புத்தக விற்பனையில் பாரதி இயக்கம்

புத்தக விற்பனையில் பாரதி இயக்கம்
Updated on
1 min read

பாரதியாரின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சமூகப் பணிகளை மேற்கொள்வதற்காக, தஞ்சாவூரின் திருவையாறைச் சேர்ந்த 20 இளைஞர்களால், 35 ஆண்டுகளுக்கு முன்பு திருவையாறு பாரதி இயக்கம் தொடங்கப்பட்டது.

தற்போது 160-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களாக இது வளர்ந்துள்ளது. எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், பொன்னீலன், கந்தசாமி உள்ளிட்டவர்களை கவர்ந்த இயக்கமான இது,பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரால் தற்போது இயக்கப்படுகிறது.

பாரதி பற்றிய கருத்தரங்குகள், கலை விழாக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், விவசாயிகளுக்கான விழிப்புணர்வுகள், இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சிகள் உள்ளிட்ட இலக்கிய, சமூகப் பணிகளால் தஞ்சை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தோர் மத்தியில் அறியப்படும் இயக்கமாகவும் இன்று வளர்ந்துள்ளது.

பாரதி இயக்கத்தினைத் திறம்பட நடத்திச் செல்லத் தேவையான நிதி ஆதாரத்துக்காக, தியாகராஜரின் ஆராதனை விழாக்களில் 1991- ம் ஆண்டு முதல் புத்தகக் காட்சி நடத்தி வருகிறோம் என்கிறார் திருவையாறு பாரதி இயக்கத்தின் அறங்காவலரான வழக்கறிஞர் என். பிரேமசாய்.

2400 சதுரஅடிப் பரப்பில் இலக்கியம், அரசியல், இசை, ஆன்மிகம், தன்னம்பிக்கை, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறை புத்தகங்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து வருகிறோம். நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் 80க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருந்தோம்.

புத்தகக் காட்சியைத் தொடர்ந்து நடத்துவதில் இடர்ப்பாடுகள் பல இருப்பினும், திருவையாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோருக்கு, மனிதனை மேன்மைப்படுத்தும் புத்தகங்களை அறிமுகம் செய்வதற்காக, புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்கிறார் என். பிரேமசாய்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in