Last Updated : 03 Feb, 2015 03:30 PM

 

Published : 03 Feb 2015 03:30 PM
Last Updated : 03 Feb 2015 03:30 PM

மதிப்பெண் குவிப்பது பொருட்டல்ல

பத்தாம் வகுப்பில் தட்டுத் தடுமாறி பாஸாகி வருபவர்கள் முதல் தொலைநோக்குப் பார்வையில் ‘இந்தியன் எகனாமிக் சர்வீஸ்’ குடிமைப் பணி தேர்வெழுத விரும்பும் விவரம் உள்ளவர்கள்வரை பல்வேறு பிரிவினரும் பொருளியலை எடுத்துப் படிப்பார்கள்.

கலைப் பாடங்களில் செய்முறை தேர்வின்றி எளிதில் மதிப்பெண் குவிக்க உதவும் ஒரு பாடம் உண்டென்றால், அது பொருளியல்தான். எளிதான பாடத் தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகளை, இன்னும் எளிமையாக்கித் தருகிறார் விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் (பொருளியல்) ஆர். செந்தில்குமார்:

ஒரு மதிப்பெண்- பிரித்துப் படி:

50 ஒரு மதிப்பெண், 10 மூன்று மதிப்பெண், 6 பத்து மதிப்பெண், 3 இருபது மதிப்பெண் கேள்விகளுடன் வினாத்தாள் அமைந்திருக்கும்.

இதில் சரியான விடையைத் தேர்ந்தெடு 14, கோடிட்ட இடத்தை நிரப்புதல் 12, பொருத்துக 12, ஓரிரு வார்த்தையில் விடையளி 12... என நான்கு வகைகளில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 50 அடங்கிய ‘பகுதி-அ’ அமைந்திருக்கும். மொத்தமுள்ள 12 பாடத் தலைப்புகளில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் இந்த வகையில் தலா நான்கு கேள்விகள் என மொத்தம் 48 கேள்விகள் இடம்பெறும்.

மீதமுள்ள இரண்டில் ஒரு கேள்வி ஏதேனுமொரு பாடத்திலிருந்து இரண்டாவது கேள்வியாகவும், ஒரேயொரு கேள்வி மட்டும் பாடத்துக்கு உள்ளிருந்தும் கேட்கப்படும். இந்த வகையில் 50 ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம்பெறும்.

பாடத்துக்கு 20 எனப் புத்தகத்தில் மொத்தம் 240 ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இவற்றைப் படிக்கும்போது மேற்கண்ட நான்கு வகைக் கேள்விகளாகப் பிரித்துப் படித்தால் மலைப்பு வராது. அதாவது 240 கேள்விகளில் ஒவ்வொரு வகை பிரிவிலும் தலா 60 கேள்விகளில் இருந்து கேட்கப்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் கேள்விகள் என்றால் 60-ல் இருந்து 14; கோடிட்ட இடத்தை நிரப்புதல் உள்ளிட்ட ஏனையவற்றில் 60-ல் இருந்து தலா 12 கேள்விகள்... எனப் பிரித்துப் படிப்பதும் திருப்புதல் மேற்கொள்வதும், நேரத்தை மிச்சப்படுத்துவதோடு குழப்பத்தையும் தவிர்க்கும். இந்த வகையில் படித்து, ஒரு மதிப்பெண் பிரிவில் எளிதில் முழு மதிப்பெண்களைப் பெறலாம்.

3 மதிப்பெண் - முக்கியக் கேள்விகள் கவனம்:

15-ல் 10 என்ற அடிப்படையில் 3 மதிப்பெண் கேள்விகள் அடங்கிய ‘பகுதி-ஆ’ அமைந்திருக்கும். எட்டாம் பாடத்திலிருந்து 3 மதிப்பெண் கேள்வி கிடையாது. 2, 5, 6, 7 ஆகிய நான்கு பாடங்களில் இருந்தும் தலா இரண்டு 3 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். இந்தப் பிரிவில் எழுத வேண்டிய 10-ல் 8 கேள்விகள் இந்த நான்கு பாடங்களில் இருந்தே வரும். மீதமுள்ள 2 கேள்விகள், மிச்சப் பாடங்களில் இருந்து கேட்கப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் இடம்பெறும் குறிப்பிட்ட சில கேள்விகளைக் குறிவைத்துப் படித்தால் மேற்படி 2 கேள்விகளையும் எதிர்கொண்டுவிடலாம். இந்த வகையில் அதிக வாய்ப்புள்ள 3 முக்கியக் கேள்விகள் இங்கே தரப்படுகின்றன. இவற்றிலிருந்து 2 கேள்விகள் வருடாந்திரம் தொடர்ந்து கேட்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அவை: ‘1. வாய்ப்பு செலவு என்றால் என்ன? 2. குறுகிய காலம், நீண்ட காலம் வேறுபடுத்துக. 3. நீர்மை விருப்பத்தின் 3 நோக்கங்கள் யாவை?’

10 மதிப்பெண் - 3 பாடங்களில் முழு மதிப்பெண்:

10-ல் 6 என்ற அடிப்படையில் 10 மதிப்பெண் கேள்விகள் அடங்கிய ‘பகுதி-இ’ அமைந்திருக்கும். 7, 10, 12 ஆகிய 3 பாடங்களில் இருந்து தலா 2 கேள்விகள் இடம்பெறும் என்பதால், இந்த 6 கேள்விகளையும் எதிர்கொள்வது மிக எளிது. இந்த 3 பாடங்களின் 10 மதிப்பெண் கேள்விகளைத் தயார் செய்தால் ‘பிரிவு இ’-ல் முழு மதிப்பெண்ணை எளிதாகப் பெறலாம்.

இது தவிர 2, 5, 6, 8 ஆகிய பாடங்களில் இருந்து தலா ஒரு 10 மதிப்பெண் கேள்வி கேட்கப்படும். 1, 3, 4, 9, 11 ஆகிய பாடங்களில் 10 மதிப்பெண் கேள்வி கேட்கப்படுவதில்லை. இந்த வகையில் முதலில் குறிப்பிட்ட 3 பாடங்களில் இருந்தே 10 மதிப்பெண் பகுதியை எதிர்கொள்ளலாம். அவற்றில் ஏதேனும் சிரமமாக இருப்பின், இரண்டாம் கட்டப் பரிசீலனையாகத் தலா 1 பத்து மதிப்பெண் கேள்வி இடம்பெறும் பாடங்களில் தயாரிப்பு மேற்கொள்ளலாம்.

20 மதிப்பெண் - சாய்ஸில் கவனம்:

6-ல் 3 என்ற அடிப்படையில் 20 மார்க் கேள்வி ‘பகுதி- ஈ’ அமைந்திருக்கும். இந்த 6 கேள்விகளும் 1, 3, 4, 8, 9, 11 ஆகிய 6 பாடங்களில் இருந்து மட்டுமே கேட்கப்படும் என்பதால், இவற்றில் எளிதான நான்கு பாடங்களை மாணவர் தேர்வு செய்து படிக்கலாம். இந்த நான்கில் இருந்தும் நன்கு தெரிந்த ஏதேனும் 3 வினாக்களுக்குப் பதில் அளிக்கலாம்.

20 மதிப்பெண் கேள்வியில் முழு மதிப்பெண் பெறுவதில் படிப்பதைவிட, சாய்ஸில் அதற்குத் தோதான கேள்விகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது முக்கியம். பத்தி பத்தியாக விடையுள்ள கேள்விகளைவிடக் கணிதம் போல், பல படிநிலைகளில் மதிப்பெண் வழங்கும் பதில்கள் உள்ள வினாக்களைத் தேர்வு செய்யலாம்.

வரைபடம், விளக்கம், அட்டவணை ஆகியவை உள்ள வினாக்கள் இந்த வகையில் சேரும். பொருள்/இலக்கணம், எடுகோள்கள், விளக்கம், வரைபடம், வரைபட விளக்கம் என உரிய படிநிலைகளில் விடையளித்து, அவற்றுக்கு உரிய முழு மதிப்பெண்களைப் பெறலாம். ஒரு வேளை எங்கேனும் தவறானால், அந்தப் படிநிலைக்குரிய மதிப்பெண் தவிர, ஏனையவற்றைச் சிதறாது பெற்றுவிடலாம்.

தவிர்க்க வேண்டிய தவறுகள்

பாடத்தின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள கேள்விகளில் இருந்தே வினாத்தாள் தயாரிக்கப்படும் என்பதால், இதர பாடப் பிரிவு மாணவர்களுக்கு மாறாகச் சிரமமின்றிப் படிக்கலாம். ஆனால், எளிதான பாடம் என்ற அலட்சியமே சில சமயம் காலை வாரக்கூடும்.

உதாரணத்துக்கு விடைகளை விழுந்துவிழுந்து படிப்பவர்கள், அது எதற்கான கேள்வி என்பதை தெளிவாகத் தொடர்புபடுத்திப் படிக்காததால் தேர்வில் விடைகளை மாற்றி எழுதிவிடுவதுண்டு. இதேபோல, கேள்விகளுக்கு இடையே வரைபடங்களை மாற்றி வரைவதும் மதிப்பெண்களைப் பறித்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x