Last Updated : 17 Jan, 2015 04:43 PM

 

Published : 17 Jan 2015 04:43 PM
Last Updated : 17 Jan 2015 04:43 PM

நடமாடும் தாவரவியல் களஞ்சியம்

இன்றைக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றால், உடனே எல்லோரும் ஓடிவருவது மரக்கன்று நடுவதற்காகத்தான் இருக்கும்! ஆனால், மரக்கன்று நடப்பட்ட பிறகு நிஜமாகவே பராமரிக்கப்படுகிறதா, வளர்க்கப்படுகிறதா என்பது தனிக் கேள்வி.

அதேநேரம் சாலையிலுள்ள ஒரு மரத்தைக் காட்டி, அது என்ன மரம் என்று கேட்டால், பலருக்கும் தெரியாது. மற்றொரு பக்கம் ஒரே மரத்துக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் இன்றைய நிதர்சன நிலை.

ஆனால், நம் காலில் மிதிபடும் தாவரம் முதல், உயர்ந்து வானைத் தொட முயலும் மரம் வரை ஒவ்வொரு தாவரமும் தனித்துவம் கொண்டது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சிறப்புப் பண்புகள், பயன்கள் உண்டு. ஆனால், குறிப்பிட்ட ஒரு தாவரத்தைப் பற்றிய அடிப்படை விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தால், அந்தத் தாவரத்தின் சரியான பெயர் முதலில் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி ஒரு தாவரத்தின் சரியான பெயர் தெரியவில்லை என்றால், அந்தத் தாவரம் குறித்த அறிவே முற்றிலும் தடைபடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. பயன் அறியப்படாமலேயே அத்தாவரம் மனிதர்களால் முற்றிலும் அற்றுப்போகவும் நேரிடலாம். அதனால்தான் தாவரங்களுக்குப் பெயரிடுவதை அறிமுகப்படுத்திய கார்ல் லின்னேயஸ் ‘பெயரிடுவது அறிவியலின் அடிப்படை' என்றார். குழப்பத்தைக் களையும் பொருட்டு, அறிவியல் பெயர்கள் உருவாக்கப்பட்டன.

15,000 பெயர்கள்

அறிவியல் கற்ற பலரே தாவரங்களைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படாமல் இருக்கும்போது, பள்ளி இறுதி வகுப்பைத் தாண்டாத ஒரு விவசாயி நாட்டில் காணப்படுகிற 15,498 தாவரங்களைப் பற்றி விரல் நுனியில் தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். அதுவும் தமிழில் அந்தப் பெயர்களைத் தொகுத்திருக்கிறார் என்றால், அது எவ்வளவு பெரிய சாதனை?

இந்தச் சாதனையைச் செய்தவர் பண்ருட்டியைச் சேர்ந்த பஞ்சவர்ணம். அடிப்படையில் விவசாயியான இவர், பண்ருட்டி நகராட்சித் தலைவராக இரண்டு முறை பணியாற்றி இருக்கிறார். நகராட்சித் தலைவராக இருந்த காலத்தில் ‘மின் ஆளுமை'

(இ கவர்னன்ஸ்) முறையைத் தன்னுடைய நகராட்சியில் அறிமுகப்படுத்தியவர். அந்தச் சாதனைக்காக மத்திய, மாநில அரசுகளிடம் விருது பெற்றிருக்கிறார்.

அது அவருடைய ஒரு முகம்தான். தாவரங்கள் மீதான அவருடைய காதல்தான் எல்லாவற்றை விடவும் பெரிது. தாவரங்கள் குறித்து நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார். தாவரங்கள் மீது தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தையும் அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தது குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.

துல்லிய விவரம்

“அடிப்படையில் நான் ஒரு விவசாயி. அதனால் தாவரங்கள் மீது இயற்கையாகவே ஆர்வம் உண்டு. நம்மில் பலருக்கு நன்கு அறிமுகமான தாவரங்கள் குறித்துச் சில விஷயங்கள் தெரியும். அது அறிவியல்பூர்வமானதாகவும் இருக்கலாம். அல்லது செவி வழியாகக் கேட்ட, உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவும் இருக்கலாம்.

நம்மிடையே உள்ள தாவரங்களைப் பற்றித் தமிழில் அறிந்துகொள்வதற்குத் தேவையான வசதிகள் இல்லை. அதனால், அது குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் தாவரங்களைப் பற்றித் தகவல்களைச் சேகரிக்கும் ஆர்வம் துளிர்த்தது" என்கிறார் பஞ்சவர்ணம்.

மலைக்கும் பணி

இந்தியாவில் 15,498 தாவரங்கள் இருக்கின்றன. அவை எந்தத் தாவர உலகம், இனம், தலைமுறை, வகுப்பு, குலம், தலைக்கட்டு, குடி, பிறவி, பெயர்வழி ஆகியவற்றைச் சேர்ந்தவை என்றும், அவற்றின் தாவரவியல் பெயர், வேறு இலக்கிய, அறிவியல் பெயர்கள் குறித்தும் தமிழில் தொகுத்திருக்கிறார்.

சங்க இலக்கியத்தில் 243 தாவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சித்த மருத்துவத்தில் 600 தாவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் அறிவியல் பெயர்களுக்கு நிகராக, தமிழ்ப் பெயர்களை இவர் பட்டியலிட்டிருக்கிறார். சங்க இலக்கியத்தில் அந்தப் பெயர்களைப் பயன்படுத்திய புலவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டிருக்கிறார்.

தவிர, இவற்றின் மருத்துவக் குணங்கள், இவை வளர்க்கப்படுகிற கோயில்கள், இந்தத் தாவரங்களைப் பெயர்களாகக் கொண்ட ஊர்கள் மற்றும் மனிதப் பெயர்கள், தமிழ் தவிர்த்து மற்ற 9 இந்திய மொழிகளில் வழங்கக்கூடிய பெயர்கள், அந்தத் தாவரங்களின் வழக்குப் பெயர்கள், அந்தத் தாவரங்களைக் கொண்டு வழங்கப்படுகிற விடுகதைகள், பழமொழிகள் போன்றவற்றையும் தொகுக்கும் மலைப்பான காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார்.

இந்தத் தகவல்களை எல்லாம் வெகுவிரைவில் இணையம் வழியாக அனைவருக்கும் இலவசமாகத் தரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். தற்சமயம், பரவலாக அறியப்பட்ட தாவரங்களைப் பற்றிப் புத்தகங்கள் எழுதி வருகிறார்.

இணைப் பெயர்

சரி, தாவரங்களுக்கு ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் பெயர்களுக்கு நிகராகத் தமிழில் எப்படிப் பெயர் சூட்டினார்?

"இனம் காணப்பட்டதும், காணப்படாததுமாகப் பல வகையான தாவரங்கள் உலகில் இருக்கின்றன. அவற்றை இனங்கண்டு அவற்றுக்கு அறிவியல் பெயரிடுதல் நுட்பமான ஆய்வுப் பணி. இந்தியாவில் ‘பெந்தம் அண்ட் ஹூக்கர்' முறையில் தாவரங்களுக்குப் பெயரிடப்படுகிறது.

ஒரு தாவரம் வளரும் இடம், அதன் நிறம், வடிவம், பண்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்துப் பெயரிடப்படுகிறது. அதைப் பின்பற்றித் தாவரங்களுக்குத் தமிழில் பெயரிட்டுள்ளேன்" என்கிறார்.

அவர் சொல்வதையெல்லாம் கேட்டு வாய் பிளந்து ஆச்சரியப்படவே முடிகிறது. அவர் சேகரித்து வைத்துள்ள இந்தத் தகவல்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்போது, நிச்சயம் அது மாணவர்கள், அறிவியலாளர்கள், தமிழறிஞர்கள், பத்திரிகையாளர்கள், இயற்கை ஆர்வர்களுக்குப் பயன்படும். அந்தத் தகவல்களைச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நம்முடைய கடமை என்றே சொல்ல வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x