பான வளர்ச்சியை இழந்ததோடு, தனது சிக்கல்களைத் தானே தீர்த்துக்கொள்ளும் திறனையும் இழந்துவிட்டதை வேதனையுடன் குமரப்பா சுட்டிக்காட்டினார் (Gram Udyog Patrika, 14(9), September 1952).

அவர் அச்சப்பட்டது போலவே நடந்தது. முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில் சமுதாய மேம்பாட்டுக்காக 15 சதவீதத்துக்கும் குறைவாகவே செலவிடப்பட்டது. குமரப்பாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அனைத்திந்தியச் சிற்றூர் தொழில்கள் இணையமும் நூற்போர் இணையமும் அரசாங்கத்தால் ‘எடுத்துக்கொள்ளப்பட்டன'. கிட்டத்தட்ட ஒரு வெளியாள் போல ஆக்கப்பட்டார் குமரப்பா.

விழித்துக்கொள்வோமா?

இன்றைக்கு உரமானியத்தைக் குறைக்க வேண்டும், அது நாட்டுக்குச் சிக்கலாக உள்ளது என்று நமது ஆட்சியாளர்கள் இன்றைக்குக் கூறுகிறார்கள். ஆனால், அன்றைக்கே ரசாயன உரங்களைக் குமரப்பா கடுமையாக எதிர்த்தார். அவரது தொலைநோக்கு இன்று உண்மையாகி வருகிறது.

இந்திய உழவர்களை முட்டுச் சந்தில் விட்டுவிட்ட பெருமையை, நமது ஆட்சியாளர்கள் தட்டிச் சென்றுள்ளனர். அன்று அவரைக் கிண்டலும் கேலியும் பேசியவர்கள் இன்றைக்குக் கை பிசைந்து நிற்கின்றனர். இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. அவரது சிந்தனைகளைத் தூசி தட்டி எடுத்துப் பயன்படுத்தினாலே போதும். மனம் வருமா ‘நம் ஆட்சியாளர்களுக்கு'?

கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்.

தொடர்புக்கு: adisilmail@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x