

சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் சாப்பிடுவது என்பது கடலில் மட்டும் அல்ல. விண்வெளியிலும் நடைபெறுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சைமன் டிரைவர் என்பவரின் தலைமையில் 90 விஞ்ஞானிகள் ஏழு ஆண்டுகள் ஓர் ஆய்வை நடத்தினர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளின் உதவியோடு நடந்த இந்த ஆய்வு 2012-ல் வெளியிடப்பட்டது.
ஆஸ்திரேலியா நடத்தும் வானியல் ஆய்வுக்கான சர்வதேச மையத்தின் பேராசிரியர் டாக்டர் ஆரோன் ரோபோதம் இதுபற்றி விளக்கும்போது, “ இந்த ஆய்வில் 22 ஆயிரம் கேலக்ஸிகள் வரை ஆய்வு செய்யப்பட்டன. வளர்ந்து ஒரு நிலையை அடைகிற கேலக்ஸிகள் தமக்கு அருகில் உள்ள பலம் குறைந்த சின்ன கேலக்ஸிகளை விழுங்கி விடுகின்றன. நமது சூரியக் குடும்பம் இயங்குகிற பால்வெளி மண்டலக் காலக்ஸி கூடத் தன் பக்கத்தில் இருந்த சின்னக் கேலக்ஸிகளைத் தனது ஈர்ப்பு சக்தியால் கவர்ந்து விழுங்கியுள்ளது” என்கிறார்.
“இன்னும் 500 கோடி வருடங்களில் நமது பால்வெளி மண்டலத்துக்கு வெளியே உள்ள நம்மைவிடப் பெரிய ஆண்ட்ரோமேடா எனும் பெரிய கேலக்ஸி நம்மைக் கூண்டோடு விழுங்கிவிடும்” எனவும் அவர் தெரிவிக்கிறார்.
ஆண்ட்ரோமடா கேலக்ஸியில் ஒரு லட்சம் கோடி நட்சத்திரங்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நமது பால்வெளி மண்டலத்தில் 10 ஆயிரம் கோடிகள் முதல் 40ஆயிரம் கோடிகள் வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
“ஒப்பீட்டளவில் நமது கேலக்ஸி சிறியதாக இருப்பதால் ஆண்ட்ரோமடாவின் கவர்ச்சி ஆற்றலுக்கு ஈடு கொடுக்காமல் அதனோடு படிப்படியாக நெருங்கி, மோதி, ஒன்றுகலந்துவிடும்” என்கிறார் அவர். இந்த நிகழ்ச்சி எப்படி நடக்கும் என்பதை விஞ்ஞானிகள் படமாகவும் உருவாக்கி உள்ளனர். (http://vimeo.com/106350053 )
சென்னையின் தெருக்களில் சில நேரம் சண்டைகள் நடக்கும். சண்டையை முடிந்தவரைக்கும் தவிர்க்க வேண்டும் என்ற உணர்வில் பலவிதமான இலக்கிய வசைச் சொற்கள் பயன்படுத்தப்படும். அப்படிப்பட்ட ஒரு டயலாக் “ நீயெல்லாம் எனக்கு சிங்கிள் டீ,பிஸ்கோத்து. ஒரு டீயில ஒன்னைத் தொட்டுச் சாப்டிருவேன்” என்று பேசும். தெருவில் மட்டும் அல்ல. விண்வெளியிலும் இந்த டயலாக் நடைமுறையில் இருப்பது போலத்தான் தெரிகிறது.
சைமன் டிரைவர்