Published : 25 Feb 2015 12:12 PM
Last Updated : 25 Feb 2015 12:12 PM

மனிதனை மிதக்க வைக்கும் கடல்

கடலில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற செய்தியை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால், ஜோர்டான் நாட்டில் மரணக் கடல் என்றழைக்கப்படும் சாக்கடலில் குதித்தால், அதில் மூழ்கி இறக்கவே மாட்டோம். இது எப்படிச் சாத்தியம்? ஒரு சின்ன பரிசோதனை செய்தால், அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டை, கண்ணாடி, பாட்டில், உப்பு, தண்ணீர், ஸ்பூன்.

சோதனை:

1. ஒரு கண்ணாடி பாட்டிலில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். முட்டையை அப்படியே பாட்டிலில் உள்ள நீரில் மெதுவாகப் போடுங்கள். நீரின் அடியில் போய் முட்டை தங்கிவிடும். அதே முட்டையை மிதக்க வைக்கவும் முடியும். முயன்று பார்ப்போமா?

2. பாட்டிலில் போட்ட முட்டையை வெளியே எடுத்துவிடுங்கள். இப்போது பாட்டிலில் உள்ள தண்ணீரில் நான்கு அல்லது ஐந்து ஸ்பூன் உப்பை நீரில் போட்டு நன்றாகக் கலக்குங்கள்.

3. இப்போது முட்டையை மெதுவாக நீரில் போடுங்கள். முன்பு அடியில் மூழ்கிய முட்டை, இப்போது மிதப்பதைப் பார்க்கலாம். முட்டை எப்படி மிதக்கிறது? அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

நடப்பது என்ன?

சாதாரண நீரில் முட்டையைப் போட்டபோது முட்டை மூழ்கிவிட்டதல்லவா? அதாவது, முட்டையின் அடர்த்தி நீரின் அடர்த்தியைவிட அதிகம். அதனால்தான் முட்டை நீரில் மூழ்கிவிட்டது. இரண்டாவதாக, உப்பைக் கரைத்த நீரில் முட்டை மிதந்தது அல்லவா? நீரில் உப்பைக் கரைத்தவுடன் உப்புக் கரைசலின் அடர்த்தி அதிகமாகிறது. உப்புக் கரைசலின் அடர்த்தியைவிட முட்டையின் அடர்த்தி குறைவு. எனவேதான் முட்டை மிதந்தது.

ஒரு திடப் பொருள் ஒரு திரவத்தில் மூழ்குவதும் மிதப்பதும் பொருளின் அடர்த்தியையும் திரவத்தின் அடர்த்தியையும் பொறுத்தது. இதுதான் ஆர்க்கிமிடீஸின் மிதத்தல் விதி.

இப்போது மீண்டும் சோதனையைச் செய்வோமா?

4. முட்டையை வெளியே எடுத்துவிட்டு உப்புக் கரைசல் உள்ள பாட்டிலில் மெதுவாக நீரை ஊற்றுங்கள். இப்போது முட்டையை மீண்டும் நீரில் போடுங்கள். இப்போது முட்டை மூழ்குமா, மிதக்குமா?

5. முட்டை நீர்ப்பரப்பின் மேலே இல்லாமலும், நீரின் அடியில் இல்லாமலும் உப்புக் கரைசலும், புதிதாக ஊற்றப்பட்ட நீரும் சந்திக்கும் இடத்தில் நிற்கும். இதற்கு என்ன காரணம்?

பாட்டிலின் கீழ்ப்பாதியில் அடர்த்தி மிகுந்த உப்புக் கரைசல் உள்ளது. மேல் பாதியில் ஊற்றப்பட்ட அடர்த்தி குறைந்த நீர் உள்ளது. எனவே முட்டையின் கீழ்பாதி உப்புக் கரைசலில் மிதக்கச் செய்கிறது. மேல்பாதி நீரில் மூழ்குகிறது.

5. இப்போது முட்டையை வெளியே எடுங்கள். கரண்டியால் பாட்டிலில் உள்ள கரைசலைக் கலக்கிவிடுங்கள். இப்போது முட்டையைப் போடுங்கள். என்ன நடக்கிறது என்பதை நீங்களே செய்து பாருங்கள்.

பயன்பாடு

உப்பு நீரைக் கடல் நீராகவும் முட்டையை மனிதனாகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஜோர்டான் நாட்டில் உள்ள மரணக் கடலில் மல்லாந்து படுத்துகொண்டு நீங்கள் மாயாபஜார் படிக்கலாம். எப்படி?

முட்டையின் அடர்த்தியைவிட உப்புக் கரைசலின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் முட்டை மிதக்கிறது இல்லையா? அதேபோல மனிதர்களின் அடர்த்தியைவிட மரணக் கடலில் உள்ள உப்பு நீரின் அடர்த்தி மிகமிக அதிகம். அதனால் மரணக் கடலில் குதித்தாலும் மூழ்குவதில்லை. மற்ற பகுதிகளில் உள்ள கடல்களில் உள்ள உப்பு நீரின் அடர்த்தியைவிட மரணக் கடலில் ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகம். இப்போது புரிகிறதா, ஏன் மூழ்கவில்லை என்று.

அது சரி, சாக்கடல் அல்லது மரணக் கடல் என்று எப்படிப் பெயர் வந்தது? நீரில் உள்ள அதிக உப்பு காரணமாக மீன், நண்டு போன்ற உயிரினங்களும், கடல்வாழ் தாவரங்களும் வாழ அந்த நீர் தகுதியற்றது. எனவேதான் அதை மரணக் கடல் நீர் என்று கூறுகிறார்கள். அப்புறம் இன்னொரு செய்தி, பூமியிலே கடல் மட்டத்துக்குக் கீழே 417 மீட்டர் ஆழத்தில் உள்ள மிகத் தாழ்ந்த பகுதி மரணக் கடல் தான்.

பட உதவி: அ.சுப்பையா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x