Published : 31 Jan 2015 03:13 PM
Last Updated : 31 Jan 2015 03:13 PM

கானகத்தின் குரல்: சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்

காடோடி, உலகின் மிகப் பெரிய ஆதிக் காடுகளில் ஒன்றான போர்னியோ காட்டின் அழிவை, காட்டழிப்பின் அரசியலை அழுத்தமான குரலில் சொல்லும் நாவல். இந்த நாவலைப் படித்து முடிப்பவர்கள் ஒரே ஒரு மரத்தை வெட்ட நினைத்தாலும், அவர்களுடைய மனசு வலிக்கும்.

இந்நாவலை எழுதியுள்ள நன்னிலத்தைச் சேர்ந்த சூழலியலாளர் நக்கீரன், உத்வேகம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். கவிஞர், குழந்தை இலக்கியவாதி, பேச்சாளர் என பல முகங்கள் கொண்ட இவருடைய முதல் நாவல் இது.

கவிதை மொழியும் கதைக்கான கூறுகளும் கூடிவந்த புதுமையான சூழலியல் எழுத்து இவருடையது. மூன்றாம் உலக நாடுகளில் கண்ணுக்குத் தெரியாமல் களவாடப்படும் மறைநீர் (Virtual water) போன்ற சூழலியல் கருத்தாக்கங்களை பரவலாக்கியவர். காட்டழிப்பைப் பற்றி அவர் எழுதிய 'மழைக்காடுகளின் மரணம்' என்ற சிறுநூல் பரவலான அதிர்வுகளை ஏற்படுத்தியது.

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்ற நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் ஒரு பகுதியில், இரண்டாகப் பிளந்து கிடந்த ஒரு பெருமரத்தின் அருகே அவருடன் உரையாடியதில் இருந்து:

எண்பதுகளில் போர்னியோ காடுகள் சந்தித்த அழிவை காடோடி பேசுகிறது. இன்றைய நிலையில் அதன் பொருத்தம் என்ன?

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாமாயில், சாப்பிடும் சாக்லேட்டுக்கான கோகோவுக்கான மூலப்பொருள் போர்னியோ காடுகளில் இருந்தும் வந்துகொண்டிருக்கிறது. நம் நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலையும் காபியும் பயிரிடப்பட்டதைப் போல, அங்கு காடு அழிக்கப்பட்டு செம்பனையும் கோகோவும் பயிரிடப்பட்டுள்ளன. அந்தக் காடுகளில் தெரியும் இலைகளில் மிளிரும் பச்சைகூட, டாலர் பச்சைதான்.

தேயிலைத் தொழிலாளர்கள் பட்ட அவலங்கள் பற்றி ‘எரியும் பனிக்காடு' நாவல் பேசியது. ஆனால், அந்தத் தேயிலைத் தோட்டங்களை உருவாக்க காடுகள் அழிக்கப்பட்டது பற்றி நம்மிடம் இலக்கியப் பதிவு இல்லை.

நமது தொன்மைக் கூறாகவும் மரபு வளமாகவும் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் அழிவும் போர்னியோவின் அழிவுக்கு இணையானதுதான்.

தன்னில் வாழும் சிற்றுயிருக்கும் உயிரைக் கொடுக்கிறது ஒரு காடு. அந்த சிற்றுயிர்களின், தாவரங்களின் ஓசைகள் அடங்கும்போது ஒரு காடு உயிரிழந்துவிடுகிறது. ஊருக்குள் வரும் நீரூற்று தன் சலசலப்பை நிறுத்திக்கொண்டு விடுகிறது.

இன்றைக்கு அந்த நாவல் நடந்த களத்துக்கு நீங்கள் திரும்பிச் சென்றால், என்ன நடக்கும்?

இன்றைக்கு போர்னியோவின் கினபத்தாங்கன் பகுதிக்கு நான் திரும்பிப் போனால், நிச்சயமாக அந்தக் காடு இருந்த இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியாது. போர்னியோ காட்டுப் பகுதியின் மூன்றில் இரண்டு பங்கு ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டது.

ஒரு காடு வெட்டுமரத்துக்காக அழிக்கப்படுகிறது என்றால், உடனடியாக அங்கே செம்பனைத் தோட்டம் முளைத்து எழுந்துவிடும். 2 பீர் பாட்டிலை விலையாகக் கொடுத்து, 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு உள்ள ஒரு காட்டையே வாங்கியதெல்லாம் நடந்திருக்கிறது.

அமேசான் காடுகள் பெருமளவு சுரண்டப்பட்டு, காடழிப்பு உச்சத்தை அடைந்த நிலையில்தான் போர்னியோ காடுகள் வெட்டுமரத் தொழிலுக்குத் திறக்கப்பட்டன. அந்தக் காலத்தில் இந்தோனேசிய அதிபராக இருந்த சுகார்த்தோவும் இதற்கு முக்கிய காரணம்.

காடுகள் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

எண்பதுகளின் பிற்பகுதியில் மலேசியாவில் உள்ள சண்டகானில் ஒரு சூப்பர் மார்கெட்டில் மேலாளராக வேலை பார்த்தேன். ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டால் இருப்புகொள்ளாது. ‘நோக்கமில்லா பயணம்' என்ற பெயருடன் நானும் நண்பரும் புறப்பட்டுவிடுவோம். அருகிலே செப்பிலோக் என்ற மனிதத் தடம் படாத கன்னிக்காடு இருந்தது. எங்கே ஒரு காட்டுப் பாதை தெரிகிறதோ, அதற்குள் நுழைந்துவிடுவோம்.

நான் உருண்டு புரண்ட தஞ்சை தரணியில் காடே கிடையாது. அங்கிருந்து போன என்னை, மலேசியக் காடு அரவணைத்துக்கொண்டது. இப்படித்தான் காட்டின் மீதான காதல் துளிர்த்தது, காடுகளுக்குள்ளேயே வாழ வேண்டும் என்ற தீவிர ஆசையாக அது வேர்விட்டது.

போர்னியோவுக்கு ஏன் சென்றீர்கள்?

நான் வேலை பார்த்த கிழக்கு மலேசிய பகுதிக்கு அருகில் போர்னியோ காட்டின் ஒரு பகுதி இருக்கிறது. காடுகளிலேயே தங்கி, வெட்டுமரங்களை கணக்கெடுத்து நிறுவனத்துக்குச் சொல்லும் வேலை எண்பதுகளின் பிற்பகுதியில் தானாக வந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு வேலை பார்த்தேன்.

போர்னியோ வெட்டுமர நிறுவன வேலை விட்டுப்போன பிறகு, அதைவிட அதிக சம்பளத்தில் ஆப்பிரிக்கக் காடுகளில் வேலை வந்தது. ஆனால், அதை ஏற்கும் மனநிலையில் நான் இல்லை.

வேலையே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, காட்டை அழிக்கும் வேலையை, மரம் அறுக்கும் தொழிலை எந்தக் காலத்திலும் செய்யக்கூடாது என்ற உறுத்தலை போர்னியோ எனக்குத் தந்தது. அந்த அனுபவம் மிகப் பெரிய துயரம்.

இந்த நாவல் எப்படி கருக் கொண்டது?

2007-க்குப் பிறகு சொந்த ஊரான நன்னிலத்துக்குத் திரும்பிவிட்டேன். ஆனால், 15 ஆண்டுகளைத் தாண்டியும் போர்னியோ காடுகளின் அழிவைப் பற்றிய கவலை மட்டும் மனதை விட்டு அகலவே இல்லை. நண்பர்களுடனான பேச்சு, எப்படியாவது அந்தப் புள்ளிக்கு இழுத்துச் சென்றுவிடும். அங்கு கிடைத்த அனுபவங்களைப் பற்றியே பெரும்பாலான நேரம் பேசிக் கொண்டிருப்பேன்.

இந்த நிலையில்தான் ‘மழைக்காடுகளின் மரணம்' என்ற சிறிய புத்தகத்தை பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டனர். அதைப் படித்துவிட்டு புதுச்சேரியைச் சேர்ந்த 11 வயது மாணவன் ஒருவன் என்னை அழைத்தான். தெருவில் அவன் வளர்த்த மரக்கன்றை பக்கத்தில் இருந்தவர்கள் அழித்துவிட்டார்கள். அதற்காக அடிதடியில் இறங்கிவிட்டான்.

அதற்குக் காரணம் நீங்கள் எழுதிய புத்தகம்தான் என்றான். தாணே புயலுக்குப் பிறகு அதே பக்கத்து வீட்டுக்காரர்கள் இவனை அழைத்து, ஊரெல்லாம் மரம் நடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். காரணம், தாணே புயல் மரங்களை சாய்த்திருந்தது. இதுபோன்ற சம்பவங்கள்தான் ‘காடோடி’யை எழுதும் முனைப்பைத் தூண்டின.

சூழலியலைத் தாண்டி போர்னியோ பழங்குடிகளின் இனவரைவியலையும், தொன்மக் கதைகளையும் இந்த நாவல் நிறைய பேசியிருக்கிறது...

போர்னியோ பழங்குடிகளைப் பொறுத்தவரை காடு என்பது அவர்களுடைய மற்றொரு அங்கம். அவர்கள் அந்தக் காட்டின் அங்கம். இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. போர்னியோ பழங்குடிகள் இன்னும் முழு உணவு உற்பத்தியாளர் சமூகமாக மாறவில்லை. உணவு சேகரிப்புச் சமூகமாகவே வாழ்ந்தார்கள், தற்சார்பு நிறைந்தவர்கள்.

நாகரிக மனிதர்களைப் போல காடு என்னுடையது என்று அவர்கள் உடைமை கொண்டாடுவதில்லை, தனியுடைமைச் சிந்தனையில்லை. அதனால்தான் அக்காட்டின் மூதாய் மரம் வெட்டப்படும்போது, உறவினர் இறந்ததைப் போல புல்லாங்குழல் வாசிக்கும் சடங்கை நிகழ்த்தி, தங்கள் துயரத்தை தணித்துக் கொள்கிறார்கள்.

இந்த நாவலைப் படிப்பவர்கள் காட்டையெல்லாம் காப்பாற்ற வேண்டாம். தங்களைச் சுற்றியுள்ள ஒரு மரம் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்தினால் போதும்.

அதேநேரம், இந்த நாவலில் பழங்குடிகளின் நம்பிக்கையாக வரும் பல விஷயங்கள் கற்பனாவாத (ரொமாண்டிசைஸ்) நோக்குடன் இருக்கின்றனவே?

இந்த நாவலை சூழலியல் நாவலாக, இனவரைவியல் நாவலாக எழுத வேண்டும் என்றெல்லாம் திட்டமிடவில்லை. அந்த வயதில் எனக்கு என்ன அனுபவம் ஏற்பட்டதோ, அப்போது என்ன மனநிலையில் அவற்றை நான் எதிர்கொண்டேனோ, அதைத்தான் பதிவு செய்துள்ளேன். அதில் வியப்பும், அறியும் ஆர்வமுமே அதிகம்.

பழங்குடிகள் ஒரு காட்டின் தன்மையை, அதன் அசைவுகளை கிரகித்துக் கொண்டிருக்கிறார்கள். நாவலில் வரும் பிலியவ் கதாபாத்திரம் சொல்லும் பல விஷயங்கள் தொன்மத்தைப் போலிருக்கும். தோண்டிப் பார்த்தால் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும்.

ஒரு முறை வேட்டைக்குச் சென்றிருந்தபோது குறிப்பிட்ட பகுதியில் இரண்டு மான் தடங்கள் தெரிந்தன. அவை, ஆண் மான்கள் என்றார் பிலியவ். எப்படி என்று கேட்டபோது, பெண்ணை ஈர்க்க ஆண் மான்கள் ஒரு வகை பாறை உப்பை உண்ணும். அந்தப் பகுதியில் இருந்த பாறையில் கொம்புகளின் தடங்கள் இருந்தன. அந்தப் பாறையை நக்கிப் பார்த்து, உப்புச் சுவை அறிந்து கடந்து போனவை ஆண் மான்கள்தான் என்றார்.

அவரைப் போலத்தான் என் கிராமத்தில் உள்ள வயசாளிகளும். மார்கழி மாதம் அதிகாலை 4 மணிக்குச் சத்தம் போடும் ஆனைச்சாத்தான் என்று திருப்பாவையில் ஆண்டாள் குறிப்பிட்டுள்ள பறவை எது என்று தேடினேன். அப்போது என் ஊர் வயசாளி, எத்தனை மணிக்கு எந்தெந்த பறவை கூவும் என்பதை வரிசை கிரமமாக விளக்கினார். காலை 4 மணிக்குக் கூவும் பறவை கரிச்சான் என்று தெரியவந்தது.

பிலியவுக்கும் என் ஊர் வயசாளிக்கும் இடையே நிலம் மட்டும்தான் வேறு. நாம் இயற்கையில் இருந்து அந்நியப்பட்டு வாழ்கிறோம். இயற்கையை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், உணர்ந்துகொள்ள வேண்டும், ரசிக்க வேண்டும் என்று இவர்கள்தான் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.

நாவலின் தலைப்பான காடோடி என்பதே புதிய கலைச்சொல். எப்படி கலைச்சொற்களை தேர்ந்தெடுத்தீர்கள்? பலவும் தமிழிலேயே அமைந்துள்ளனவே?

இது இயற்கை சார்ந்த ஒரு நாவல் என்பதால் கலைச்சொற்கள் அத்தியாவசியமாகின்றன. சில சொற்களைத் தேடவும், உருவாக்கவும் கஷ்டமாக இருந்தது. பல சொற்களை மீட்டெடுத்தேன். மரத்தின் உச்சிப் பகுதிகளின் பெயர் கவிகை. ஃபெசன்ட், சிங்காரக் கோழி.

இதற்கான பழங்குடிப் பெயர்கள் ஆயாம் ஹூத்தான், துவாங். சருகுமான் - கூரன்பன்றி. ஓராங் ஊத்தான் என்பது வாலில்லாக் குரங்கைக் குறிக்கும் மலாய்ச் சொல். கோகியோ அதற்கான பழங்குடிச் சொல். யானைக்கு காஜா எனப் பெயர். நேநே என்பது அதன் பழங்குடிப் பெயர்.

இந்தப் பழங்குடிப் பெயர்கள் எதற்கும் எந்த குறிப்புதவி நூல்களும் கிடையாது. நான் போர்னியோவில் இருந்து திரும்பி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், அந்தச் சொற்களை நினைவில் இருந்து மீட்டுத்தான் கொண்டுவர வேண்டும். ஒரு நாள் இரவு ஒன்றரை மணிக்கு துவாங் என்ற பெயர் ஞாபகத்துக்கு வந்தது.

இன்றைய நவீன இலக்கியம் இயற்கையை, சூழலியலை எப்படிப் பார்க்கிறது என்று நினைக்கிறீர்கள்?

சங்க இலக்கியத்தில் ஒவ்வொரு பாடலும் நிலவியல் காட்சியுடன் இருக்கும். பக்தி இலக்கிய காலம்வரை இந்தத் தொடர்ச்சியைப் பார்க்க முடியும். ஆனால், இன்றைய இலக்கியம் பெரும்பாலும் இயற்கை, உயிரினம், தாவரம் பற்றி எந்த விவரிப்பும் இல்லாமல் இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுத் தொடர்ச்சி அறுபட்டுவிட்டது. நவீன இலக்கியத்தில் கரிசல் எழுத்தாளர் களிடம்தான், கூர்ந்த இயற்கை அவதானிப்பைப் பார்க்க முடிகிறது.

எப்படி ஒரு நாவலில் இருந்து கதை மாந்தரைப் பிரிக்க முடியாதோ, அதுபோலத்தான் நிலமும். நில அடையாளங்கள் அற்ற கதைகள் தட்டையாகி விடுகின்றன. ‘பெயர் தெரியாத் தாவரம்', ‘வந்து அமர்ந்து சென்றதொரு பறவை' என்றெல்லாம் எழுதுகிறார்கள். இது எழுதுபவரின் அறியாமைதான். நவீன தமிழ் எழுத்து தரும் இந்த ஏமாற்றம் தவிர்க்கப்பட வேண்டும்.

‘பசுமை இலக்கியம்’ புதிதாக உருவாகி வரும் ஒரு துறை. அதன் எதிர்காலம் எப்படியிருக்கும்?

முந்தைய பத்தாண்டுகளில் பெண்ணியம், தலித்தியம் போன்ற இலக்கிய முயற்சிகள் தமிழில் புதிய இயக்கமாக உருவெடுத்தன. அடுத்த பத்தாண்டுகள் பசுமை இலக்கிய ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறேன். சூழலியல் சார்ந்த அக்கறை எல்லா தரப்பு எழுத்தாளர்களிடமும் பெருகி வருகிறது.

வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், விவசாய அழிவு, வேலை நிலையின்மை போன்றவை சூழலியல் சார்ந்த அக்கறையும் எழுத்தும் பெருகுவதற்கு அடிப்படையாக இருக்கின்றன. அதுவே உலகை உயிர்ப்பிப்பதாகவும் இருக்கும்.

உதவி: ந. வினோத்குமார்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x