

அமெரிக்க எழுத்தாளர் ஜிம் ஸ்டாவல் பல அவதாரங்கள் எடுத்தவர். தேசிய அளவிலான பளுதூக்கி போட்டி வெற்றியாளர், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர், தலைமைப் பண்பு மற்றும் ஆளுமைத் திறனை ஊக்குவிக்கும் தலை சிறந்த பேச்சாளர், தொழிலதிபர், அமெரிக்காவின் பிரபலத் தொலைக்காட்சி நிறுவனமான நரேட்டிவ் டெலிவிஷன் நெட்வர்க் (Narrative Television Network) தலைவர் இப்படி அவர் பெருமைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
1999-ல் 40 லட்சம் அமெரிக்க வாசகர்களைக் கட்டிப்போட்ட “தி அல்டிமேட் கிஃப்ட்” என்னும் நாவலைப் படைத்தவரும் ஜிம் ஸ்டாவல்தான். 2006-ல் அந்நாவலைத் தழுவி அதே பெயரில் ஓர் ஹாலிவுட் திரைப்படமும் எடுக்கப்பட்டது.
இப்படிக் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்க மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஜிம் ஸ்டாவல் இப்போது ஒட்டுமொத்த உலகையும் வசீகரிக்கும் விதத்தில் அல்டிமேட் ப்ரொடக்டிவிட்டி (Ultimate Productivity) எனும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
வெற்றியின் நாயகனே
இறுதியான உற்பத்தி திறன் எனும் தலைப்பு கொண்ட இந்நூல் இக்காலத்தின் உடனடி தேவை எனச் சொல்லலாம். வெற்றிக்கும் தோல்விக்குமான வேறுபாட்டைத் துல்லியமாக எடுத்துரைக்கும் பதிவு இது. மனிதர்களைப் போலவே வெற்றிக்கும் பல அர்த்தங்கள் உண்டு என்கிறார் ஜிம். அதிலும் அர்த்தமுள்ள ஒரே வெற்றி கதை எதுவெனில் உங்களுடைய வெற்றிச் சரித்திரம்தான் என்கிறார்.
நான் பொறுப்பேற்கிறேன்
உங்கள் இலக்கை நிர்ணயிப்பது எப்படி? அதை அடைவது எப்படி? அதற்கு உங்கள் உலகை நீங்கள் எப்படியெல்லாம் மாற்ற வேண்டும்? என்பவற்றைக் கற்றுத் தரும் புத்தகங்கள் பல உண்டு. அத்தனையும் வழிகாட்டிகள் மட்டுமே. வெற்றியை யாரும் யாருக்கும் தர முடியாது. வெற்றி பெற விழையும் நபர்தான் வெற்றிக்கான சூத்திரத்தை உருவாக்க வேண்டும் என அறுதியிட்டுச் சொல்கிறார் ஜிம்.
அதற்கு முதலில் உங்கள் கடந்த கால செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் உங்களுடைய கடந்த காலத்தின் விளைவுதான் உங்களுடைய நிகழ்காலம். அப்படியானால் உங்களுடைய நிகழ்காலத்தை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போதுதான் வெற்றிகரமான எதிர்காலத்தைப் படைக்க முடியும்.
செயல் வேறு உற்பத்தி வேறு
உற்பத்தி என்றால் என்ன என்பதைப் பல கோணங்களில் அலசி ஆராய்கிறார் ஜிம். செயல்பாட்டையும், உற்பத்தியையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக்கொள்ள வேண்டாம் என்கிறார். நாம் எதையோ செய்து கொண்டிருப்பதாலேயே ஆக்கபூர்வமான காரியத்தில் ஈடுபட்டிருப்பதாக நினைத்துக் கொள்ளக் கூடாது.
நாம் நிறையச் செய்கிறோம், ஆனால் ஆக்கப் பூர்வமாக எதுவுமே செய்வதில்லை. நமக்கு நாமே பல கேள்விகளைத் தொடுப்பதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் உருப்படியான வேலை. அவை:
நான் உண்மையிலேயே எதை அடைய விரும்புகிறேன்?
நான் அதை அடைய வேண்டும் என உண்மையிலேயே விழைகிறேனா?
என்னுடைய இந்த எத்தணிப்பு என் இலக்கிற்கு இட்டுச் செல்லுமா?
என் இலக்கை அடையத் தற்போது நான் மேற்கொள்ளும் முயற்சியைக் காட்டிலும் சிறப்பான வழி உள்ளதா?
இது போன்ற கேள்விகளைக் குறித்து வைத்துக் கொண்டு உங்களை நீங்கள் தினம் தினம் மறுபரிசீலனைக்கு உட்படுத்துங்கள். “ஒரு விஷயத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறேன், எந்தக் காலகட்டத்திலும் செயலையும், உற்பத்தியையும் குழப்பிக் கொள்ளக் கூடாது” இப்படிச் சொல்கிறார் ஜிம்.
ஜிம் ஸ்டவலின் பயிற்சியாளர் அவருக்கு தந்த ஊக்கம், ஜிம் தன் அனுபவங்களிலிருந்து தானே கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பாடம் இவை அனைத்தும் இந்நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. வாசகர்களைப் புரட்டிப்போடும் நூல் இது என்பதில் ஐயமில்லை.
நன்றி: கட்டுரையாளர் ‘தி இந்து’ குழும நிறுவனத்தின் மனித வளத்துறையின் முதுநிலை மேலாளர்
தமிழில்: ம.சுசித்ரா