Last Updated : 24 Feb, 2015 01:25 PM

 

Published : 24 Feb 2015 01:25 PM
Last Updated : 24 Feb 2015 01:25 PM

தொழிற்கல்வி பாடங்களிலும் சாதிக்கலாம்: வெற்றிப்பாதை பிளஸ் 2

(தொழிற்கல்வி பாடங்கள் - சென்ற இதழ் தொடர்ச்சி...)

பொது இயந்திரவியல்

ம. ரவி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூர், திருச்சி மாவட்டம்:

கல்லூரிக்கு முன்பே பொறியியலைப் படிக்கும் வாய்ப்பு பெற்ற இந்த மாணவர்களுக்கு, பொறியியல் மேற்படிப்பில் சேர தனி ஒதுக்கீடும் உண்டு. ஆனால், அதற்கு உரிய உயர் மதிப்பெண் அவசியம்.

ஒரு மார்க் பகுதியில் சரி பாதியான ஓரிரு வார்த்தையில் விடையளி பகுதியில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை இழக்கிறார்கள். பதில்களில் இருந்து கேள்விகளை உருவாக்கும் பின்னோக்கிய உத்தி இதில் கைகொடுக்கும். அதேபோல மொத்தமுள்ள 30 ஒரு மார்க்கில், 25 மட்டுமே பாடத்தின் பின்னால் இருந்து கேட்கப்படும்.

ஏனையவை பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்படும். எனவே 4, 10, 20 மார்க் கேள்விகளைப் படிக்கும்போதே, அவற்றில் அடங்கியிருக்கும் 1 மார்க் கேள்விகளை உள்வாங்கிக் கொண்டால் ஒரு மார்க்கில் இழப்பு நேராது.

முதல் 5 பாடங்களைப் படித்தாலே குறைந்தது 120 மார்க் பெறலாம். 10 மார்க் பகுதியில் விடையளிக்கும்போது படம் வரைவது தொடர்பான பதில்களால் நேர விரயம் நேரும் என்பதால், அவற்றுக்குப் பதிலாகப் பாயிண்ட்களில் அடங்கும் பதிலை எழுதலாம்.

குறிப்பாக வேறுபாடுகள் தொடர்பான கேள்விகள் 1 அல்லது 2 கட்டாயம் வரும் என்பதால், சாய்ஸில் அவற்றுக்கு முன்னுரிமை தரலாம்.

ஆனால், 20 மார்க் வினாக்கள் கிட்டத்தட்ட அனைத்துமே படம் மற்றும் விளக்கங்களை உள்ளடக்கியிருக்கும். அவற்றை எழுதி முடிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும். படம் வரைதலில் உரிய பயிற்சி இருந்தால், இந்தச் சிரமத்தைத் தவிர்க்கலாம்.

தட்டெழுத்தும் கணிப்பொறி இயக்க முறையம் (தட்டச்சு)

எஸ். தெய்வீகன், ஸ்ரீ மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்:

கல்லூரிகளின் வளாக நேர்காணல் போலப் பள்ளியில் படிக்கும்போதே வேலை தேடித்தரும் பாடப்பிரிவு இது. நடப்புக் கல்வியாண்டு முதல் இப்பாடத்துக்கான தேர்வு, செய்முறை தேர்வாக மாற்றப்பட்டிருந்தாலும், அடிப்படையில் தியரி பாடத்துக்கான தயாரிப்பு முறைகளே இதற்கு உதவும்.

50 மதிப்பெண்களுக்கான வேகத் தேர்வின் தொடக்கம் மற்றும் நிறைவு பகுதியில் நிறைய மாணவர்கள் பதற்றம் காரணமாக மதிப்பெண்களை இழக்கிறார்கள். அவசரம், அருகில் தட்டச்சுபவரின் வேகத்துடன் ஒப்பிடுதல் போன்ற காரணங்களால் இந்தப் பகுதியில் மார்க் சரியும். இதற்கு வினாத்தாளை நன்கு வாசித்து விவரங்களை உள்வாங்கிக்கொண்டு நிதானமாகப் பதிலளிப்பது உதவும். விடுபட்ட வரிகளைத் திருப்புதலின்போது தனியாகத் தட்டச்சு செய்து மார்க் இழப்பைத் தவிர்க்கலாம் என்பதால், பதற்றம் தேவையில்லை.

புள்ளிவிவரப் பட்டியல், லாபம் நட்டம், வரவு செலவு, விளம்பரம், நிகழ்ச்சி நிரல், அறிவிப்பு ஆகிய வினாக்கள் அடங்கிய, அடுத்துவரும் 100 மதிப்பெண்களுக்கான பகுதியில் பிழைகள் அதிகம் வர வாய்ப்புண்டு. அவற்றைத் தவிர்க்கப் பயிற்சியும் கவனமும் மட்டுமே கைகொடுக்கும்.

பொதுச் செவிலியம்

எலிசபெத், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒட்டன்சத்திரம்

இப்பாடத்தில் 200 மதிப்பெண்களை முழுமையாக வசமாக்க, நேர மேலாண்மையில் பயிற்சி அவசியம். அதிகம் எழுத வேண்டிய தாள் என்பதால், நன்றாகப் படிப்பவர்கள்கூடத் தேர்வில் தடுமாறுவார்கள். எனவே, போதுமான எழுத்துப் பயிற்சி அவசியம். 4 மார்க் கேள்விக்கு விடையளிக்கும்போது நேரச் சேமிப்புக்காக, 4 பாயிண்ட்களை எழுதிவிட்டு அடுத்த வினாவுக்குச் சென்றுவிட வேண்டும்.

நோக்கம், பயன், செயல்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் படித்தால் 4 மார்க் கேள்விகளை எதிர்கொள்ளலாம். அதேநேரம் ஒரே கேள்வி 4 அல்லது 10 மார்க் பகுதிகளில் இடம்பெறும் என்பதால், அதற்கேற்றவாறு முன் திட்டத்துடன் எழுதி முடிக்க வேண்டும்.

தாய் சேய் நலம் என்ற 6-வது பாடம் மிக முக்கியமானது. இதை மையமாக வைத்து அதிகபட்சம் 50 மார்க்வரை பல்வேறு கேள்விகள் வர வாய்ப்புண்டு. எனவே, திருப்புதலில் இந்தப் பாடத்துக்குக் கூடுதல் கவனம் அவசியம். 20 மார்க் பகுதியில் உபதலைப்புகளின் கீழ் பாயிண்ட்களை எழுதுவது முழு மதிப்பெண்களைப் பெற்றுத்தரும்.

துணி மற்றும் ஆடை வடிவமைத்தல்

வி. வசந்தா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனி.

ஃபேஷன் டெக்னாலஜி டிப்ளமா முதல், டெக்ஸ்டைல் இஞ்சினீயரிங் டிகிரிவரை பெண்களுக்குத் தளம் அமைத்துத் தரும் பாடம் இது. 30 ஒரு மார்க் பகுதியில் சரி பாதி கேள்விகள் பாடத்துக்கு உள்ளிருந்தே கேட்கப்படும். பெயர்கள், ஆண்டுகள், கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட தடித்த எழுத்துகளில் இடம்பெற்றவற்றைக் குறிவைத்து, இந்தக் கேள்விகளைத் தயார் செய்யலாம்.

அதிலும் ஒரு மார்க் கேள்விகளின் 2-வது பாதியான ஓரிரு வார்த்தையில் விடையளி பகுதியில், மதிப்பெண் இழப்புக்கு வாய்ப்பு அதிகம். அதைக் களையும் வகையிலும் தேர்வுக்கான தயாரிப்பு அமைந்திருக்க வேண்டும்.

நான்கு மார்க் பகுதியில் பாயிண்டுக்கு ஒரு மார்க் உத்தரவாதம் என்பதால், அதற்கேற்றவாறு குறிப்புகளைக் குறிவைத்துப் படிக்க வேண்டும். 10 மற்றும் 20 மார்க் கேள்விகளில் அதிகமானோர் செய்யும் தவறு, சிறு வித்தியாசத்தை உள்ளடக்கிய கேள்விகளில் கவனம் பிசகி விடைகளை மாற்றி எழுதிவிடுவதுதான்.

அதேபோல ஒரே கேள்வி 10 மார்க் அல்லது 20 மார்க்கில் கேட்கப்படுவதற்கு ஏற்பப் பதிலும் அமைந்திருக்க வேண்டும். அதேபோல 10, 20 மார்க் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, படைப்புத் திறனைப் பறைசாற்றும் விதத்தில் சற்றுக் கற்பனை கலந்தும் எழுதலாம்.

அதற்கேற்றவாறு பாடக் கருத்துகளைப் பொது உலக விவரங்களோடு பொருத்தி எழுதவும் செய்யலாம். மதிப்பெண்களுக்கு ஏற்ற வகையில் தேவையான எண்ணிக்கையில் பாயிண்ட்களாக எழுதினால் போதும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x