Last Updated : 27 Feb, 2015 02:54 PM

 

Published : 27 Feb 2015 02:54 PM
Last Updated : 27 Feb 2015 02:54 PM

தனி இசை: மொட்டை மாடியில் இசை மழை

விண்ணில் முளைத்த ஆரஞ்சுப் பழம் போல இருந்தது அஸ்தமனத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்த சூரியன். பரபரப்பான சென்னையின் மையத்தில் ஓர் அமைதியான தெரு. அதில் காலாற நடந்துகொண்டிருந்தபோது தூரத்திலிருந்து வந்த அபூர்வமான இசை காதுகளை இதமாக வருடியது. இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் ஒன்றாக இணைந்து உருவாக்கிய ஆல்பம் போல மனதை மயக்கிய அந்த இசை வந்த திசை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

இசையின் ஒலி வலுத்தபோது நிமிர்ந்து பார்த்தால், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மொட்டை மாடியில் முப்பது, நாற்பது இளைஞர்கள் உற்சாகமாக வெவ்வேறு இசைக் கருவிகளில் இந்திய இசையோடு மேற்கத்திய இசையைப் பிணைத்து இசைத்துக்கொண்டிருந்தார்கள். இளம் நடனக் கலைஞர்கள் நளினமான நடன அசைவுகளால் இடத்தை அலங்கரித்தார்கள்.

ஓவியர்கள் சிலர் அங்கு பிரவாகமாகப் பொங்கி எழுந்த இசையைத் தூரிகை கொண்டு ஓவியமாக வரைந்துகொண்டிருந்தனர். இளைய தலைமுறை திரைப்பட இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் சிலர் தன்னை மறந்து அனைத்தையும் ரசித்துக்கொண்டிருந்தார்கள். மொட்டை மாடியில் இதுவரை கேட்டிராத இசை மூலம் வானை வானவில்லாக மாற்றும் இந்த இளைஞர்கள் யார்?

ஆர்கெஸ்ட்ரா அல்ல

சென்னையில் உள்ள தனிப்பட்ட இசைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்தான் இவர்கள். ‘டெரஸ் ஜாமிங்’ என்ற பெயரில் இளைஞர்களின் இசை சங்கமத்தை நடத்திக் கொண்டிருப்பவர் கிரிநந்த். “சென்னையில் எத்தனையோ இசை பேண்டுகள் உள்ளன. வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த இளம் இசைக் கலைஞர்கள் ஒரே இடத்தில் சங்கமித்தால் எப்படியிருக்கும் என யோசித்தோம்.

அதனால்தான் டெரஸ் ஜாமிங் என்ற நிகழ்ச்சியை இங்கு நடத்துகிறோம்” என்றார். அட! இசைக் குழுக்களா, எக்கச்சக்கமான சினிமா பாடல்களைக் கூறுகட்டிப் பாடுவார்கள். இதைத்தான் இன்றைக்குத் தெருவுக்குத் தெரு செய்து கொண்டிருக்கிறார்களே என நினைத்தால் அது முற்றிலும் தவறு. இவர்கள் மற்றவர்களின் இசையை மீட்டுருவாக்கம் செய்யும் ஆர்கெஸ்ட்ரா கலைஞர்கள் அல்ல. இசை பேண்டில் (musical band) உள்ள இசைக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் இசை அமைப்பாளர்கள்தான்.

சொந்தமாக இசை ஆல்பங்களை கம்போஸ் செய்பவர்கள். அதை விடவும், இவர்கள் தாங்கள் இசை அமைத்த இசைக் கோவையை அரங்கேற்றும்போது ஒரு முறை இசைத்தது போலவே மறுமுறை இசைக்க மாட்டார்கள். மனோலயத்துக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் புதுப்புது வடிவங்களில் இசை விருந்து படைப்பார்கள். அதிலும் ஆசியாவின் இளைய ஃபியூஷன் இசை பேண்ட் என்ற புகழ் கிரிநந்தின் ஆக்ஸிஜன் பேண்டைச் சேரும்.

இசைக்கு ஆக்ஸிஜன் தருபவர்கள்

கடந்த பதினோரு ஆண்டுகளில் நான்கு இசை ஆல்பங்கள், இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தனிப் பாடல்கள், பல்வேறு நாடுகளில் 250 இசைக் கச்சேரிகள், ஏ.ஆர்.ரஹ்மான், அருணா சாய் ராம், சர்வதேச இசை ஜாம்பவான்கள் பலருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளைத் தந்து வரும் இளைஞர்கள் இவர்கள்.

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன், பாடகர் பிரதீப் குமார் ஆகியோர் 2005-ல் இவர்கள் பேண்டில் இணைந்து பணியாற்றியவர்கள். ஆக்ஸிஜனின் கீபோர்ட் கலைஞர் மற்றும் இசை அமைப்பாளரான கிரிநந்த் கைவசம் தற்போது மூன்று தமிழ் திரைப்படங்கள் உள்ளன. இவருடைய ஆரா மியூசிக் ஸ்டுடியோவில் பல திரைப்படங்களுக்கான ஒலிக் கலவை செய்யப்படுகிறது.

பிரண்ட்ஷிப் பேண்ட்

2003-ல் கிரிநந்த் ஆக்ஸிஜன் பேண்டைத் தொடங்கியபோது அவர் 12-ம் வகுப்பு மாணவர். ஆக்ஸிஜன் பேண்டின் டிரம்ஸ் கலைஞரான பிரித்வி குமார், மிருதங்கம், கடம் உள்ளிட்ட தாள வித்வானான கே.எஸ்.ரமணா, வயலின் கலைஞரான கார்த்திக், பாஸ் கலைஞரான பாரத் ராம், மெலோடியன் கலைஞர் மற்றும் திரைப்பட இசையமைப்பாளரான ஹரிஷ், கித்தார் கலைஞரான போ புகான் ஆகிய அனைவரும் கிரிநந்தின் குழந்தைப் பருவத் தோழர்கள்.

பத்தாண்டுகள் கடந்தும் இவர்கள் ஒன்றிணைந்து இசை அமைக்கக் காரணம் நட்புதான் என உணர்வுபூர்வமாகச் சொல்கிறார் கிரிநந்த். இவர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய முதல் ஆல்பம் “ப்ரீத் ஆஃப் மியூசிக்”. அதன் பின் படிப்படியாக இவர்கள் இசை வளரத் தொடங்கியது. “2009-ல் ஏ.ஆர். ரஹ்மானின் தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ‘ஊ ல ல லா’ இசைப் போட்டி தமிழகத்தில் சுயமாக இசை அமைக்கும் பேண்ட் இசைக் கலைஞர்களைப் பெரிதும் ஊக்குவித்தது. அதில் நாங்கள்தான் முதல் பரிசு வென்றோம்” என மகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார் கிரிநந்த்.

எல்லாமே இசைதான்!

ஆக்ஸிஜன் பேண்ட் இசைக் கலைஞர்கள் அனைவரும் கர்னாடக சங்கீதத்தில் மட்டுமின்றிக் கிராமிய இசை, ஹிந்துஸ்தானி இசை, அரேபிய இசை, ஐரிஷ், ஜாஸ், லேட்டின், ராக் என மேற்கத்திய இசையிலும் புகுந்து விளையாடுகிறார்கள்.

இவர்கள் ஏறாத மேடையில்லை. “ஆனால் சென்னையைப் பொறுத்தவரை பாரம்பரிய இசை இல்லாத பரிட்சார்த்த இசை அமைக்கும் எங்களைப் போன்ற சுயமான இசைக் கலைஞர்களுக்கு சபாக்கள் அங்கீகாரம் அளிக்கத் தயங்குகிறார்கள். அதனால் நாங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் கச்சேரிகள் செய்கிறோம். இந்தியாவுக்குள் வந்தால் மற்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஆனால் எங்கள் சொந்த ஊரான சென்னையில் நாங்கள் ஷாப்பிங் மால்கள், கார்ப்பரேட் கம்பெனிகளின் தனி நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற இடங்களில்தான் கச்சேரி நடத்துகிறோம்.” ஆத்மார்த்தமான கலைஞனுக்கான ஏக்கத்தோடு பேசுகிறார்.

முழு நேரமும் இசைதான்

அவ்வப்போது சினிமா வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டாலும் தனியாக இசை அமைப்பதையே முழு நேர வேலையாகக் கொண்டு சிறப்பாகத் திகழ்கிறார்கள் இவர்கள். “நாங்கள் அனைவரும் அடிப்படையில் பொறியியல், கணினி பட்டதாரிகள்தான். ஆனால் இசைதான் எங்கள் உலகம்.

ஐ டி துறையில் வேலைபார்க்கும் இளைஞனைக்காட்டிலும் நாங்கள் நன்றாகவே சம்பாதிக்கிறோம்” என உற்சாகக் குரலுடன் பேசிய கிரிநந்த் “எங்கள் கையில் எலக்ட்ரிக் கித்தார், எலக்ட்ரிக் கீபோர்ட், டரம்ஸ் இருந்தாலும் நாங்கள் உருவாக்கும் இசை மெல்லிசைதான். இரைச்சலாக ஒலிக்கும் ஆர்ப்பாட்டமான இசை வெறும் சத்தம்தான். அது தற்காலிகமாக ஈர்க்குமே தவிர ஆன்மாவைத் தொடாது” என பரவசத்துடன் முடித்தார்.

நீங்களும் இசையில் மூழ்க: >http://www.oxygentheband.com/song/

‘தனி இசை’ பகுதியில் இடம்பெறும் விருப்பம் உங்களுக்கும் இருந்தால், உங்கள் இசை ஆல்பம் சி.டி. அல்லது யூடியூப் சுட்டியை, மற்றும் உங்களைப் பற்றிய விவரங்களை, தொடர்பு எண்ணை ilamaiputhumai@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x