Published : 23 Feb 2015 11:38 AM
Last Updated : 23 Feb 2015 11:38 AM

ரிஸ்க் எடுக்காமல் இருப்பதில் உள்ள ரிஸ்க்!

முதலீடுகள் செய்து தமது நிதிவளத்தை வளர்க்க நினைக்கும் ஒவ்வொருவரும் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ரிஸ்க். இந்த ரிஸ்க் அளவீட்டினை நாம் மூன்று வகைகளாகப் பார்க்கலாம்:

1. நாம் முதலீடு செய்யக் கருதும் ஒவ்வொரு விஷயத்திலும் தனித்து இருக்கும் ரிஸ்க் அளவு; 2. நமது ஒவ்வொரு முதலீட்டுத் தேவைக்கும் நம்மால் எடுக்கக் கூடிய ரிஸ்க் அளவு; 3. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தாங்கிக் கொள்ளக் கூடிய ரிஸ்க் அளவு.

இவை மூன்றையும் நாம் சரியாகக் கையாண்டு சேர்த்தியக்கும் போது நமது முதலீட்டு முறைகள் வெற்றி பெறுகின்றன. முதலில் இவற்றை தனித்தனியாகப் புரிந்து கொள்வோம். பிறகு இவற்றை ஒன்றுபடுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ரிஸ்க்கே எடுக்காமல் இந்த ஆட்டத்தில் ஜெயிக்க முடியாது. இதை நாம் எவ்வளவு நன்றாகப் புரிந்து கொள்கிறோம், எப்படித் திறமையாகக் கையாள்கிறோம் என்பதில் தான் வெற்றிக்கான சூட்சுமம் இருக்கிறது.

ஒரு விதத்தில் இது ஒரு குதிரையேற்றம் பழகுவது போல. முதலில் கஷ்டமாகத் தான் இருக்கும். நமக்குப் பழக்கமே இல்லாத குதிரை மீதேறி அதை அடக்கி வசப்படுத்துவது சுலபமாக இருக்கும் என்று எதிர்பார்க்க லாமா? கீழே விழலாம்; அடிபடலாம்; பலத்த காயம் கூட ஏற்படலாம்.

ஆனால், அவற்றைத் தாண்டிச் சென்று விடாப்பிடியாகக் குதிரையைப் பழக்கி விட்டால் அது நம் வசப்படும். குதிரையே வேண்டாம் என்று இருந்து விட்டால் நடந்துதான் போக வேண்டும். மாறாக குதிரையைப் பழக்கிக் கொண்டு விட்டால், செல்ல வேண்டிய இலக்கை விரைவில் சென்றடையலாம்.

ரிஸ்க் என்பது இது போலத்தான். நாம் அதைப் புரிந்து கொண்டால், வசப்படுத்தினால், நமது நிதி வளம் என்னும் இலக்கை நமக்கு வசதியான வேகத்தில் சென்றடையலாம். அதை உதாசீனப்படுத்தினால், நமது முதலீட்டுப் பயணமும் மந்த கதியில்தான் செல்லும்.

நாம் முதலில் குறிப்பிட்ட ரிஸ்க் பற்றிய மூன்று அளவுகளுக்கு வருவோம். முதலில் வருவது முதலீட்டுக் கருவிகளில் இருக்கும் ரிஸ்க். இது ஓரளவுக்குப் புரிந்து கொள்ளச் சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முதலீட்டுக் கருவிகளும் ஒப்பீட்டளவில் வித்தியாசமான ரிஸ்க் அளவைக் கொண்டிருக்கிறது. வங்கி வைப்பு நிதிகளில் மிகக் குறைந்த அளவு ரிஸ்க் இருக்கிறது.

நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் அதை விடக் கொஞ்சம் அதிகம்; பரஸ்பர நிதிகளில் இன்னமும் கொஞ்சம் அதிகம்; நேரடி பங்கு வர்த்தகத்தில் அதிக பட்சம் என்று இதை வரிசைப்படுத்தலாம். இந்த வரிசை கொஞ்சம் எளிமைப்படுத்தப்பட்டது தான் (இவற்றின் இடைவெளிகளிலும், இவற்றிற்கு அப்பாலும் மேலும் சில ரிஸ்க் அளவீட்டு முதலீடுகள் உள்ளது /சேர்க்கலாம்).

இருப்பினும், அடிப்படையில் பல ரிஸ்க் அளவுகளுக்கு ஏற்ப பல முதலீட்டு முறைகள் இருக்கின்றன என்பதையும், ஒரு முதலீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு அதன் ரிஸ்க் அளவைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தால் இப்போது போதும்.

இரண்டாவது நமது முதலீட்டுத் தேவைகள் குறித்தது. இதுவும் எளிமையான விஷயம்தான். நமது ஒவ்வொரு முதலீட்டிற்கும் ஒரு கால அளவு வகுத்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்கு தேவைப்படப் போகும் பணம்; ஒரு வருடத்துக்கு தேவைப்படுவது; மூன்று-நான்கு வருடங்களுக்கு தேவைப்படுவது; இன்ன காலம் என்றில்லாமல் எதிர்காலத்துக்கு தேவைப்படக் கூடியது.

இவை ஒவ்வொன்றுக்கும் முதலீட்டு முடிவுகளைத் தனியே எடுக்க வேண்டும். குறுகிய கால முதலீட்டுக்கும் நீண்ட கால முதலீட்டுக்கும் ஒரே அளவுகோலைப் பயன்படுத்தக் கூடாது. சுலபமான விதி என்னவென்றால், குறுகிய கால முதலீடுகளில் ரிஸ்க் இல்லாத அல்லது குறைவாக உள்ள முதலீடுகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். நீண்ட கால முதலீடுகளில் ரிஸ்க் அதிகம் எடுத்துத் தான் தீர வேண்டும்.

சென்ற வாரம் ஒரு வாசகர் கடிதம் எழுதி இருந்தார் - “ஒரு வருடத்துக்கு முதலீடு செய்வதற்கு நான் வங்கிக்குச் சென்றிருந்தேன்; அவர்கள் பரஸ்பர நிதிகளைப் பரிந்துரைத்தார்கள். இது சரியா? செய்யலாமா?” என்று கேட்டிருந்தார். நான் அவருக்கு இரண்டு பகுதிகளில் பதில் சொன்னேன்.

ஒரு வருட காலத்துக்கு பரஸ்பர நிதியெல்லாம் சரியாக இருக்காது. வைப்பு நிதிகளிலேயே முதலீடு செய்யுங்கள் என்றேன். ஆனால் இரண்டாவதாக நான் சொன்னதும் முக்கியம் - எப்போதுமே குறுகிய காலத்திற்கு மட்டும் முதலீடு செய்யாதீர்கள். தொலைநோக்குடனும் சிறிதேனும் முதலீடு செய்யுங்கள். அதற்கு பரஸ்பர நிதிகளே சிறந்தவை என்றும் குறிப்பிட்டேன்.

இவ்வளவுதான் இந்த விஷயம். குறுகிய காலத்திற்கு ரிஸ்க் குறைவான முறைகளே உகந்தவை. ஆனால் எப்போதுமே இவற்றையே சார்ந்திருக்கக் கூடாது. நீண்ட கால முதலீடுகள் செய்ய வேண்டும். அவற்றில் ரிஸ்க் எடுக்கத் தான் வேண்டும். பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதிகள் போன்றவற்றில் முதலீடு செய்து தான் ஆக வேண்டும்.

ரிஸ்க் பற்றிய மூன்றாவது விஷயம் - நமது சொந்த ரிஸ்க் தாங்கும் திறனை அறிந்து கொள்வது. அதாவது முதலீடு செய்வதில் எவ்வளவு ரிஸ்க் எடுத்தால் நம்மால் நிம்மதியாக இருக்க முடியும் என்பதை அறிவது. இதைக் கண்டடைவதற்கு இணையத்தில் சில கேள்வி-பதில் முறைகள் உள்ளன. அவற்றை முயற்சி செய்து பாருங்கள் - ஓரளவுக்கு உங்கள் ரிஸ்க் தாங்கும் திறனை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

இருப்பினும், முதலீடு என்பதை , பழகுவது வரை நமக்கு முழுமையாகத் தெரியாது. இதைப் ‘பட்டுத் தான்’ தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இதைச் சரிவரப் புரிந்து கொண்டால் அதிக மன உளைச்சல் இன்றி முதலீட்டுத் திட்டங்களைச் செயல் படுத்தலாம். மேலும், இத்திட்டங்களை விடாமல் தொடர்ந்து செயல்படுத்தவும் இந்தப் புரிதல் உதவும்.

சாராம்சமாகச் சொன்னால், ரிஸ்க் எடுப்பது அவசியம். நமது தேவைகள் மற்றும் தாங்கு திறனைப் பொறுத்து சரியான ரிஸ்க் அளவுள்ள முதலீட்டு முறைகளைக் கையாள்வதன் மூலம் இந்த ரிஸ்க் என்னும் குதிரையை நமக்கேற்ப பழக்கிக் கொள்ளலாம்.

குறுகிய காலத்திற்கு ரிஸ்க் குறைவான முறைகளே உகந்தவை. ஆனால் எப்போதுமே இவற்றையே சார்ந்திருக்கக் கூடாது. நீண்ட காலத்திற்கும் முதலீடுகள் செய்ய வேண்டும். அவற்றில் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதிகள் போன்றவற்றில் முதலீடு செய்துதான் ஆக வேண்டும்.

srikanth@fundsindia.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x