

சமூக அறிவியல் வளர்ச்சிக்கான காரணங்களில் ஒன்று அச்சுத் தொழில்நுட்பம். இன்று அந்தத் தொழில்நுட்பம் இன்றும் வியக்கத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கு வித்திட்டவர் ஜெர்மானியரான ஜோகன்னஸ் கூட்டன்பெர்க்.
அவரது கண்டுபிடிப்பு அறிவியலுக்கு மட்டுமல்லாது கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கும் உதவியது. ஆனால் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்திய பிறகும் அவர் வறுமையில் உழன்றார். எந்தப் பொருளாதாரப் பலனும் இன்றி தன்னந்தனியாக ஒரு சிறிய நகரத்தில் மறைந்துபோனார்.
தொழில் கற்றல்
14-ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் மேயன்ஸ் (Mianz) என்னும் நகரத்தில் பிறந்தார் கூட்டன்பெர்க். அவருடைய தந்தை அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் பொற்கொல்லராகப் பணியாற்றியதாகச் சொல்லப்படுகிறது. அதற்காகத் தனியாகத் தொழிற்கூடமும் வைத்திருந்தார்.
கூட்டன்பெர்க்கின் சிறுவயதுப் பருவம் தொழிற்கூடத்தில் கழிந்துள்ளது. கொல்லருக்குரிய தொழில்நுட்ப அறிவுடன் அவர் வளர்ந்தார். தந்தையின் தொழில் சிறப்புடன் நடந்தது. சிறுவன் கூட்டன்பெர்க்கும் தொழிலைக் கற்று வந்தான்.
ஆனால் இடையில் 15-ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் ஏற்பட்ட ஜெர்மனிப் பிரிவினையால் கூட்டன்பெர்க்கின் குடும்பம் தங்களது எல்லாச் சொத்துகளையும் விட்டுவிட்டுச் செல்லும் நிலைமைக்கு ஆளானது. அவரது தாயாருக்குச் சொந்தமான அல்ட்வில்லா (Eltville) என்னும் ஊரில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கினர்.
அங்குதான் கூட்டன்பெர்க் தன் பள்ளிக் கல்வியைத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. அங்குள்ள கிராமப் புறப் பள்ளியில் படித்ததாகவும், அருகில் உள்ள நகரத்தில் கத்தீட்ரல் பள்ளியில் படித்தாகவும் இருவேறு கருத்துகள் உண்டு.
அந்தக் காலகட்டத்தில் அச்சுத் தொழில்நுட்பம் பிரபலம் அடையவில்லை. அப்போது கையெழுத்துப் பிரதியிலேயே புத்தகங்கள் உருவாக்கப்பட்டன. அதை உருவாக்கத் தனியான தொழிற்கூடங்கள் இருந்தன. ஆனால் கூட்டன்பெர்க் தனது கையெழுத்திலேயே தனது புத்தகங்களை உருவாக்கினார்.
கல்லூரிப் படிப்பை எர்ட்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். 1420-ம் ஆண்டு அவர் பட்டம் பெற்றதாகப் பல்கலைக்கழக ஆவணங்கள் சொல்கின்றன. அதன் பிறகு கூட்டன்பெர்க் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை.
அவர் மீண்டும் மேயன்ஸ் நகருக்குத் திரும்பியதாகச் சொல்லப்படுகிறது. வேறு ஒரு நகரத்தில் இருந்ததாகவும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் சொல்கிறார்கள். ஆனால் இதற்குப் பிந்தைய மர்மம் நிறைந்த காலகட்டத்தில்தான் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மாபெரும் கண்டுபிடிப்பை கூட்டன்பெர்க் நிகழ்த்திக் காட்டினார்.
மறுமலர்ச்சிக்கான கண்டுபிடிப்பு
கூட்டன்பெர்க் அச்சு இயந்திரத்தை கண்டுபிடிப்பதற்கும் முன்பே அச்சுத் தொழில் பிரசித்தி பெற்றிருந்தது. ஆனால் எளிமையானதாக இருக்கவில்லை. மரச் சட்டகத்தில் எழுத்துருக்களைச் செதுக்கி அதை மையால் அமிழ்த்தி காகிகத்தில் அச்சு எடுத்தனர். இந்த முறையில் ஒரு பக்கம் முழுவதுக்குமான வார்த்தைகளை முதலில் மரப் பலகையில் செதுக்கிக்கொள்ள வேண்டும்.
இதனால் ஒரு புத்தகத்துக்குப் பயன்படுத்திய சட்டகத்தை மற்றொரு புத்தகத்துக்குப் பயன்படுத்த முடியாது. மற்ற புத்தகங்களுக்கும் ஒவ்வொரு பக்கத்துக்கும் தனித் தனியான சட்டகங்களைத் தயார் செய்ய வேண்டும். இதில் உள்ள சிக்கல்களைக் களைய கூட்டன்பெர்க் முயன்றார்.
மேயன்ஸ் நகரத்தில் ஜோகன் பஸ்ட் என்ற ஒரு செல்வந்தரின் உதவியால் ஒரு தொழிற்கூடத்தை நிறுவி இரவும் பகலுமாக உழைத்தார். கிட்டத்தட்ட தனது 20 ஆண்டுக் கால வாழ்க்கையை அவர் இந்தக் கண்டுபிடிப்புக்குச் செலவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மரச் சட்டகங்களுக்குப் பதிலாக இரும்புச் சட்டகங்களை கூட்டன்பெர்க் பயன்படுத்தினார். மேலும் சட்டகங்களில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஓர் அச்சு எனப் புத்தகப் பக்கங்களில் உள்ள வார்த்தைகளைச் சட்டகங்களில் கோத்து அச்சிட்டார். இதனால் இந்த எழுத்துகளை எல்லாப் புத்தகங்களுக்கும் பயன்படுத்த முடியும் என்பதைக் கண்டறிந்தார்.
அச்சுக் கலையின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணமாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்தது. 1950-ல் சோதனை முயற்சியாக ஒரு கவிதைத் தொகுப்பை அச்சிட்டார். பிறகு 1455-ம் ஆண்டு 300 பக்கங்கள் கொண்ட லத்தீன் மொழி பைபிளை அச்சிட்டார்.
இது கூட்டன்பெர்க் பைபிள் என்று அழைக்கப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்குப் புத்தகங்கள் விற்காத காரணத்தால் ஜோகன் பஸ்ட்டிடம் வாங்கிய பணத்தை கூட்டன்பெர்க்கால் திருப்பித் தர முடியவில்லை. விளைவு நீதிமன்றம் புத்தகங்களையும் தொழிற்கூடத்தையும் ஜோகன்பஸ்டிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
அதன் பிறகு மீண்டும் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவி அவர் பைபிளை அச்சிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் மிகப் பெரிய அறிவியல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த அவர் ஏழ்மையில் வாடினார். 1468-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ல் அடையாளம் தெரியாத ஒருவராக மறைந்துபோனார்.