Last Updated : 10 Apr, 2014 05:04 PM

 

Published : 10 Apr 2014 05:04 PM
Last Updated : 10 Apr 2014 05:04 PM

கார்ட்டூன் தேசம்: ரோபோ பூனை டோரேமான்!

அறிவியல் கதைகளில் காலப்பயணம் (Time travelling), கால இயந்திரம் (Time machine) போன்றவற்றை அடிப்படையாகக்கொண்ட கதைகள் ஏராளம். நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கோ கடந்த காலத்துக்கோ சென்று வருவதுதான் காலப்பயணம். இது அறிவியல் ஆதாரமற்ற, அதேசமயம் சுவாரஸ்யமான கற்பனைதான். இதுபோன்ற கதைகள் காமிக்ஸ் புத்தகங்கள், கார்ட்டூன் வடிவங்களில் அதிகம் வெளியாகின்றன. அப்படி ஒரு கார்ட்டூன் தொடர்தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டோரேமான்!

22-ம் நூற்றாண்டில் வாழும் சிறுவன் செவாஷி நோபி. இவனுடைய கொள்ளுத் தாத்தா நோபிதா நோபி சிறுவனாக இருந்தபோது பல அவமானங்களைச் சந்தித்தவர். அதனால் அவர் வளர்ந்த பின்னர், விரக்தியில் தனது தொழிலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடுகிறார். இதனால் அவரது குடும்பத்தில் பணப் பிரச்சினை ஏற்படுகிறது. தலையெழுத்தை மாற்ற முடியுமா என்று அவர் நொந்துபோயிருக்கலாம்.

ஆனால், அவரது கொள்ளுப் பேரனான செவாஷி நோபி அதை மாற்ற நினைக்கிறான். அதாவது, தனது தாத்தா நோபிதா நோபி சிறுவனாக வாழ்ந்த காலத்தை மாற்றத் தீர்மானிக்கிறான். இது எப்படி சாத்தியம் என்று கேட்கக் கூடாது. இது கற்பனைக் கதை தானே! தனது தாத்தாவுக்குத் துணையாக ஒரு ரோபோ பூனையை அனுப்புகிறான். அந்தப் பூனை பல வருடங்கள் பின்னோக்கிச் சென்று நோபிதா நோபியின் முன் தோன்றுகிறது. அதுதான் குறும்பும் அசாத்திய திறமைகளும் கொண்ட ‘டோரேமான்’. அப்புறம் என்ன? ஒரே லூட்டிதான்.

இந்தத் தொடர் ஜப்பானிய காமிக்ஸ் வடிவமான ‘மாங்கா’ வடிவத்தில்தான் முதலில் வெளியானது. இன்று உலகமெங்கும் உள்ள சிறுவர்களைக் கவர்ந்த கார்ட்டூன் தொடராக உள்ளது இந்த டோரேமான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x