Last Updated : 18 Feb, 2015 12:14 PM

 

Published : 18 Feb 2015 12:14 PM
Last Updated : 18 Feb 2015 12:14 PM

துப்பாக்கியை வாழைப்பழமாக்கிய மந்திரவாதி

உங்கள் முன்னால் இருப்பவரை ஒரு கையசைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தால், எவ்ளோ சூப்பரா இருக்கும்? இல்லாத ஒரு பொருள் இருப்பதைப் போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கினால் என்னென்னவெல்லாம் செய்யலாம்?

உதாரணமாக, ஹோம்வொர்க் நோட்டில் எழுதியதைப் போல் தோற்றத்தை உருவாக்க முடிந்தால், அது ஜாலியான ஒரு வரம் இல்லையா?

இப்படி அதீதக் கற்பனைகளின் விளைவாக உருவான காமிக்ஸ் ஹீரோதான் மந்திரவாதி மாண்ட்ரேக். இவர் மனோவசியம் (ஹிப்னாடிசம்) மூலமாகத் தான் நினைத்ததைச் சாதிக்கும் திறமை படைத்தவர்.

உலகின் முதல் காமிக்ஸ் சூப்பர்ஹீரோ கதாபாத்திரம் சூப்பர்மேன் என்றே எல்லோரும் சொல்வார்கள். ஆனால், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே உருவான மந்திரவாதி மாண்ட்ரேக்தான், அந்தப் பட்டத்துக்கு நிஜமான சொந்தக்காரர்.

உருவான கதை:

சிறு வயது முதலே மாயாஜாலத்திலும் மந்திர வித்தைகளிலும் ஆர்வம் கொண்டவரான லீ பாஃக், தன் உருவத்தையே மாடலாகக் கொண்டு 19 வயதில் மந்திரவாதி மாண்ட்ரேக் கதாபாத்திரத்தை உருவாக்கினார்.

ஆரம்பகால மாண்ட்ரேக் கதைகளுக்கு இவரே ஓவியமும் வரைந்தார். முதல் கதையை இதழில் காண பத்தாண்டுகள் காத்திருந்தார். பிறகு தன்னுடைய கதை சொல்லும் திறமை முக்கியமானது என்பதை உணர்ந்து, ஃபில் டேவிசை ஓவியம் வரைய வைத்தார்.

மாண்ட்ரேக்கின் கதை:

மந்திரக் கல்லூரியின் முதல்வரான தெரோனுக்கு வயது 400. இவர் தன்னிடமுள்ள இரண்டு அயல்கிரக சக்திப் படிகங்களின் மூலம் மனவலிமையைப் பெறுகிறார்.

சக்திப் படிகத்தைத் திருட அதே கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் லூசிபர் முயல்வதைக் கல்லூரியின் மிகச் சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெறும் மாண்ட்ரேக் தடுத்து, அவரது விரோதத்துக்கு ஆளாகிறார்.

இதனால் தெரோனுக்கு நெருக்கமாகிறார் மாண்ட்ரேக். அவர்தான் தன்னுடைய தந்தை என்பதையும் அறிகிறார். பின்னர் அவரிடமிருந்து ஒரு சக்திப் படிகத்தைப் பெற்றுக் கல்லூரியைவிட்டு வெளியேறுகிறார். பின்னர் அமெரிக்காவில் குடியேறி குற்றங்களுக்கு எதிராகப் போராடத் தொடங்குகிறார்.

தன்னைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு நாட்டின் ஜனாதிபதியைக் காப்பாற்ற, அவரைப் போலவே நடிக்கிறார். இதற்கு நன்றியாக மாண்ட்ரேக் ஆசைப்பட்ட அரண்மனை போன்ற ஒரு மாளிகையை அவருக்குப் பரிசளிக்கிறார் அந்த ஜனாதிபதி. பல பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட இந்தக் கோட்டையே மாண்ட்ரேக்கின் வசிப்பிடமான ஜாநாடு.

கதை அமைப்பு:

மாண்ட்ரேக்கின் மந்திரச் சக்தி எப்படிப் பயன்படுகிறது என்பதை ஒரு சம்பவத்தின் மூலம் விளக்கலாம். ஒரு விமானத்தைக் கடத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிக்குத் தகவல் வருகிறது. அவர் மாண்ட்ரேக்கை விமானத்தில் அனுப்பி வைக்கிறார்.

காவலையும் மீறி விமானத்தை ஆயுதங்களுடன் கடத்த முயலும் தீவிரவாதிகளை நேருக்கு நேராகச் சந்திக்கிறார் மாண்ட்ரேக். உடனே தன்னுடைய ஹிப்னாடிசத்தால் அவர்களுடைய துப்பாக்கியை வாழைப்பழமாகத் தோன்ற வைக்கிறார். பின்னர் மனோவசியத்தால் அவர்களைக் கட்டுப்படுத்தி ஆயுதங்களை விமானத்துக்குள் கடத்த உதவிய நபரையும் கண்டுபிடிக்கிறார்.

நண்பர்கள்

லோதர்:

உலகிலேயே மிகவும் பலசாலியான லோதர், ஏழு ஆப்பிரிக்க நாடுகளின் இளவரசர். யானையையே தன்னுடைய ஒரே கையால் தூக்கிவிடும் அளவுக்குப் பலசாலி இவர். மாண்ட்ரேக் உடன் சேர்ந்து குற்றங்களுக்கு எதிராகப் போராடுபவர். ஆப்பிரிக்க மாடல் அழகி கார்மா, லோதரின் தோழி.

நர்தா:

ஐரோப்பிய நாடான கோகைனின் இளவரசியான நர்தா, ஒரு தற்காப்புக் கலை நிபுணர். தனது நாட்டைச் சகோதரன் செக்ரிட்டிடம் ஒப்படைத்துவிட்டு மாண்ட்ரேக்குடன் வசிப்பவர். 1997-ல் மாண்ட்ரேக்கைத் திருமணம் செய்துகொண்டார்.

ஹோஜோ:

ஆறு மொழிகள் பேசும் வல்லுநரான ஹோஜோ, மாண்ட்ரேக் வீட்டுச் சமையல்காரர். இது வெளியுலகுக்குத் தெரிந்தாலும், உண்மையில் குற்றங்களுக்கெதிரான இன்டர் இன்டெல் என்னும் சர்வதேச அமைப்பின் மர்மத் தலைவர் அவர்.

போலீஸ் தலைவர் பிராட்லி:

மாண்ட்ரேக்கின் நண்பரான போலீஸ் தலைவர் நம்ப முடியாத, அசாதாரண வழக்குகளுக்கு என்றே ஒரு தனிப்பிரிவைத் தொடங்கி வைத்துள்ளார்.

மாக்னான்:

பூமி முதலான அனைத்துக் கோள்களைக் கொண்ட பால்வெளியின் பேரரசரான இவருக்கு, மாண்ட்ரேக் பலமுறை உதவியுள்ளார்.

எதிரிகள்

கோப்ரா:

மாண்ட்ரேக்கின் முன்னாள் ஆசிரியரான லூசிபர், அவர் வசமிருக்கும் சக்திப் படிகத்தை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பதை வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்படுபவர். இவர் ஒரு வகையில் மாண்ட்ரேக்குக்கு அண்ணன். ஒரு முறை மாண்ட்ரேக்குடனான போராட்டத்தில், முகத்தின் ஒரு பகுதி தீயில் பாதிக்கப்பட்டதால் வெள்ளி முகமூடி அணிந்து செயல்பட்ட இவர், பின்னாளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, முக அமைப்பையே மாற்றிக் கொண்டவர்.

எத்தர் கும்பல் 8:

குற்றமிழைத்துவிட்டு அங்கே அடையாளமாக எட்டாம் எண்ணை விட்டுச் செல்லும் இந்தக் கும்பல், பல நூற்றாண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ஆக்டன் என்ற பெயரில் அழைக்கப்படும் இவர்களுடைய மர்மத் தலைவன் யாரென்றே தெரியாது. இவர்களுடைய தலைமையகத்தை அழிக்க மாண்ட்ரேக் போராடுவது இந்தத் தொடரின் சுவாரசியங்களில் ஒன்று.

டெரெக்:

மாண்ட்ரேக்கின் சகோதரனான டெரெக், தன்னுடைய மந்திர சக்தியைத் தவறான வழியில் பயன்படுத்த நினைப்பவர். இவருடைய மந்திர வித்தைகளை மாண்ட்ரேக் மறக்கச் செய்துள்ளார்.

மாண்ட்ரேக் கதைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

# அயல்கிரகவாசிகள்

# புதிய விஞ்ஞானக் கருவிகளைக் கொண்ட எத்தர்கள்

# உலகத்தை ஆள நினைக்கும் வில்லன்கள்

தமிழில் மாண்ட்ரேக்:

இந்திரஜால் காமிக்ஸ் மூலமாக இருநூறுக்கும் மேற்பட்ட மாண்ட்ரேக் கதைகள் தமிழில் வெளியாகியுள்ளன. இதைத் தவிர முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ், தினமலர் சிறுவர் மலர், தினத்தந்தி ஞாயிறு மலர், தினமணி என்று பல வடிவங்களில் மாண்ட்ரேக் தமிழில் பேசியுள்ளார்.

உருவாக்கியவர்: லீ பாஃக்

காமிக்ஸ் படைப்பாளிகள்: ஃபில் டேவிஸ் & ஃபிரெட் ஃபிரெட்ரிக்ஸ் (ஓவியர்கள்)

முதலில் தோன்றிய தேதி: ஜூன் 11, 1934

பெயர்: மந்திரவாதி மாண்ட்ரேக்

வசிப்பது: ஜாநாடு என்ற மலைக்கோட்டை மாளிகையில்.

விசேஷச் சக்தி: ஹிப்னாடிசம் மூலமாக மனிதர்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தவர், இல்லாத பொருட்களை இருப்பதாக நம்பவைக்கும் திறமைசாலி.

தொழில்: மாயாஜால நிபுணர், நீதியின் காவலர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x