

சீன யாத்ரீகர் ஃபாஹியான் இந்தியாவுக்கு வந்து சென்று இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், சீனாவிலிருந்து இன்னொரு யாத்ரீகர் இந்தியாவுக்கு வந்தார். முதுகில் புத்தகப் பையைச் சுமந்துகொண்டு ஊர் ஊராகச் சுற்றிய அவர் தான் சுவான் ஸாங் (யுவான் சுவாங்).
இந்தப் பயணங்களின் அடிப்படையில் ‘மேற்கு நாட்டுப் பயணங்கள் அல்லது குறிப்புகள்' என்ற பெயரில் 12 தொகுதிகளை அவர் எழுதியுள்ளார். இந்தியாவில் தான் கண்ட அனைத்தையும் பற்றி, இதில் அவர் குறித்து வைத்துள்ளார்.
சுவான் ஸாங், பழமையான சீனக் குடும்பம் ஒன்றில் பிறந்த கடைக்குட்டி. அவருடைய பதிமூன்றாவது வயதிலேயே மூத்த சகோதரர் ஒருவரின் மேற்பார்வையில் மடாலயத்துக்குக் கல்வி கற்க, அவருடைய அப்பா அனுப்பிவைத்தார்.
புத்தர் பிறந்த மண்ணுக்கு
பிறகு பிரபலமாக இருந்த மதப் பள்ளிகள் ஒவ்வொன்றாக ஏழு ஆண்டுகளுக்குச் சுவான் ஸாங் பயணித்தார். இந்தப் பயணங்களால் மடாலயங்கள் மீதான அவருடைய ஆர்வம் தீவிரமடைந்தது. தானும் ஒரு புத்தப் பிட்சுவாக மாற வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார்.
இருபதாவது வயதிலேயே தகுதி பெற்ற ஒரு பிட்சுவாக அவர் மாறிவிட்டாலும், புத்த மதத்தைப் பற்றித் தான் அறிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை அவர் உணர்ந்திருந்தார். பவுத்தக் கோட்பாடுகளில் தெளிவு பெறுவதற்கு, அது தோன்றிய மண்ணான இந்தியா சென்று மூல நூல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தனது சந்தேகங்கள் தீரும் என்று சுவான் ஸாங் நினைத்தார்.
ரகசியப் பயணம்
அதனால் ஃபாஹியானைப் போலவே, 29 வயதில் இந்தியாவில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்கவும், தலைசிறந்த பவுத்த அறிஞர்களின் நூல்களைக் கற்கவும், புத்தர் உபதேசித்த மார்க்கத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளவும் அவர் தீர்மானித்தார்.
அந்தக் காலத்தில் துருக்கியுடன் மோதல் நடந்து கொண்டிருந்ததால், சுவான் ஸாங் பயணம் செய்வதற்கு சீனப் பேரரசர் தாய்ஸாங் அனுமதியளிக்க மறுத்துவிட்டார். அரசர் மறுத்ததற்காகச் சுவான் ஸாங் அமைதியாக இருக்கவில்லை. கி.பி. 629-ல் ரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறினார்.
தழைத்திருந்த பவுத்தம்
அந்நாளில் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை. பாலைவனங்கள், மலைகள், புதிய நாடுகளைக் கடந்து 24,000 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தபோது அவருக்கு நேர்ந்த இடையூறுகளுக்கும் துன்பங்களுக்கும் எல்லையில்லை. ஃபாஹியானைப் போலவே 14 ஆண்டுகள் (கி.பி. 629 - 644) பயணம் செய்தார்.
இந்தியாவுக்குச் சுற்று வழியாக வந்துசேர்ந்தார். இதில் பெரும்பாலான காலம் ஹர்ஷரின் ஆட்சியில் இருந்த இந்தியப் பகுதிகள் எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஃபாஹியான் இந்தியாவுக்கு வந்து சென்று 200 ஆண்டுகளுக்குப் பின்னர் புத்த மதம் என்ன நிலையில் இருந்தது என்பதை சுவான் ஸாங் பயணம் மூலம் அறியலாம். அந்தக் காலத்திலும் பவுத்த மதம் இந்த மண்ணில் போற்றப்பட்டது.