இளம் ராமனின் இசை ஆய்வுகள்

இளம் ராமனின் இசை ஆய்வுகள்
Updated on
2 min read

சர்.சி.வி.ராமனை உங்களுக்குத் தெரியும். ஒளியைப் பற்றிய அவரது ஆய்வுகள் ‘ராமன் விளைவு’ என்று உலக விஞ்ஞானிகளால் போற்றப்படுகின்றன. ஆனால் ராமன் அலைகள் என்று ஒன்று இருக்கிறது. அது உங்களுக்குத் தெரியுமா?

சென்னையின் பிரஸிடன்ஸி கல்லூரியில்தான் இயற்பியல் மாணவராக ராமன் இருந்தார். மாணவராக இருக்கும்போதே அவர் பல நாடுகளின் விஞ்ஞான இதழ்களை வாசித்தார். அதனால் அவரது ஆய்வுத்திறன் மேம்பட்டு இருந்தது. அப்போதே அவர் அறிவியல் ஆய்வுகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். அந்தக் காலத்தில் நவீன ஆய்வகங்கள் தமிழகத்தில் கிடையாது.

அதனால் என்ன? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமாச்சே! இசைக்கருவிகள் எல்லாம் அவரது ஆய்வுக் கருவிகள் ஆயின.எந்த இசைக் கருவியில் இருந்து வெளியாகும் இன்னிசைக்கும் மூன்று பண்புகள் உண்டு.

# இசை ஒலியின் அடிப்படை அதிர்வெண்

# இசை ஒலியின் நாத அளவு

# இசை ஒலியின் பண்பு

வயலின் இசையின் தனித்தன்மையை ராமன் ஆராய்ந்தார். அது பற்றி ஹெம்ஹோல்ட்ஸ் என்பவர் ஏற்கனவே சில அடிப்படைக் கருத்துகளை மட்டும் கூறியிருந்தார். ராமன் அவற்றை மேலும் வளர்த்தார்.

இசையின் பகுதிகள்

வயலினின் விறைப்பான கம்பியின் மேல் குதிரை வால் முடியிலான வில் ஓடும்போது கம்பி சிறிது இழுக்கப்பட்டுப் பின்னர் வழுக்கிப் பழைய நிலை மீளும். இந்த ஓட்டமும் வழுக்கலும் தொடரும். விட்டு விட்டுத் தொடரும். அப்போது கம்பியில் குறுக்கு அலைகள் தோன்றும். அவை வில் தொடும் இடத்திலிருந்து கம்பியின் இருபுறமும் பரவும்.

கம்பியின் முடிவில் அவை பிரதிபலிக்கப்பட்டு எதிர் அலைகளுடன் கலந்து நிலை அலைகளாக மாறும். இதனால் கம்பியில் அடிப்படை அதிர்வெண் ஒலியும், அதன் முழு மடங்கான அதிர்வெண் கொண்ட ஒத்திசை ஒலியும் உண்டாகும். இவற்றின் சேர்க்கை ஒலியே வயலினில் இருந்து வெளிப்படும் இனிய ஒலி.

நிலை அலைகளின் உருவ அமைப்பே வயலினின் தனித்தன்மையான ஒலிக்குக் காரணம் என்று சொன்ன ராமன் அதற்குச் சில சோதனைகளைச் செய்தார். அவற்றை ஒரு அறிவியல் கட்டுரையாக எழுதினார். இன்றும் அவரது விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

மிருதங்க ஆய்வு

கம்பியிலிருந்து வெளியாகும் இசை ஒலியை எவ்வாறு வயலினில் உள்ள பாலம், உட்கூட்டின் அமைப்பு பெரிதாக்குகின்றன என்று அவர் அறிவியல் விளக்கங்கள் தந்தார்.

சில வயலின்களில் வுல்ப் அபஸ்வரம் என்ற ஒன்று தோன்றும். அதனை ராமன் விளக்கியதும் அதைத் தவிர்ப்பதற்கான வழிகள் பிறந்தன. இன்றும் ராமனின் வயலின் ஆய்வுகள் பாராட்டப்படுகின்றன.

அதன்பிறகு மிருதங்கத்தை ஆராய்ந்தார். மேலை நாட்டு டிரம்ஸில் வராத இசை மிருதங்கத்தில் வருவதை அவர் ஆராய்ந்தார்.வட்டமான உலோகத்தைத் தட்டினால் அபஸ்வரம்தான் வரும். அதைத் தவிர்ப்பதற்காகப் பழந்தமிழர்கள் இருபக்கத்திலும் விறைப்பான தோல்களைக் கட்டியுள்ளனர். அதுவும் ஒருபக்கத்தில் மட்டும் தோலின் மேல்பக்கத்தை வட்டமாக நீக்கிவிட்டு உள்தோலின் மேல் இரும்புத்தூள், கரி, பிசின் ஆகியவற்றின் கலவையைப் பூசுவார்கள்.

அதன் கனம் அபஸ்வரத்தை நீக்கும்விதமாக இருக்கும். மறுபக்கத்தில் உள்ள தோலின் மையத்தில் ரவை மாவைப் பூசுவார்கள். இவ்வளவும் செய்தபிறகு மிருதங்கத்தைத் தட்டினால் அடிப்படை ஒலியும், அதன் முழுப்பெருக்க அதிர்வெண் ஒத்திசை ஒலியும் வெளியாகும் என மிருதங்கத்தின் இசை ஒலியை அறிவியல்பூர்வமாக விளக்கியவர் இளைஞர் ராமன்தான்.

மிருதங்கத்தைச் செங்குத்தாக வைத்து அதன் தோலின்மேல் பொடிமணலைப் பரப்பி வைத்துப் பின் மேல்பக்கத்தைத் தட்டினார்.மணல் ஒன்றுகூடி ஒரு நீள்வடிவத்தை உருவாக்கியது. அதை விளக்கி ராமன் இசையை அறிவியல் ஆக்கினார். அவரது விளக்கங்கள் சிறந்த மிருதங்கக் கருவிகள் உருவாக வழி காட்டுகின்றன.

அறிவியலாகிய அனுபவம்

தம்பூராவையும் ராமன் ஆராய்ந்தார்.பொதுவாக மீட்டும் கருவிகளில் சில ஒத்திசைகள் வராது. ஆனால் தம்பூராவில் தொடர்ச்சியான ஒத்திசைகள் வெளியாகிப் பின் இசை ஒலி வருகிறது.தம்பூராவில் கம்பியைத் தாங்கும் பாலம் அகலமாகவும் சாய்ந்தும் இருக்கிறது.இதனால் மீட்டப்படும் கம்பிகள் பாலத்தைச் சற்று அதிகமாகவே தொட்டுக்கொண்டிருக்கும்.

கம்பிக்கும் பாலத்துக்கும் இடையே ஒரு நூலையும் வைத்திருப்பார்கள். மீட்டப்படும் கம்பி பாலத்தின்மீது மோதுவதால் ஒரு ரீங்கார ஒலி உண்டாகும். இதெல்லாம் சேர்ந்து மொத்தத்தில் சிறப்பான பின்னணி இசை உண்டாகும். அது பாடுபவர் குரலுடன் கலந்து இணைந்து நிறைவு தருகிறது. இதே அமைப்புதான் வீணையிலும் உள்ளது.

பழந்தமிழர்கள் காலங்காலமாக அனுபவத்தில் உருவாக்கியதை ராமன் அறிவியலால் விளக்கினார். இந்த ஆய்வுகள் முடியும் தருவாயில் அவருக்குக் கல்கத்தாவில் பேராசிரியர் வேலை கிடைத்துவிட்டது. அங்கு போய் அவர் ஒளியைப் பற்றிய ஆய்வுகளில் மூழ்கிவிட்டார். அதன் முடிவில்தான் ‘ராமன் விளைவு’ எனும் கண்டுபிடிப்பை வெளியிட்டார். அதுதான் அவருக்கு நோபல் பரிசை வாங்கித் தந்தது.

இளமையில் அவருக்கு ஏற்பட்ட இசை ஆர்வம் தொடர்ந்தாலும் அவரது ஆராய்ச்சி அதற்குப் பிறகு தொடரவில்லை. இசைத்துறையில் தொடங்கிய அவரது ஆய்வு அவர் இசைபட வாழ்வதற்கு வழிவகுத்தது.

கட்டுரையாசிரியர்

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சூரிய- இயற்பியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தொடர்புக்கு: soori1938@yahoo.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in