Published : 23 Feb 2015 12:28 PM
Last Updated : 23 Feb 2015 12:28 PM

ஆன்லைனில் சுருட்டிய 6,000 கோடி ரூபாய்

அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதுபோல இன்டெர்நெட் இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது என்பது போல பழகிவிட்டோம். உட்கார்ந்த இடத்திலிருந்தே அனைத்து வேலைகளும் நடக்க வேண்டும். இன்டெர்நெட் வசதி என்பது நமது வளர்ச்சிக்குத்தான்.

ஆனால் அதற்கு இணையாக இன்டெர்நெட் வசதியை பயன்படுத்தி சில கில்லாடி வேலைகளும் நடக்கத்தான் செய்கிறது. அதாவது ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படுகிறபோதே அதற்கு எதிரான தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்து விடுகின்றனர் தொழில்நுட்ப கில்லாடிகள்.

இவர்களை தொழில்நுட்ப கில்லாடிகள் என்பதா, இணைய குற்றவாளிகள் என்பதா என்று குழம்பி போய் நிற்கிறது உலகம். மனிதன் அன்றாட வேலைகளை எளிமைப்படுத்தும் எல்லா தொழில்நுட்பங்களிலும் கைவரிசை காட்டி விடுகின்றனர் இந்த இணையதள குற்றவாளிகள். அந்த வகையில் இணையதள பொருளாதார குற்றவாளிகள் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது கேஸ்பர்ஸ்கை லேப்.

ஆன்டிவைரஸ்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் யாவும் அதிர்ச்சி தகவல்கள். ஆம். இணையதள பொருளாதார குற்றவாளிகளால் 2013வரை திருடப்பட்டுள்ள தொகை ரூ.6000 கோடி என்கிறது இந்த அறிக்கை.

உலகம் முழுவதிலும் உள்ள முக்கியமான 100 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கணக்குகளுக்குள் நுழைந்து இந்த தொகையை திருடியுள்ளனர்.

இந்த இணைய குற்றவாளிகள் கும்பல்களாக வந்து பணத்தை கொள்ளையடிப்பதில்லை. ஒரு கணினி போதும்.

முதலில் ஒரு குறிப்பிட்ட வங்கியை தேர்ந்தெடுத்து, அந்த வங்கியின் செயல்பாடுகளை கண்காணிக்கின்றனர். அந்த வங்கியின் கணினிக்குள் வைரஸ்களை செலுத்தி அதன் செயல்படும் விதத்தை தெரிந்து கொள்கின்றனர்.

வங்கிச் சேவைகளில் பெயர்களை மாற்றுவதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்களை திருடுகின்றனர். ஏற்கெனவே வங்கி aspnet என்கிற பெயரில் ஒரு சேவையை கொடுத்து வருகிறது என்றால் இவர்கள் asp.net என்று இடையில் ஒரு புள்ளி வைத்து வாடிக்கையாளர்களை நம்ப வைக்கின்றனர்.

இப்படி பொருளாதார குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களில் ரஷியாவிலிருந்து 42 சதவீதம் வைரஸ் அப்லோடு செய்கிறார்கள். இதற்கடுத்து 13 சதவீதம் ஜெர்மனியிலிருந்தும், 10 சதவீதம் அமெரிக்காவிலிருந்தும் ஏற்றம் செய்கின்றனர். இதற்கடுத்து பல நாடுகளிலிருந்தும் வைரஸ்கள் ஏற்றம் செய்யப்படுகின்றன.

முக்கியமாக 30 நாடுகளில் இயங்கும் 100க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்தான் இவர்களது இலக்கு. இந்த நிறுவனங்களுக்கு என்று சுமார் 300 க்கும் மேற்பட்ட ஐபி முகவரிகள் இந்த பொருளாதார குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர்.

அமெரிக்கா, பிரேசில், கனடா, ஸ்பெயின், ஐஸ்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, உக்ரேன், ரஷியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, தைவான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட முப்பது நாடுகள் இந்த பொருளாதார குற்றவாளிகளின் ஹிட் லிஸ்டில் உள்ளன.

இதில் ரஷியா, அமெரிக்கா, கனாடா நாடுகளில் மட்டும் 35 முதல் 200 ஐபி முகவரிகளை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

ஒரு வங்கியில் இரண்டு முதல் மூன்று மாதங்களில் தங்களது கைவரிசையை காட்டி விடுகின்றனர். அதற்கடுத்து அடுத்த நாடு, அடுத்த வங்கி என திட்டம் தீட்டி விடுகின்றனர்.

பல வழிகளில் பொருளாதார குற்றங்கள் நடைபெற்று வந்தாலும் ஆன்லைன் சேவைகளில் உள்நுழைவதன் வழியாகவும், ஏடிஎம் மையம் வழியாகவும் தான் அதிக கொள்ளை நடந்திருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. ஏடிஎம், மற்றும் வங்கியின் முன்னால் ஊழியர்கள் மூலமாக பொருளாதார குற்றவாளிகள் தகவல்களை கறப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் எப்போதும் சைபர் குற்றங்களைத் தடுப்பதைதான் முதன்மை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். அதை வாடிக்கையாளருக்கான பொறுப்பு என்று மட்டும் பார்க்கக்கூடாது.

குற்றவாளிகள் முன்பை விடவும் உயர்ந்த தொழில் நுட்பத்தில், ஒருங்கிணைக்கப்பட்டு தாக்குதலில் ஈடுபடுகின்றனர். எனவே முடிந்தவரை எவ்வளவு கட்டுப்பாடுகளையும் இந்த நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆய்வின் முடிவில் சொல்லியுள்ளது கேஸ்பர்ஸ்கை நிறுவனம்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x