Published : 20 Jan 2015 10:36 AM
Last Updated : 20 Jan 2015 10:36 AM

மதிப்பெண்கள் வாரி வழங்கும் வணிகவியல்

உயர் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றைப் பற்றி தொலைநோக்குப் பார்வையோடு யோசிப்பவர்களுக்கு வணிகவியலை அடிப்படையாகக் கொண்ட படிப்புகளே கை கொடுக்கும். ஆடிட்டர் பணியையோ, போட்டித் தேர்வுகளை அடிப்படையாகக்கொண்ட வங்கி, ரயில்வே, ஆசிரியர் பணியிடங்களையோ இலக்காகக் கொண்டவர்களுக்கு இவை உதவும். அலட்டிக்கொள்ளாமல் அதிக மதிப்பெண்களை அள்ளலாம். அதற்கான வழிகளை வழங்குகிறார் விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் முதுகலை வணிகவியல் ஆசிரியர் எஸ்.தண்டபாணி.

படித்தால் பலனுண்டு

வணிகவியல் பாடத்தில் படிக்காமல் மதிப்பெண்கள் கிடைக்காது. சுலபமான வழிமுறைகளைப் பின்பற்றிப் படிப்பவர்களுக்கு ஏமாற்றமில்லை. மொத்தம் 8 பாடங்கள். கெய்டுகளை தவிர்க்கலாம். பாடப்பகுதி வினாக்கள், முந்தைய ஆண்டு தேர்வு வினாத்தாள்கள் இவற்றிலிருந்து சுயமாக பயிற்சி மேற்கொண்டாலே, வணிகவியல் தேர்வுக்கான தயாரிப்பு சிறப்பான பலன் தரும். இந்தத் தயாரிப்பை மதிப்பெண்கள் வாரியாக முதலில் பார்ப்போம்..

ஒரு மதிப்பெண் வினாக்கள்

ஒரு மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 40 இருக்கின்றன. அவற்றில் சரிபாதி 20 வினாக்கள் ‘சரியான விடையைத் தேர்ந்தெடு’ வகையாக இருக்கும். மீதி ‘20 வினாக்கள் ‘கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்’ என்ற வகையில் இருக்கும். இதில் முதல் 20 வினாக்களுக்கு விடைகளைப் பார்த்ததுமே சரியான விடையை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். கோடிட்ட இடத்தை நிரப்புவதில்தான் சற்று கவனமும் பயிற்சியும் தேவை.

பாடங்கள் 1,2 லிருந்து தலா 3 வினாக்கள் கேட்கப்படும். இதே போல பாட எண்கள்: 3,4 லிருந்து தலா 7 வினாக்களும், பாட எண்கள் 5,6 லிருந்து தலா 6 வினாக்களும்; பாட எண்கள் 7,8 லிருந்து தலா 4 வினாக்களும் இடம்பெறும். பெரும்பாலான வினாக்கள் பாடங்களை ஒட்டிய பயிற்சி வினாக்களில் இருந்தே கேட்கப்படும். 2 மற்றும் 3 வது பாடங்களிருந்து மட்டும் உள்ளிருந்து வினாக்கள் கேட்கப்படும். மற்றபடி பாட இறுதி வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள் வினாக்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற்றாலே ஒரு மதிப்பெண் வினாக்களை எளிதில் எதிர்கொள்ளலாம்.

4 மதிப்பெண்கள்

15 வினாக்கள் தரப்படும். அதிலிருந்து 10 வினாக்களுக்குப் பதில் அளிப்பதான சாய்ஸ் வசதியோடு 4 மதிப்பெண்கள் வினாக்கள் கேட்கப்படும். பாட எண்: 2- ல் இருந்து 1 கேள்வியும், ஏனைய பாடங்களில் இருந்து தலா 2 கேள்விகளும் வழக்கமாகக் கேட்கப்படுகின்றன. இதிலும் பாட இறுதியில் இருக்கும் வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் தேர்ச்சி பெற்றாலே போதும். சில வினாத்தாள்களில் இதுவரை கேட்கப்படாத ஒன்றிரண்டு வினாக்கள் வரலாம். ஆனால் சாய்ஸ் இருப்பதால் அவற்றைப் பற்றி கவலையடைய அவசியமில்லை.

8 மதிப்பெண்கள்

இந்த வினாக்களில் 8 - ல் 5 வினாக்கள் தேர்ந்தெடுத்து எழுதும் அளவுக்கு சுலபமாகவே சாய்ஸ் வழங்கப்பட்டிருக்கும். பாட எண்: 2- லிருந்து 8 மதிப்பெண்கள் கேட்கப்படுவதில்லை. பாட எண் 4-லிருந்து இரண்டு 8 மதிப்பெண்கள் வினாக்கள் இடம்பெறும். ஏனைய பாடங்களில் தலா ஒரு கேள்வி இடம்பெறும். இந்த வகையில் பாட எண்கள் 1,3,4,5 ஆகியவற்றிலிருந்து 5 கேள்விகளையும் எழுதிவிடலாம். பாட எண்கள்: 4,5 ஆகியவற்றைச் சிரமமாக உணரும் மாணவர்கள், அவற்றுக்குப் பதிலாக எளிதான பாடங்களாகிய 6,7,8-லிருந்து அவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதலாம்.

20 மதிப்பெண்கள்

‘அல்லது’ வகையிலான 4 வினாக்கள் தலா 20 மதிப்பெண்கள் வாங்கித்தரும். இந்த வகையில் இடம் பெறும் 8 கேள்விகளும் தலா ஒரு பாடத்திலிருந்து கேட்கப்படும். ‘அல்லது’ என ஆரம்பித்து தரப்படும் இந்த இணைக் கேள்விகள் பெரும்பாலும் 1,8; 2,7; 3,6; 4,5 என்ற வகையிலேயே இதுவரையிலும் கேட்கப்பட்டு வருகின்றன. இதற்கு எந்த நிச்சயமும் இல்லை என்றபோதும், இதுவரையிலான வினாத்தாள்கள் இந்த முறையையே பின்பற்றியுள்ளன. ஆகவே இப்பிரிவின் 80 மதிப்பெண்களையும் பெற, முதல் 4 பாடங்களைத் தெரிவு செய்து படித்தாலே போதும்.

செண்டமும் சாத்தியமே

மேற்கண்ட வகையில் திட்டமிட்டுப் படிப்பதோடு பின்வரும் கவனக்குறிப்புகளை மனதில்கொண்டால் வணிகவியலிலும் செண்டம் சாத்தியமே. ஒரு மதிப்பெண் பிரிவில் ‘கோடிட்ட’ வகை வினாக்கள் இடம்பெறும் 20 வினாக்களுக்குக் கவனம் தேவை. பாடங்களின் உள்ளிருந்து வினா கேட்கப்படும் பாட எண்கள் 2,3 ஆகியவற்றுக்குக் கூடுதல் கவனம் தேவை.

இதுவே போதும். 8 மற்றும் 10 மதிப்பெண்கள் வினாக்களுக்குப் பக்கம் பக்கமாக எழுதத் தேவையில்லை. குறிப்பிட்ட கேள்விக்கான ‘பாயிண்ட்கள்’ அவற்றின் எண்ணிக்கைக்கு உரிய வகையில் எழுதினால் போதும். அதிகமாக எழுதும் முனைப்பில் சொந்தமாகவோ, அதிக வரிகளுக்காகக் கதையாக நீட்டி முழக்கியோ எழுத வேண்டாம்.

எளிதில் 112 மார்க்

பாடத் தேர்ச்சியை இலக்காகக் கொண்டவர்கள் கூடப் பின்வரும் முறையில் 112 மதிப்பெண்களை எளிதில் எடுக்கலாம். பாட எண்கள் 1,7 ஆகியவற்றுடன் ஒரு மதிப்பெண் பகுதியைப் படித்து இவற்றை சாத்தியமாக்கலாம். ஒரு மதிப்பெண் பகுதி அல்லாது 1,7 பாடங்களில் இருந்தும் ஏனைய மார்க் வினாக்கள் மூலம் 72 மதிப்பெண்கள் பெறலாம்.

ஒரு மதிப்பெண் பகுதியை மட்டுமே குறிவைத்துப் படித்து 40 மதிப்பெண்கள் பெறலாம். இந்த வகையில் 1,7 பாடங்களையும், ஒரு மதிப்பெண் பகுதியையும் மட்டுமே படித்து சுலபத்தில் 112 மதிப்பெண்கள் பெறலாம். அதாவது இதுவரை படிக்காதவர்கள் கூட இன்று முதல் முயன்றால் கணிசமான மதிப்பெண்களை அள்ளலாம். அதே போன்று முதல் பாடத்தையும், ஒரு மதிப்பெண் வினாக்களையும் படித்தாலே 76 மதிப்பெண்கள் நிச்சயம்.

தவறுகள் தவிர்க்கலாமே

வணிகவியல் பாடத்தைப் பொறுத்தவரை நன்றாகப் படிப்பவர்கள் கூட, எழுதும்போது சறுக்குவார்கள். படித்தால் போதும் என்று எழுத்துப் பயிற்சியில்லாமல் தேர்வுக்குத் தயாராவதுதான் இதற்குக் காரணம். ஆகவே முக்கிய வினாக்களை எழுதிப்பார்ப்பது, திருப்புதல் தேர்வுகளில் சிரத்தையாக இருப்பது இந்தத் தவறுகளைத் தவிர்க்கும். சுருக்கம், தெளிவு ஆகிய இரண்டையும் மனதில் கொண்டால் மதிப்பெண்களும் சாத்தியம். நேரமும் விரயம் ஆகாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x