Last Updated : 07 Feb, 2015 02:28 PM

 

Published : 07 Feb 2015 02:28 PM
Last Updated : 07 Feb 2015 02:28 PM

வெள்ளரியால் வென்ற சின்னமனூர் விவசாயி

குறைந்த செலவில் அதிக லாபம் பெற வெள்ளரி சாகுபடி உதவும் என்பதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் சின்னமனூர் விவசாயி ராஜா.

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சுற்றியுள்ள ஊத்துப்பட்டி, முத்துலாபுரம், வீரபாண்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, சுக்காங் கல்லுப்பட்டி ஆகிய கிராமங்களில் வாழைக்கு நடுவில் ஊடுபயிராகவும், தனியாகவும் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நீர்ச் சத்து நிறைந்த இதைச் சாகுபடி செய்ய, குறைந்த செலவு ஆவதுடன் அதிக லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

வெள்ளரி பயிர் முறை

கடந்த 10ஆண்டுகளாக வெள்ளரி சாகுபடி செய்துவரும் ஊத்துப்பட்டி விவசாயி எம்.ராஜா அது பற்றி விளக்குகிறார்:

முதலில் தரமான வெள்ளரி விதைகளைத் தேர்வு செய்யவேண்டும். ஒரு கிலோ விதை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம்வரை விற்பனை செய்யப்படுகிறது. கரிசல் மண் விதைப்புக்கு உகந்தது. தை, மாசி, பங்குனி, சித்திரை ஆகிய 4 மாதங்கள் இந்தப் பயிருக்கான காலம்.

விதைத்த 5 நாட்களில் செடி வளர ஆரம்பித்துவிடும். 15 நாட்கள் கழித்துக் களை பறிக்கவேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதியாக இருந்தால், சொட்டு நீர் பாசனத்தைக் கடைப்பிடிக்கலாம். காய் விளையும் முன்பு 3 முறை மருந்து தெளிக்க வேண்டும்.

விதை சேமிப்பு

பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் என 30 நாட்கள் காய் பறிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு ஏக்கரில் குறைந்தது 500 முதல் 600 கிலோவரை காய் பறிக்கலாம். ஒரு காயை வியாபாரிகள் ரூ.5 என வாங்கிச் சென்று தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்கின்றனர். ஏக்கருக்குச் சுமார் ரூ. 20 ஆயிரம் செலவு ஆகிறது. செலவு போக ரூ.50 ஆயிரம்வரை லாபம் கிடைக்கும்.

முதல் முறை சாகுபடிக்கு மட்டும் இந்தக் கூடுதல் செலவு ஆகும். வெள்ளரிப் பழத்தின் விதையைப் பதப்படுத்திச் சேமித்து, அடுத்து முறை சாகுபடியில் செலவைக் குறைத்துக் கொள்ளலாம் என்கிறார் விவசாயி ராஜா.

விவசாயி ராஜாவைத் தொடர்புகொள்ள: 99424 45290, படங்கள்: ஆர்.சௌந்தர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x