

இந்தியாவில் பவுத்தச் சுவடுகள் பலவற்றைக் கண்ட சுவான் ஸாங், கடைசியாகத் தான் சென்று சேர வேண்டிய மகத நாட்டை (இன்றைய ஒடிசா) சென்றடைந்தார்.
தனது குறிப்புகளில் மகத நாட்டை அவர் வானளாவப் புகழ்ந்திருக்கிறார். அங்கு அவர் ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்தார்.
அதில் பெரும் பகுதியை நாளந்தா பல்கலைக்கழகம் என்று உலகப் புகழ் பெற்றிருந்த நாளந்தா மடாலயத்தில் அவர் கழித்தார். அங்கு வடமொழியைக் கற்றுக் கொண்டதுடன், நிறைய அறிவையும் வளர்த்துக்கொண்டார்.
நாளந்தா
மகத நாட்டின் மலைப்பகுதியில், புத்தர் ஞானம் பெற்ற இடத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் இருந்தது நாளந்தா. அந்நாட்டு அரசர்கள், அந்த மடாலயத்துக்குப் பெரும் கட்டடங்களைக் கட்டி கொடுத்திருந்தனர். எல்லாத் திசைகளிலும் கோபுரங்களும் மண்டபங்களும் எழுப்பப்பட்டிருந்தன. ஓடைகளும் தோப்புகளும் நிறைந்த அந்த இடம் குளிர்ச்சியாகவும் தூய்மையாகவும் இருந்தது.
அந்தக் காலத்தில் இந்தியாவிலேயே கல்விக்குப் பெயர் பெற்ற இடமாக நாளந்தா இருந்தது. பவுத்த மத இலக்கியம் தவிர வேதம், மருத்துவம், கணிதம், அறிவியல் துறைகள் கற்பிக்கப்பட்டன. கிட்டத்தட்ட நூறு பேராசிரியர்கள் கற்பித்தனர். அவர்கள் பல நூல்களையும் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. மடாலயத்தின் தலைவரான சிலபத்ரா பெரும் அறிஞர்.
காஞ்சிபுரம்
அங்கு 10,000 புத்தப் பிட்சுகள் வாழ்ந்து கொண்டிருந்தனர். சுவான் ஸாங்கைப் போன்ற அயல்நாட்டு மாணவர்கள் பலரும் அங்கிருந்தனர். அறிவு பரிசோதிக்கப்பட்ட பிறகே அவர்கள் அங்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். துறவிகளுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி எல்லாம் இலவசமாக வழங்கப்பட்டன.
அங்குத் தங்கிப் பயின்ற சுவான் ஸாங், பிறகு இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒடிசா, ஆந்திர மாநிலங்களுக்குச் சென்ற அவர், தமிழகத்தின் காஞ்சிபுரத்துக்கும் வந்து சென்றிருக்கிறார்.
பேராசிரியர்
பிறகு மகாராஷ்டிராவுக்குப் போய், அங்கே அசோகர் நிறுவிய பல பவுத்த நினைவுச் சின்னங்களைக் கண்டார். அங்கிருந்து சௌராஷ்டிரம், சிந்து, முல்தான் வழியாக ஈரான் எல்லையில் உள்ள மக்ரானை அடைந்தார். பிறகு சிந்து பகுதியைக் கடந்து மீண்டும் மகதத்திலுள்ள நாளந்தாவை அடைந்தார்.
முன்பு கற்ற அனுபவம், கள அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நாளந்தாவில், அறிஞர் சிலபத்ராவின் மேற்பார்வையில் சுவான் ஸாங் பாடங்களைக் கற்பித்தார். வடமொழியில் நூல்களையும் எழுதினார். அந்த நாட்களில் மத அறிஞர்கள், பிற மத அறிஞர்களுடன் பொது விவாதம் நடத்துவது வழக்கமாக இருந்தது. அதை அடியொற்றிச் சுவான் ஸாங்கும் அறிஞர்களுடன் வாதிட்டார்.