Published : 24 Feb 2015 12:02 PM
Last Updated : 24 Feb 2015 12:02 PM

கண்டேன் விண்மீன் வெடித்துச் சிதறுவதை...

அன்று ஜனவரி ஒன்பது. ஆண்டு 2008. இடம் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம். நேரம் இரவு.

என்றும் போல அன்றும் அலிசியா சொடேர்பேர்க் (Alicia Soderberg) பகல் முழுவதும் தூங்கி, மாலையில் கண்விழித்தார். பிறகு அலுவலகம் சென்றார். அவர் வானவியலாளர். இரவில் தானே அவருக்கு வேலை!.

அன்று அற்புதம் நடக்கப்போகிறது; அந்த நாள் அவர் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாகப் போகிறது என்று அவர் அறிந்திருக்கவில்லை. ‘நாளை மற்றொரு நாளே’ என்பது எல்லா நாளுக்கும் பொருந்துமா என்ன?

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் விண்ணில் ஏவிய ஸ்விப்ட் (swift) எனும் விண் தொலைநோக்கியை இயக்குவதுதான் அவரின் பணி. உள்ளபடியே ஸ்விப்ட் ஒரு எக்ஸ்ரே தொலைநோக்கி. பிரபஞ்சத்தில் ஏற்படும் பிரளய நிகழ்வுகளைக் காட்டும்.

காணக் கிடைக்காத மரணம்

குழந்தை பிறந்து வளர்ந்து வயது மூப்பு அடைந்து மடிவது போல விண்மீன்களும் பிறந்து வளர்ந்து பின்னர் ஒருகட்டத்தில் மடியும் என வானவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். ‘கொண்டதே கொள்கை’ என்பது அறிவியல் அல்ல அல்லவா? சான்றுகள் வேண்டும். விண்மீன்கள் பிறக்கின்றன வளர்கின்றன என்பதற்கு என்ன நேரடி சான்று?.

பிகே திரைப்படத்தில் உள்ளது போல வேறு கிரகத்திலிருந்து பகுத்தறிவுள்ள ஏதாவது உயிர் பூமியைத் தொலைநோக்கியில் உற்று நோக்குகிறது என வைத்துக்கொள்வோம். ஒரு நகரில் உள்ள எல்லா மனிதர்களையும் தொகுத்துப் பார்த்தால் சிலர் கைக்குழந்தையாக, சிலர் சற்றே வளர்ந்த நிலையில் சிறு பிள்ளையாக, சிலர் யுவதியாக, சிலர் வயது நிரம்பியவராகச் சிலர் தொண்டு கிழமாக இருப்பதை அது பார்க்கலாம் அல்லவா?

மருத்துவமனையில் பிறந்த குழந்தை முதல் சுடுகாட்டில் இறந்த உடல் வரை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்து மனிதன் குழந்தையாகப் பிறந்து வளர்ந்து வயது மூப்பு அடைந்து மரணம் அடைகிறான் என முடிவுக்கு அது வரலாம் அல்லவா?

அதுபோல விண்வெளியில் உள்ள விண்மீன்களைத் தொகுத்துப் பார்த்தால் டி டவுரி அல்லது ஹெர்பிக் (T Tauri or Herbig) வகை கரு நிலையில் உள்ள விண்மீன் முதல் வளர்ந்த சிவப்பு ராட்சசன் விண்மீன் (Red Giant) வரை காணக் கிடைக்கின்றன.

விண்மீனின் வாழ்க்கை வரலாற்றில் ஒரே ஒரு நிலை தான் வானவியலாளர்களால் காண முடியாமல் இருந்தது. அது தான் விண்மீன் இறப்பு நிலை. விண்மீன் மடியும் அந்தக் கணத்தை நேரடியாக வானவியலாளர்கள் பார்க்காத நிலை இருந்தது.

இழுபறிக்கு இடையே சூரியனைப் போலச் சுமார் 30 மடங்கு நிறை கொண்ட விண்மீன்கள் சூப்பர்நோவா எனும் விண்மீன் வெடிப்பில் மடியும் என கணிப்புகள் கூறின. நேரடி சான்று இல்லாதவரை கணிப்பு வெறும் நினைப்பு தான் அல்லவா?

விண்மீனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ளபடியே இழுபறி நிலை தான். விண்மீன் பெரும் நிறை கொண்டது. எனவே சுய ஈர்ப்பு விசையால் கவரப்பட்டுத் தானே தனக்குள் சுருங்கச் முயலும். சுருங்க சுருங்க அதன் மையப்பகுதியில் வெப்பம் அதிகமாககும். வெப்பம் அதிகமாக அதிகமாக கரு பிணைவு இயக்கம் (fusion) ஏற்பட்டு ஆற்றல் உருவாகும்.

இவ்வாறு ஏற்படும் வெப்ப ஆற்றல் விலக்கு தன்மை கொண்டது. வெப்பம் அதிகமாக அதிகமாகப் பொருள்கள் பெரிதாகும் அல்லவா? எனவே உருவாகும் ஆற்றல் விண்மீனை வெளிநோக்கித் தள்ள, ஈர்ப்பு விசை உள்நோக்கித் தள்ள இரண்டு எதிரும் புதிருமான இழுபறி விசைகளுக்கு நடுவே சிக்கித் தவிப்பதுதான் விண்மீன் நிலை.

ஒருகட்டத்தில் விண்மீனின் மையத்தில் உள்ள எரிபொருள் தீர்ந்ததும் கரு பிணைவு மங்கும். ஆகையால் வெளிப்படும் வெப்ப ஆற்றல் குறைந்து போகும் அல்லவா? அப்போது ஈர்ப்பு விசையின் கை ஓங்கும்.

விண்மீன் நிலை குலையும். சூரியனைப் போலப் பல மடங்கு பெரிதான விண்மீன் வெறும் 20-30 கி.மீ விட்டம் உடைய பந்தாகச் சிறுத்துப் போகும். இதை நியூட்ரோன் விண்மீன் என்பர். இவ்வாறு நிகழும் இயக்கம் வெறும் ஒரு சில மணிநேரங்களில் சட்டென்று நடக்கும்.

அரிய வாய்ப்பு

ஒரு பெரிய உருவம் ஆகச் சிறிதாகச் சிறுத்துப் போகும்போது அதிலிருந்து அதிர்ச்சி அலைகள் உருவாகும். அயர்ச்சியுடன் நாளெல்லாம் பள்ளியில் இருந்துவிட்டு வரும் மாணவன் வீட்டில் நுழைந்தவுடன் வேகவேகமாக ஷு, சட்டை, உடைகளைக் கழற்றி வேக வேகமாக வீசுவது போல, அந்த அதிர்ச்சி அலைகள் விண்மீனின் மேல்பகுதியை வெகு வேகத்தில் வெளியே நாற்புறமும் தூக்கி அடிக்கும்.

ஒருபுறம் விண்மீன் கரு சிறுத்துப் போகும், மறுபுறம் விண்மீன் மேலடுக்கு விண்வெளியில் விரிந்து பரவும். இதைத்தான் ‘விண்மீன் வெடிப்பு’( சூப்பர் நோவா) என்பார்கள். “அணையும் விளக்கு பிரகாசமாக எரியும்” என்பார்கள் இல்லையா?

அதுபோல, அந்தக் கணத்தில் விண்மீன் ஆயிரம் சூரியன் பிரகாசமாய் ஜொலிக்கும். வெடிப்பு நடக்கும் அந்தக் கணத்திலிருந்து சில மணிநேரத்துக்கு மாபெரும் ஆற்றலில் எக்ஸ்ரே கதிர்கள் வெளிப்படும்.

சூப்பர் நோவா நடந்த பின் விண்ணில் பரவும் விண்மீன் பொருள், நடுவில் இருக்கும் நியூட்ரோன் விண்மீன் முதலியவற்றைப் பார்க்க முடியும். ஆனால் சில மணித் துளிகள் மட்டும் நீளும் வெடிப்பு நிகழ்வை யாரும் கண்டதில்லை என்ற நிலை இருந்தது. எப்போது எந்த விண்மீன் வெடிக்கும் என கணிப்பது இயலாது. தற்செயலாகத்தான் விண்மீன் வெடிப்பைக் காண இயலும். ஜனவரி 9,2008 அன்று அப்படிப்பட்ட அரிய வாய்ப்பு சொடேர்பேர்க்கு கிடைத்தது.

நேரடியாக முதலில்

ஸ்விப்ட் தொலைநோக்கியில் ஏதாவது புதிதாகத் தென் படுகிறதா எனத் தற்செயலாகக் கணினியைத் திறந்து செயற்கைக்கோள் தகவலைப் பார்த்த அவர் துள்ளிக் குதித்தார். அதுவரை வான் பகுதியில் இல்லாத புதிய எக்ஸ்ரே வீச்சு; வலிமை மிகுந்த ஆற்றல் செறிவுடன் வெளிவருவதைக் கண்டார் அவர்.

தான் பார்ப்பது விண்மீன் வெடிப்பின் தருணம் என உணர்ந்தார் அவர். வேறு எட்டுத் தொலைநோக்கிக் கூடங்களுக்கு ‘கண்டேன் சீதையை’ என்று செய்தி அனுப்பினார். அவர்களும் உடனே வானின் அந்தப் பகுதியை உற்றுநோக்கத் தொடங்கினர். இதுதான் நேரடியாகப் பார்க்கப்பட்ட முதல் விண்மீன் வெடிப்பு நிகழ்வு ஆகும்.

வெடித்த விண்மீன் 8.4 கோடி ஒளியாண்டு தொலைவில் இருக்கும் NGC 2770 என்ற கேலக்ஸியில் இருந்த ஒரு விண்மீன் ஆகும். சூரியனை போல சுமார் 30 மடங்கு அதிக நிறை கொண்டிருந்த விண்மீன். வெடித்த விண்மீனிலிருந்து பொருள்கள் சுமார் நொடிக்கு 10 ஆயிரம் கி.மீ வேகத்தில் பரவின. அந்த சூப்பர் நோவாவுக்கு SN2008D என்று பெயரிட்டனர்.

SN என்பது சூப்பர்நோவாவின் சுருக்கம். 2008 என்பது கண்டுபிடித்த ஆண்டு. D என்பது அந்த ஆண்டில் நான்காவதாக (A, B, C D) இனம் கண்ட சூப்பர் நோவா. ஒரு ஆண்டில் தற்போது சுமார் 200-300 சூப்பர் நோவாக்களை வெடிப்புக்கு பிறகு இனம் காண்கின்றனர். இதில் வெகு குறைவான சூப்பர் நோவாக்கள் தாம் வெடிக்கும் நிலையில் உற்றுநோக்கப் பட்டிருக்கின்றன.

கட்டுரையாளர் விஞ்ஞான் பிரச்சார் நிறுவன விஞ்ஞானி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x