Published : 09 Feb 2015 12:40 PM
Last Updated : 09 Feb 2015 12:40 PM

10 மாத வனவாசம் அடுத்த இன்னிங்ஸ்-க்கு தயார்படுத்தியது

கெய்ர்ன் எண்ணெய் அகழ்வு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்து அதிலிருந்து வெளியேறி 10 மாதங்கள் எந்தவித பொறுப்பிலும் இல்லாமல் இருந்தவர் பி.இளங்கோ.

18 ஆண்டுகள் இந்நிறுவனத்தில் பணியாற்றி, திடீரென வெளியேறிய இவர் எங்கு சேர்வார் என்ற எதிர்பார்ப்பு இத்துறையினர் மத்தியில் உருவானது.

இப்போது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்புளோரேஷன் நிறுவ னத்தின் தலைவராக பொறுப் பேற்றுள்ளார்.

இப்போது 15 நிமிஷத்துக்கு மேல் ஒருவருக்கு நேரம் ஒதுக்க முடியாமல் பரபரப்பாக இருக்கும் இவர் 10 மாதங்களை எப்படிக் கழித்தார், என்ன கிடைத்தது என்பது இனி அவர் வார்த்தைகளிலே....

பன்னாட்டு நிறுவனமாக இருந்த நிறுவனம் கெய்ர்ன், வேதாந்தா குழுமத் திடம் கைமாறியபோது எம்என்சி நிறுவன செயல்பாட்டிலிருந்து குடும்ப நிறுவன செயல்பாடாக மாறியது. உயர் பதவியிலிருக்கும்போது, இவர் எப்போது வெளியேறுவார் என மற்றவர்கள் நினைக்கும் முன்பே வெளியேற வேண்டும் என நினைத் தேன், அதனால் அந்த முடிவை எடுத்தேன்.

ஆனால் இந்த 300 நாள் எனது வாழ்வையே புரட்டிப்போட்டு விட்டதோடு என்னை இன்னொரு இன்னிங்ஸுக்கும் தயார்படுத்திவிட்டது.

வேலையை விடும் போது நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கவலைப்படவில்லை. இத்தனை வருட அனுபவம் எப்படியும் கைக்கொடுக்கும் என்று நம்பினேன். நம்பிக்கை வீண் போகவில்லை. அதுவரை வேலை என்று இருந்ததால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் இருந்தேன்.

மருத்துவம் படிக்கும் மகள், மேல் படிப்புக்கு முயற்சித்த வேளையில் அவருடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. குடும்பத்துடன் இருக்கவேண்டும் என்பதற்காக சில நிறுவனங்கள் வாய்ப்பளிக்க முன்வந்தபோதிலும் அதை ஏற்க வில்லை. குடும்பத்துடன் சில காலம் செலவிட்டேன்.

திருத்துறைப்பூண்டி சொந்த ஊரானதால், ஒருவாரம் நவக்கிரக கோவிலுக்கெல்லாம் குடும் பத்துடன் சென்று வந்தேன். அடுத்து கோத்தகிரியில் உள்ள எனது ஓய்வில்லத்தில் சில நாட்கள் தங்கினேன்.

சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால், எனது சமகால நண்பர்கள், உறவினர்கள், என்னுடன் பணியாற்றி யவர்கள் என 12 பேர் குடும்பத்தினர் எவருமின்றி ஒரு வாரம் கொடைக் கானலில் தங்கி சி.இ.ஓ. மீட்டிங், விமானப்பயணம் என எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் நிம்மதியாக பொழுதைக் கழித்தோம்.

பிறகு புத்தகம் எழுதலாம் என்று முடிவு செய்தேன். இத்துறை குறித்த அனுபவம் மிக்க பத்திரிகையாளருடன் சேர்ந்து இதை மேற்கொள்ள திட்டமிட்டேன். வெறுமனே எனது சுயபுராணமாக இது இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

இந்த முடிவை ஏற்றுக்கொண்ட ஒரு நாளிதழின் ஆசிரியர் முதலில் கட்டுரைகள் எழுதித் தருமாறு கேட்டார். அதை ஆரம்பித்தேன். முதலில் எழுதுவது சிரமமாக இருந்தது. அப்போதுதான் ஒரு பத்திரிகையாளராக இருப்பது எவ்வளவு சிரமம் என்று நினைத்தேன்.

பெட்ரோலியத் துறையில் எனக் கிருந்த அனுபவத்தை அரசு மூலம் செயல்படுத்தத் திட்டமிட்டேன். கொள்கை வகுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டேன்.

எனது கட்டுரைகள் பெரும் பாலான நாளேடுகளில் வரத் தொடங்கின. வெளிநாட்டு பத்திரி கைகளும் கட்டுரைகளை பிரசுரிக்கத் தொடங்கின. சிறிது சிறிதாக நம்பிக்கை துளிர் விட்டது. இப்போது முழு நேர கட்டுரை யாளராகிவிட்டேன்.

சில கல்லூரிகள் இத்துறை சார்ந்த விரிவுரை நிகழ்த்தக் கூப்பிட்டனர். அதையும் செய்தேன். மாணவர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தன.

10 மாதம் எந்த வேலையும் இல்லாமல் இருப்பது மிகவும் நீண்ட காலம்தான் ஆனால், பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இத்தகைய ஓய்வு தேவை. ஓய்வு பெறும்போது பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்கும், தங்களது பலம் என்ன என்பதை அறிவதற்கும் இதுபோன்ற நீண்ட விடுமுறை பயனுள்ளதாக இருக்கும்.

இந்த விடுமுறைதான் இப்போது என்னை அடுத்த இன்னிங்க்ஸ்க்கு தயார்படுத்தி இருக்கிறது.

என்னை கேட்டால் 45வயதுக்கு மேல் இதுபோன்று 10 மாத ஓய்வு தேவையில்லை. 15 நாள் ஓய்வு போதும். நாம் யார் என்று உணர வைக்கும். வேலை, வாழ்க்கை, குடும்பம், நண்பர்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் புதிய பரிமாணம் நமக்கு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x