Published : 16 Feb 2015 01:37 PM
Last Updated : 16 Feb 2015 01:37 PM

வெளி நாட்டு பண பரிவர்த்தனை அவசியமாவது ஏன்?

ஒரு நாட்டினுடைய பணத்தை இன்னொரு நாட்டின் பணத்திற்கு ஈடான மதிப்பாக மாற்றிக் கொள்வதைத்தான் பண பரிமாற்றம் என்கிறோம். குறிப்பாக வெளிநாட்டு பணத்தை இந்தியாவில் நேரடியாக செலவு செய்ய முடியாது. அந்த பண மதிப்புக்கு ஈடாக இந்திய ரூபாயாக மாற்றிக் கொள்வதுதான் பண பரிமாற்றம். வெளிநாட்டில் பணி நிமித்தமாக இருப்பவர்கள் இந்தியாவில் தங்கள் உறவினர்களுக்கு பணத்தை அனுப்ப இந்த வசதியைத்தான் பயன்படுத்த வேண்டும். இப்படியான பண பரிமாற்றத்திற்கு நவீன வசதிகளும் வந்துவிட்டன.

வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் பணத்தை உள்நாட்டிலேயே எளிதாக மாற்றிக்கொள்ள இந்த சட்டபூர்வமான வழிகளைத்தான் பயன்படுத்த வேண்டும். இந்த சட்டபூர்வமான வழிகளில் அந்நிய செலாவணியாக அனுப்பும்போது அதற்காக பிடித்தம் எதுவும் செய்யப்படுவதும் இல்லை. இதன் மூலம் விரைவாகவும் பணப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

இந்த வெளிநாட்டு பணபரிமாற்ற நடவடிக்கைகள் மத்திய அரசின் கண்காணிப்பு கீழ் உள்ளது. ரிசர்வ் வங்கி இவற்றைக் கட்டுப்படுத்துகிறது. பண பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கியிடம் பெற்றுள்ள முகவர்கள், நிறுவனங்கள், வங்கிகள் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும்.

ஆன்லைன்

இணையதளம் மூலமும் பண பரிவர்த்தனை செய்ய முடியும். வங்கிக் கணக்கு - இணையதள நடவடிக்கைகள் தெரிந்தவர்கள் இந்த வசதியில் பண பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இந்த விரைவான பண பரிமாற்ற நடவடிக்கைகளை தனியார் வங்கிகள் வழங்குகின்றன. தற்போது மொபைல் பேங்கிங் முறை மூலமும் பண பரிமாற்ற நடவடிக்கைகள் நடக்கிறது.

வங்கி

பெரும்பாலான முன்னணி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை வழங்குகிறது. நேஷனல் எலக்ட்ரானிக் பண்ட் டிரான்ஸ்பர்ஸ் என்கிற அடிப்படையில் அந்நிய செலாவணி சேவையை வழங்குகின்றன. வெளிநாட்டிலிருப்பவர் தனக்கு அருகில் உள்ள வங்கிக் கிளையில் உரிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும். பெற வேண்டியவர் இந்தியாவில் உள்ள அதன் கிளையில் வங்கி கணக்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

முகவர்கள்

வெளிநாட்டில் இருப்பவர்கள் எளிதாக தேர்ந்தெடுக்கும் முறை இது. சட்ட ரீதியான பண பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டதுதான் என்றாலும் மிக சுலபமான சேவையாக மக்கள் கருதுவதால் இன்னும் இந்த முறையைதான் மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். பண பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி வாங்கியுள்ள சர்வதேச முகவர்களிடத்தில் பணத்தை செலுத்த வேண்டும். அந்த பணத்தை பெற வேண்டிய நபர் தங்களுக்கான அடையாள ஆவணங்கள் அடிப்படையில் இங்குள்ள முகவரிடம் பணத்தை வாங்கிக் கொள்ளலாம். முகவர்கள் மூலம் செலுத்துவதில் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கான அடையாள எண்ணைக் கொண்டும் பணத்தை செலுத்தலாம்.

கட்டணங்கள்

இப்படியான பண பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு மிக குறைந்த அளவில் கமிஷன் பிடிக்கப்படும். அதிகபட்சமாக இது 0.5 சதவீதம் வரை இருக்கும். சில வங்கிகள் ஒரு லட்ச ரூபாய்வரை மாற்றிக் கொள்ள ரூ. 5 கட்டணமாக வசூலிக்கின்றன உள்நாட்டு நாணய மதிப்பில் அப்போது நிலவும் மதிப்புக்கு ஏற்ப தொகை பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x