Published : 13 Feb 2015 02:05 PM
Last Updated : 13 Feb 2015 02:05 PM

ஒரு காதல் கதை

Love: Its elementary my dear Watson! என்று அவன் தன் ‘வாட்ஸ் ஆப்' ஸ்டேட்டஸை அப்டேட் செய்த அதே தினத்தில்தான், ‘அந்த நெற்றியில் ஒரு பொட்டு வைத்திருந்தால் ஒரு ஓவியம் முழுமையடைந்திருக்கும்' என்று அவள் புகைப்படத்தைப் பார்த்துச் சொன்ன அந்த நாளில்தான், அவன் காதல் நிராகரிக்கப்பட்டது!

அவனும் அவளும் நட்புடன் பழகிய காலத்தை நினைத்து, அவை தந்த கதகதப்பால் துணிவு கொண்டு, அவனது காதல் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அவளுக்கு ஒரு கடிதத்தை எழுதினான். அதில் ஒரு காதல் கதையைச் சொல்லத் தொடங்கியிருந்தான்.

அந்தக் கல்லூரி நூலகத்தின் ஒரு மூலையில் இலக்கியப் பிரிவு இருந்தது. நூற்றுக்கணக்கான புத்தகங்களுக்கிடையில் ஷேக்ஸ்பியரின் புத்தகமும், வைக்கம் முகமது பஷீரின் புத்தகமும் அருகருகே ஒட்டிக்கொண்டிருந்தன. அந்தப் புத்தகங்களில் இருந்து ஜூலியட்டும், மஜீத்தும் ஒரு நாள் காணாமல் போனார்கள்.

அது மழைக்காலத்தின் முன்னிரவு. மழையின் முத்தங்களை வெறுத்த ஜனக்கூட்டம் தத்தமது வீடுகளில் அடைந்து கிடந்தது. இந்தக் காதல் பறவைகள் கைகளைக் கோத்துக்கொண்டு சாலையில் உலா வந்தன. அவ்வப்போது நிகழ்ந்த மின்னலில் புகைப்படம் எடுத்துக்கொண்டன.

ஜுலியட்டைத் தன் நட்சத்திர வீட்டுக்கு அழைத்துச் சென்றான் மஜீத். அகிரா குரோசவா, சத்யஜித் ரே, பாலுமகேந்திரா, குரு தத் என்று அவன் சேகரித்து வைத்திருந்த திரைப்படத் தொகுப்புகள் மேஜையில் சிதறிக் கிடந்தன. அந்தக் குவியலில் இருந்து ராஜ் கபூரின் 'பாபி' படத்தைத் தேர்வு செய்தாள் ஜூலியட். திரையில் இவர்கள் காதலித்துக்கொண்டிருந்தார்கள்.

ஏதோ ஒரு கணத்தில் அவன் கட்டிலில் கிடந்த கிதார் ஜூலியட்டுக்கு வியப்பைத் தந்தது. ‘ஹேய் நீ கிதார் எல்லாம் வாசிப்பாயா?' என்று கேட்டுக்கொண் டே அதை மீட்டத் தொடங்கினாள். கிதாரின் தந்திகளை ஸ்பரிசித்துக்கொண்டே அவள் தேவாலயப் பாடல் ஒன்றை பாட ஆரம்பித்தாள்....

‘Heaven is the wonderful place; filled with glory and grace; I want to see my saviours face...' என்று இறுதி வார்த்தையை முடிக்கும்போது அவள் கைகள் மஜீத்தின் கன்னங்களைத் தடவியது யதேச்சையானது என்று சொல்லிவிட முடியாது.

மஜீத்தோ பதிலுக்கு அவள் முகத்தை ஏந்தியவாறு, ‘உன் மீதான என் காதல் என்பது, எரியும் மெழுகின் ஒளியில் மத்தேயுவின் சுவிஷேசம் 22-ம் அதிகாரம் 37-ம் வசனத்தைப் படிப்பது போன்று புனிதமானது' என்றான்.

அவள் சிரித்தாள். அவன் சிரித்தான். அவர்கள் சிரித்தார்கள். இவ்வாறு சிரித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் மனதில் ஏந்திக்கொண்டும் நள்ளிரவைக் கடந்தார்கள்.

முன்னிரவு வந்தது. தூக்கக் கலக்கம் கண்களில் தெரியும் ஜூலியட்டைக் கையில் ஏந்தியவாறு அவளது வீடான ஆர்கிட் மலரில் விட்டுவிட்டுச் சென்றான் மஜீத்.

அடுத்த நாள் ஜூலியட்டும், மஜீத்தும் புத்தகங்களில் இருந்து காணாமல் போயிருந்தது கல்லூரியில் பெரும் பிரச்சினையை உண்டு பண்ணியது. ஜூலியட்டின் வீடு, மஜீத்தின் அறை என எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தாயிற்று. அவர்களைக் காணவில்லை.

அவர்களின் இரு வீட்டாரும் சண்டை பிடித்துக்கொண்டார்கள். பிறகு அந்தச் சண்டை இரு சமூகங்களின் கலவரமாக மாறியது. அந்தக் கலவரத்தின் இறுதிச் சொட்டு ரத்தம் காய்ந்த பிறகும், அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பரிதி கண்ட பனிபோல அவர்கள் மறைந்து போயிருந்தார்கள்.

இது மற்றவர்களுக்கு வேண்டுமானால் கதையாக இருக்கலாம். அவர்கள் மறைந்து போனதற்கு மத வேற்றுமைதான் காரணம் என்பதை அனைவரும் அறிந்திருக்கலாம்.

ஆனால் என்னை நீ நிராகரித்ததற்கு, சமூகத்தின் உயர்ந்த இடத்தில் நீ இருக்கிறாய் என்பதும், நான் தாழ்ந்த இடத்தில் இருக்கிறேன் என்பதைத் தவிர வேறு என்ன காரணம்? இது மற்ற யாரையும் விட உனக்கும் எனக்கும் நன்றாகத் தெரியும். இல்லையா... ஜனனி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x