Published : 11 Apr 2014 10:22 am

Updated : 11 Apr 2014 10:22 am

 

Published : 11 Apr 2014 10:22 AM
Last Updated : 11 Apr 2014 10:22 AM

அதிர்ஷ்டம் என்பது பொய்!: லட்சுமி மேனன் பேட்டி

சுந்தர பாண்டியன் படத்தின் ஆரம்பித்த வெற்றி பாண்டிய நாடு வரை தொடர்ந்திருப்பதில் கோடம்பாக்கத்தில் ‘அதிர்ஷ்டக் கதாநாயகி’ என்று புகழப்படுகிறார் 17 வயதே நிரம்பிய லட்சுமி மேனன். இத்தனை சிறிய வயதில் பெரிய உயரத்தை எட்டியிருக்கும் இவர், விஷால் ஜோடியாக நடித்திருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படம் இன்று வெளியாகிறது. இதற்கிடையில் விமல் ஜோடியாக நடித்துவரும் ‘மஞ்சப் பை’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளச் சென்னை வந்திருந்தவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

லட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இருக்கிறதா?


அறவே கிடையாது. அதிர்ஷ்டம் என்று சொல்வது ஹம்பக். என்னை ‘லக்கி ஹீரோயின்’ என்று சொல்வதையும் நான் விரும்பவில்லை. சினிமாவுக்காகப் பெயரை மாற்றிக்கொள்ளச் சொன்னபோது நான் மறுத்துவிட்டேன். நான் நடித்த படங்கள் வெற்றிபெற்றதற்குக் காரணம் நான் அல்ல. நல்ல கதை, ரசிகர்களைக் கவரும் கதாபாத்திரங்கள், திறமையான இயக்குநர்கள், நிறைய ரசிகர்களைக் கொண்ட ஹீரோக்கள் என்று எல்லாமே சரியாக அமைந்த படங்கள் எனக்கு அமைந்ததால் அந்தப் படங்கள் வெற்றி பெற்றன. நான் இதுவரை கதை கேட்டதும் கிடையாது. என் கேரக்டர் பற்றிக் கவலைப்பட்டதும் கிடையாது. இயக்குநர்களை நம்பினேன். அவர்கள் என்னைக் கைவிடவில்லை.

பத்துப் படங்களைத் தாண்டி விட்டீர்கள், ஆனால் படங்களில் ஹீரோக்களைக் காதலிப்பதைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறோம் என்று நினைத்ததுண்டா?

அந்த மாதிரி சீரியஸாக யோசிக்கவெல்லாம் எனக்குத் தெரியாது. நான் சீரியஸான பெண்ணும் இல்லை. இதற்கு முன் எப்படியோ... நான் சிகப்பு மனிதனில் என் கதாபாத்திரத்தைப் பார்த்திருந்தால் நீங்கள் இப்படிக் கேட்டிருக்க மாட்டீர்கள். அதேபோல மஞ்சப் பை படத்தில் டாக்டர் கார்த்திகாவாக நடிக்கிறேன். சென்னைப் பெண் எப்படியிருப்பாள் என்பதற்கு என் கேரக்டர் உதாரணமாக இருக்கும். ஜிகர்தண்டாவில் கண்ணம்மா. இதில் நீங்க மதுரைப் பெண்ணைப் பார்க்கலாம். சிப்பாய் படத்தில் என் கேரக்டர் பெயரே தேன்தமிழ். படம் முழுவதும் சுத்தமான தமிழில் ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் பேசும் புரட்சிகரமான கேரக்டர். இதற்கு மேல் வித்தியாசமான கேரக்டர்களை எங்கே போய்த் தேடுவீர்கள்?

சினிமா தந்திருக்கும் புகழால், உங்கள் நண்பர்கள் உங்களை விட்டு விலகிப் போயிருப்பார்கள் இல்லையா?

நல்லவேளையாக எனக்கு அந்த மாதிரி நண்பர்கள் அமையவில்லை. பள்ளியில் எக்கச்சக்க ஃப்ரெண்ட்ஸ். நான் சினிமாவில் நடிப்பதைப் பற்றி அவர்கள் அலட்டிக்கொண்டதே கிடையாது. லட்சுமி, மரியா, அனந்தகிருஷ்ணன், ஹரி, சச்சின் என்று எனது நெருக்கமான நண்பர்கள்கூட எனது பாபுலாரிட்டியை கேர் பண்ணுவது கிடையாது. ஹீரோயின் ஆகிவிட்டோம் என்று வீட்டில் முடங்கிக் கிடக்காதே என்று அவர்கள் சொல்கிறார்கள். ஷூட்டிங் இல்லாத நாட்களில் கொச்சி நகரின் கடைத்தெருகளில் சாதாரணமாக ஷாப்பிங் செய்துகொண்டிருப்பேன். அங்கே பெரிய ஹீரோக்களைப் பார்த்தால் கூட்டம் கூடுமே தவிர ஹீரோயின்களைச் சட்டை செய்ய மாட்டார்கள். இங்கே என் வெற்றிக்குக் காரணமான எல்லோருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிவதில்லையே என்பதுதான் எனது ஒரே கவலை.

சசிகுமாருடன் மீண்டும் இணைந்து நடித்தபோது கிசுகிசு வந்தது. தற்போது விஷாலுடன் காதல் தீவிரம் என்றே செய்தி வருகிறது. நீங்கள் அழுத்தம் திருத்தமாக இதை மறுத்ததாகத் தெரியவில்லையே?

இந்தமாதிரி கிசுகிசு வரவில்லை என்றால்தான் பிரச்சினையே. அதனால் கிசுகிசுக்களை நான் வரவேற்கிறேன். அதைப் பற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை. சினிமாவில் விஷால் மாதிரி ஓபன் ஹார்ட்டெட் மனிதர் ஃபிரெண்டாகக் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இங்கே எனது வளர்ச்சியில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அதை எங்கேயும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன். விஷாலைப் போலவே தற்போது கௌதம் கார்த்திக்கும் நல்ல ஃபிரெண்ட். அவரோடு வாய்ப்பு அமைந்தால் மீண்டும் நடிப்பேன். சித்தார்த்துக்கு நான் ஃபேன். அவரும் இப்போது எனக்கு ஃபிரெண்ட்தான்.

விஷால் லட்சுமி மேனன் காதலை மறைக்கத்தான் நீங்கள் நண்பர்களின் லிஸ்ட்டை அதிகப்படுத்துகிறீர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது…

திட்டவட்டமாகச் சொல்ல வேண்டும் என்றால் நான் விஷாலைக் காதலிக்க வில்லை. ஆனால் அவர் என்னைக் காதலிக்கிறாரா என்று எனக்குத் தெரியாது.

விஷால் உங்களைக் காதலிப்ப தாகச் சொன்னால் உங்கள் ரியாக்‌ஷன் எப்படியிருக்கும்?

அப்படி நடந்தால் அது எனது பர்செனல் விஷயமாகி விடும். அதன் பிறகு அதை மீடியாவிடம் டிஸ்கஸ் பண்ண மாட்டேன். ஆனால் அதற்கெல்லாம் அவருக்கும் இப்போது நேரமில்லை. அவர் அடுத்தடுத்து வெற்றி கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். நானும் அப்படித்தான்.

மஞ்சப் பை உட்படத் தமிழில் ஏற்றுக்கொண்ட எல்லாப் படங்களையும் முடித்து விட்டீர்கள். அடுத்து விஜய் சேதுபதியுடன் நடிக்கிறீர்கள் இல்லையா?

அது தவறான செய்தி. விஜய் சேதுபதியுடன் நடிக்கக் கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. இப்போது ‘அவதாரம்’ என்ற மலையாளப் படத்தில் ஜோஷி சார் இயக்கத்தில் திலிப் ஜோடியாக நடிக்கிறேன். படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. அடுத்த தமிழ்ப் படம் இன்னும் முடிவாகவில்லை. எனக்காக அம்மா கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்.


நான் சிகப்பு மனிதன்விஷால்லட்சுமி மேனன் பேட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x