Published : 28 Apr 2014 10:00 AM
Last Updated : 28 Apr 2014 10:00 AM

வேலையைக் காதலி !

குழுத் தேர்வு என்று ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் Group Discussion, Group Analysis என்று சொல்வார்கள்.

“ஒரு குழுவில் உட்கார வைத்து ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுத்துப் பேசச் சொல்வார்கள்; எப்படிப் பேசுகிறார்கள் எனப் பார்ப்பார்கள்” என்ற அளவில் இது அறியப்படுகிறது. தன்னுடன் அமரும் அனைவரும் போட்டியாளர்கள் என்பதால் எல்லோரைக் காட்டிலும் சிறப்பாகப் பேச வேண்டும் என்பது இங்கு மோலோங்கியுள்ள எண்ணம். அறையின் மூலையில் பொதுவாக இரு ஆய்வாளர்கள் உட்கார்ந்து

குறிப்பு எடுப்பார்கள். எனவே எல்லோர் பேச்சும் கண்காணிக்கப்படுவதால் எப்போதும் ஒரு மனப்பதற்றம் இருக்கும்.இங்கு எப்படிப் பேச வேண்டும் எனத் திட்டமிட்டுத் தயாராக வருபவர்கள் இருக்கிறார்கள். எப்படிப் பேசினால் நல்ல மார்க் கிடைக்கும் என்ற ஒரு விவாதம் எப்போதும் உண்டு.

நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் காம்பெடிஷன் என்ற பெயரில் ஆரம்பிக்கும் எல்லா டெல்லி பத்திரிகைகளும் இதைப் பற்றி எழுதுவார்கள். அந்தக் காலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் ஆரம்பித்து வங்கித்தேர்வுகள் வரை வேலைக்கான தேர்வு பற்றிய செய்தி, மாதிரி வினாத் தாள், வெற்றியாளர் அனுபவக் கட்டுரை எல்லாம் இவற்றில் வெளிவரும்.

ஒரு “மாதிரி குழுத் தேர்வு” நடப்புகளை ஆய்வாளர் குறிப்புகள் உட்பட விரிவாக வெளியிடுவார்கள். அது கதை போல் சுவாரசியமாக இருக்கும். அதற்காக அதைத் தவறாமல் படிப்பேன். அதில் பெரும்பாலும் முதலில் பேசுபவருக்குக் கூடுதல் மதிப்பெண்கள் இருக்கும். நல்ல ஆங்கிலமும் நல்ல கருத்துகளும் மதிப்பெண்களைக் கூட்டும். பேசாமல் இருப்பதோ, பிறர் பேசுவதை மறிப்பதோ மதிப்பெண்களைக் குறைக்கும். இப்படி நிறைய “செய்; செய்யாதே” அறிவுரைகள் இருக்கும்.

மனித வளத்துறைக்கு வந்த பின் இந்த ஆய்வு முறைகளைப் பல்லாயிரம் முறை பயன்படுத்தியும் சீரமைத்தும் பெற்ற அனுபவத்தில் இது பற்றி வேலை தேடுவோருக்குத் தெளிவுபடுத்துவது அவசியம் என்று நினைக்கிறேன். முதலில் சில பால பாடங்கள். இது அறிவுத் தேர்வு அல்ல. பாடத்தேர்வு அல்ல. உங்கள் மொழிப் புலமை பார்ப்பது கூட இரண்டாம் பட்சம்தான். ஒரு குழுவில் எப்படி இயங்குகிறீர்கள் என்று பரிசோதிப்பதுதான் முக்கிய நோக்கம். ஏன்?

நிறுவனம் என்பது பல குழுக்கள் அடங்கிய பெரிய குழுதான். அதனால் அந்தக் குழுவில் சேர்த்துக்கொள்ளும் முன் இந்தத் தகவல் முக்கியம். நிறுவனத்தில் சேர்ந்த பிறகு உங்கள் குழு நடத்தைதான் நிறுவன நடத்தையை வழிநடத்தப்போகிறது. அதன் கலாச்சாரம், மதிப்பீடுகள் மற்றும் பணி புரியும் முறைகள் இவற்றைக் கற்றுக்கொள்ளக் கூடியவரா நீங்கள் எனச் சோதிக்கும் முறைதான் குழுத் தேர்வு.

குழுவில் முதன்மை ஆதிக்கம் செலுத்தி, உரக்கப் பேசினால் அதிக மதிப்பெண்கள் என்ற தவறான எண்ணம் பலர் மனத்தில் அபாயகரமாகப் புகுந்துவிட்டது. இது உதவாது. உங்கள் தனி நபர் அறிவையும் திறனையும் மனப்பாங்கையும் சோதிக்க எழுத்துத் தேர்வும் நேர்முகத் தேர்வும் உள்ளன. பிறகு எதற்குக் குழுத் தேர்வு?

மற்ற தேர்வுமுறைகளில் காணக் கிடைக்காத விஷயங்களை இங்கே கண்டுகொள்ளத்தான் இந்த ஏற்பாடு. எவ்வளவு பாசாங்கு செய்தாலும் நம் சமூக நடத்தை வெளியே வரும். எப்படி? தியேட்டரில் இருட்டு வந்தால் விசில் சத்தம் பறக்கும். இடைவெளி வெளிச்சத்தில் எல்லோரும் கண்ணியமான கனவான்களாக நடந்துபோவார்கள். பெண்களைப் பார்த்ததும் ஆண்கள் (ஆண்களைப் பார்த்ததும் பெண்களும்)

ஆங்கிலத்தில் பேச ஆரம்பிப்பார்கள். கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்வார்கள். அதிகாரத்தில் பெரியவர் என்றால் அவர் முன் கால் மீது கால் போட்டு அமர யோசிக்கிறோம். நம்மை யாராவது பாராட்டி விட்டால் அவர் செய்கைக்கு ஆதரவு தரத் தயாராக இருக்கிறோம். இவையெல்லாம் தான் சமூக நடத்தைகள்.

எவ்வளவு மறைத்தாலும் நம் சமூக எண்ணங்களும் நடத்தையும் நம்மை சிறிதாவது காட்டிக் கொடுக்கும்.பிறகு தேவைப்பட்டால் நேர்காணலில் விரிவாக இதை ஆராயலாம். ஆனால் ஒரு மனிதன் தன் சமூக அமைப்பில் எப்படி நடந்துகொள்வான் என்று அறியத்தான் இந்த ஆய்வு. இதன் வீரியம் புரியாமல் சிலர் பாடத் தலைப்புகளை வைத்துச் சரியான பதில்கள் சொல்லும் ஆட்களுக்கு மார்க் போடும் துரதிருஷ்டங்களையும் பார்த்திருக்கிறேன்.

குழுத் தேர்வில் அமர்பவர்களுக்கு என் ஆலோசனை இதுதான்: இயல்பாக இருங்கள். எதையும் அதீதமாகச் செய்யாதீர்கள். உங்கள் இயல்பைக் கடந்த மீறல்கள் சுலபமாகக் கண்டறியப்பட்டுவிடும். நிறைய பேச வேண்டும் என்ற எண்ணத்தை விலக்குங்கள். பிறருடன் இயல்பாகப் பழகுதலும், பிறர் கருத்துக்கு மதிப்பளித்தலும், சமரச முயற்சிகளும், வித்தியாசமான கருத்துகளும் உங்களுக்கு உதவும். ஆனால் உங்கள் இயல்புக்கு எதிராக எதையும் சொல்லாதீர்கள்; செய்யாதீர்கள்.

பதவி உயர்வு சோதனைக்குக்கூடக் குழுத் தேர்வைப் பயன்படுத்துவோம். இதில் நிறுவனப் பணியாளர்களே பங்குபெறுவார்கள். அடுத்த நிலைக்குப் போக இவர்கள் தயாரா என்று அறிய அஸெஸ்மெண்ட் சென்டர் என்று ஒன்று செய்வோம். அதில் ஒருமுறை ஒரு மேலாளர் யாரையும் பேச விடாமல் அரை மணி நேரமாக அவரே பேசினார். வெளியே வந்து “டைம் கொடுத்தா இன்னும் பிச்சு உதறியிருப்பேன்!” என்றார் பெருமையாக.

அவரை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை.

அருகில் இருந்த சக ஆய்வாளர், “இந்த டி.வி. நிகழ்ச்சியைப் பாத்துட்டு எல்லாம் உணர்ச்சிவசப்பட்டுக் கத்திப் பேச ஆரம்பிச்சுட்டாங்க!” என்றார். உண்மைதான். நீங்கள் பிச்சு உதறினால் “கிழி கிழின்னு கிழிச்சிட்டே” என்று ஆய்வாளர்கள் சொல்ல மாட்டார்கள்!

இரண்டாம் உலகப் போருக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடந்தது. வீரத்தையும் துணிவையும் எப்படி அளவிடுவது? உயரமும் அகன்ற மார்பும் உடல் வலிமையைக் காட்டும். மன வலிமையைக் காட்டுமா? துப்பாக்கியின் விசையை அழுத்த விரல் பலமா வேண்டும்? உள்ளத் துணிவு தானே வேண்டும்!

முதல் உலகப் போரில் ஆய்வு முறை சரியில்லை என்பதால் இரண்டாம் போரில் நிறைய உளவியல் ஆய்வுகளைச் சேர்த்தார்கள். அதில் முக்கியமான கண்டுபிடிப்பு: குழுத் தேர்வு. ஒரு மனிதன் சிறு குழுவில் எப்படி இயங்குவானோ அப்படித்தான் பெரிய சமூகத்தில் இயங்குவான் என்ற குழு வளர்ச்சி சித்தாந்தத்தைக் கொண்டுவந்தார் ஓர் உளவியலாளர்.

போர் முடிந்ததும் நிறுவனங்கள் இதை ஆட்கள் தேர்வில் மிக முக்கியமான கருவியாக எடுத்துக் கொண்டது. இதன் அடிப்படையில்தான் இன்று நடக்கும் மனித வளப் பயிற்சிகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அந்த உளவியலாளரின் பெயர் கர்ட் லெவின்.

- gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x