

சாலையில் சென்ற ஒருவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது ஒரு கார். இதுகுறித்து சாட்சி ஒருவரை காவலர்கள் விசாரித்தனர். ‘‘காரின் நிறம் கருப்பு, டிரைவர் கருப்பு சட்டை போட்டிருந்தார். காரின் முன்னால் ஒரு கருப்பு நாய் பொம்மை தொங்க விடப்பட்டிருந்தது’’ என்றார் அந்த சாட்சி. எப்படி இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ‘‘நான் கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தேன்” என்றார் அவர்.
நாம் எந்த கண்ணாடி அணிந்து பார்க்கிறோமோ அப்படித்தான் உலகம் நமக்குத் தெரியும். அது போலவே எந்த விஷயமும் நாம் எப்படிப் பார்க் கிறோமோ அப்படித்தான் அமையும். ‘இவர் கடுமையானவர்.. இது கடினமான பாடம்’ என் றெல்லாம் நாம் பல முன்முடிவுகளை எடுத்துவிட்டுத்தான் பின் அந்த விஷயத்தை அணுகுகிறோம்.
ஆங்கிலத்தில் Bias எனப்படும் இந்த முன்முடிவுகளுக்கு நாம் எப்படி வருகிறோம்? பெரும்பாலும் நம் அனுபவங்களிலிருந்தும், அடுத்தவர்களின் ஆலோசனைகளிலிருந்தும் பெறுகிறோம். கணித ஆசிரியர் ஒருமுறை திட்டினால் ‘இந்தக் கணக்கு வாத்தியார்களே இப்படித்தான்’ என்று முடிவு செய்கிறோம். ஒருமுறை ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைந்தால் ‘அது நமக்கு வராது’ என்று முடிவெடுத்து விடுகிறோம்.
அதேபோல, மற்றவர்கள் ஆலோசனை என்ற பெயரில் சொல்பவையும் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. ‘இதெல்லாம் நம்மால் முடியாது. அது ரொம்பச் சிக்கலான பாடம். ஏற்கெனவே பலர் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்’ என்றெல்லாம் நண்பர்களும் தெரிந்தவர்களும் நமக்கு வழங்கும் ஆலோசனைகளும் நாம் ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வர உதவுகிறது.
ஓர் ஆய்வில் ஒரே ஊசி மருந்தை இரு வேறு பிரிவினருக்குச் செலுத்தினார்கள். ஒரு பிரிவினரிடம் இந்த மருந்து கடுமையாக வலிக்கும் என்றனர். இன்னொரு பிரிவினரிடம் இந்த ஊசி போட்ட இடத்தில் வலி இருக்காது, மரத்து விடும் என்றார்கள். ஆய்வின் முடிவில் கடுமையாக வலிக்கும் என்று எதிர்பார்த்த பிரிவினர்கள் ஊசியினால் கடும் வலியை அனுபவித்தனர். அதே நேரம் மற்ற பிரிவினர் இந்த ஊசி வலிக்கவே இல்லை என்று பாராட்டினார்கள்.
ஜென் தத்துவத்தில் ஒன்று காலித் தேநீர் கோப்பை தத்துவம். அதாவது ஏற்கெனவே நிரம்பியிருக்கும் கோப்பையில் புதிதாக எதையும் நிரப்ப முடியாதது. அதுபோல, மனதில் ஒரு விஷயத்தைப் பற்றி ஏற்கெனவே அபிப்ராயம் இருந்தால் புதிதாக எதையும் கற்க முடியாது. எனவே நமது மனக் கோப்பைகளைக் காலியாக வைப்போம். எல்லாத் தடைகளும் மனத்தடைகளே!
-மீண்டும் நாளை...