Published : 20 Feb 2015 10:42 AM
Last Updated : 20 Feb 2015 10:42 AM

உண்மையான ஹீரோயிசம்

மனநோய் எந்த மொழித் திரைப்படத்திலும் இன்னமும் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பது என் நீண்ட நாள் ஆதங்கம். தமிழ் சினிமா மனநோயை மேம்போக்காகவும், பல நேரங்களில் மிகத் தவறாகவும், காட்டி வருகிறது.

பைத்தியக்கார ஆஸ்பத்திரி என்பது இங்கு காமெடி டிராக். மருத்துவரும் லூஸாகத்தான் இருப்பார். “உலகம் உருண்டை, லட்டும் உருண்டை” என்று கண்ணை உருட்டுவார் சாரு ஹாசன் ‘மீண்டும் ஒரு காதல் கதை’யில். பல படங்களில் ‘கல்யாணம் பண்ணினால் சரியாகும்” என்பார்கள். இதுதான் மன சிகிச்சை. அல்லது அடி பட்டு மனம் பேதலித்தால் மீண்டும் அடி பட்டு சரியாக வேண்டும்!

கமல் ஹாசன் தன் படங்களில் மனநோயாளியை சூப்பர் ஹீரோ போல பெரும் பராக்கிரமசாலியாக்கி மரத்தைப் பிடுங்கிச் சண்டை போட வைப்பார். எம்.ஜி.ஆர் பல படங்களில் பாட்டுப் பாடியே கதாநாயகியைக் குணப்படுத்தியிருக்கிறார். பாலு மகேந்திராவும் அவர் சீடர் பாலாவும் பச்சிலை வைத்தியக் கட்டிலில்தான் தம் கதை மாந்தர்களைக் காப்பாற்றியுள்ளனர். மணிரத்னம் எந்த மருத்துவப் பேராபத்தும் இல்லாமல் ஸ்பாஸ்டிக் குழந்தையை கிளைமாக்ஸில் இறக்க வைப்பார் அஞ்சலியில்.

புற்று நோய் போல இருதய நோய் போல ஒரு மனச்சிதைவு நோயையோ மன வளர்ச்சி குறைபாட்டையோ இங்கு சரியாக, நேர்மையாகக் காட்டுவதில்லை. மிகை நடிப்பு அல்லது தவறான தகவல்கள்தான் தூக்கலாக இருக்கும். சுவாதி முத்தியம் கமலும் புரியாத புதிர் ரகுவரனும் மட்டும்தான் பாத்திரமும் சரியாக அமையப்பெற்று சரியான பாத்திர இயல்பை நடிப்பில் காட்டினார்கள் எனச் சொல்லலாம். தனுஷ் காட்டக்கூடியவர். சரியான திரைக்கதை அமையவில்லை.

இந்தப் பின்புலத்தில் “எ பியூட்டிஃபுல் மைண்ட்” ஆங்கிலப் படத்தை நான் பரிந்துரைக்கிறேன். நான்கு ஆஸ்கர்கள், பெரும் வசூல் என உலகம் முழுதும் பேசப்பட்ட படம். இந்தப் படத்தின் வெற்றிக்கான மூன்று காரணங்களை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஒன்று, ஒரு வாழும் மேதையின் நிஜக்கதை. இரண்டாவது அது ஏற்கனவே ஒரு நாவல் வடிவில் வந்து பெரிதும் பெயர் பெற்றது. மூன்று, அதை அற்புதமாகத் திரைக்கதை அமைத்தது. இதற்கு பிறகே நாயகன் ரஸல் க்ரோவின் நடிப்பு, ரான் ஹோவர்டின் இயக்கம் எல்லாம்.

ஜான் நாஷ் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர். அடிப்படையில் அவர் ஒரு கணிதவியல் ஆராய்ச்சியாளர். ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கார்னெகி ஸ்காலர்ஷிப் பெற்றவராய் நுழைகிறார் இளம் மேதை ஜான். கூச்ச சுபாவமும் தனிமை விரும்பியுமான நாஷ், சார்லஸ் எனும் அறை நண்பருடன் மட்டும் நெருக்கமாகப் பழகுகிறார். ஒரு விருந்தில் ஆடம் ஸ்மித்தின் பிரபல பொருளாதாரக் கூற்றை மறுத்து ஒரு கருத்தாக்கத்தை உருவாக்குகிறார். அவரின் அந்தக் கட்டுரை அவரை எம். ஐ. டிக்கு இட்டுச் செல்கிறது.

சில ஆண்டுகளில் ராணுவ ரகசியத் தகவல் ஒன்றைப் புலன் விசாரிக்க அழைக்கப்படும் நாஷ், நொடியில் தன் கணித அறிவில் கண்டு பிடிக்க அவரின் சேவையை கோருகிறார் அந்த மர்மத் தலைவர் வில்லியம் பார்ச்சர். சில மாதங்களில் ஒரு ஒற்றராய் மாற்றப்பட்டு ராணுவத்துக்குப் பணி புரிகிறார். இதன் இடையே அலிசியா எனும் மாணவி இவரைக் காதலிக்க, தன் நண்பர் சார்லஸின் அறிவுரைப்படி கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறார். திருமணத்துக்குப் பின் ஒரு துப்பாக்கி சூட்டில் தப்பிக்க, ராணுவம் ஒரு புறமும், ரஷ்யர்கள் மறுபுறமுமாகத் துரத்த, இவரைப் பிடித்து மனநல மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

அவரைச் சோதிக்கும் மருத்துவர், நாஷுக்கு பேரனாய்ட் ஸ்கிஷோஃப்ரெனியா என்றும் அவர் சொல்லும் மனிதர்களும், ராணுவ உளவு வேலை, ரஷ்யர்கள் துரத்தல்கள் எதுவும் உண்மை இல்லை என்றும் சொல்கிறார். அனைத்தும் அவரது பொய் நம்பிக்கைகள். அவர் கண்டவை அனைத்தும் காட்சித் திரிபு நிலைகள்.

அவர் மனைவி எல்லாவற்றையும் விசாரிக்க, அவருக்கு பிரிஸ்டனில் சார்லஸ் என்ற அறை நண்பனே இல்லை என்று தெரிகிறது. இன்சுலின், கோமா சிகிச்சை, மருந்துகள் எனத் தீவிர சிகிச்சைக்குப் பிறகு இயல்புக்குத் திரும்புகிறார். மருந்துகளின் பக்க விளைவில் தாம்பத்திய உறவு பாதிக்கப்படுகிறது. மாத்திரைகள் உண்பதை ரகசியமாக நிறுத்த மீண்டும் நிழல் மனிதர்கள் நடமாட்டமும் தொல்லையும் ஆரம்பமாகின்றன. மனைவியின் அன்பும், நண்பர்களின் ஆதரவும், நிழல் உலக மனிதர்களைத் தீவிரமாக ஒதுக்க நாஷ் எடுக்கும் முயற்சிகள் அவரைக் கரை சேர்க்கின்றன.

இறுதிக் காட்சியில் அவர் தள்ளாத வயதில் கவுரவிக்கப்படுகையில் மனைவியின் அன்புதான் தன் வாழ்க்கையின் பெரும் சக்தி என்று சொல்கிறார். மனைவியின் நெகிழ்ச்சியுடன் முடிகிறது படம். மேதமைக்கும் மனப்பிறழ்விற்கும் இடையில் அவதிப்படும் மனதை, திரையில் தன் உடல் மொழியால் அற்புதமாகக் காட்டியிருப்பார் ரஸல் க்ரோ.

அளவிட முடியாத infinity யை எப்படி அளவிடுவீர்கள் என்று காதலி கேட்க அது ஒரு நம்பிக்கைதான் என்பார் நாஷ். காதலும் அப்படித்தான் என்று தன் காதலை வெளிப்படுத்துவார் காதலி. ஒரு நோயின் தாக்குதலில் வாழ்வின் அனைத்தையும் இழந்து பின் அசாத்திய சக்தியில் மீண்டு வருவதுதான் நிஜமான ஹீரோயிசம். அன்பும் புரிதலும் நோயின் கொடுமையையும் வாழ்வின் வலிகளையும் எதிர்கொள்ள உதவும். அவற்றை அந்தப் பலவீனமான காலத்தில் பெறுபவர்கள் பாக்கியசாலிகள்.

ஜான் நாஷ் வாழ்க்கையை முழுவதும் சரியாகக் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு பற்றி படித்தேன். எனக்கும் படத்தில் ஒரு தவறு தெரிந்தது. இல்லாத மனிதர்களைப் பார்க்கும் விஷுவல் ஹேலுசினேஷன்ஸ் அவரது வியாதியான பேரனாய்ட் ஸ்கிஷோஃப்ரெனியாவில் கிடையாது. பெரும்பாலும் ஆடிட்டரி ஹேலுசினேஷன்ஸ் எனப்படும் உள்ளிருந்து ஒலிக்கும் குரல்கள்தான் இருக்கும். ஆனால் இவையெல்லாம் படைப்பாளியின் கிரியேட்டிவ் லைசென்ஸ் என்று சொல்லலாம்.

ஒரு நிஜக்கதையை நிழலில் சொல்லும்போது கொஞ்சம் கூட்டியும் குறைத்தும் சொல்ல வேண்டித்தான் வரும். ஆனால் மனநோயை நேர்மையாக, மிகைப்படுத்தாமல், இயல்பாக, குறிப்பாக நம்பிக்கை ஊட்டக்கூடிய முடிவுடன் காட்டியிருப்பது பாராட்டுதற்குரியது.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x