

இந்த வாரத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று இலங்கை அதிபர் தேர்தல். இந்தத் தேர்தலில் மைத்ரிபால சேனா வெற்றிபெற்றார். பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்தார். இலங்கைத் தேர்தலின் பின்னணியையும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் பார்க்கலாம்.
ஆட்சி முறை
இந்தியாவுக்கு மிக அருகே உள்ள நாடாக இலங்கை இருந்தாலும், இங்கு ஆட்சி முறை மாறுபட்டது. இங்கே பிரதமரின் தலைமையிலான அமைச்சரவைக்குத்தான் அதிக அதிகாரங்களும் உள்ளன. இலங்கையில் அதிபருக்குத்தான் அதிக அதிகாரம். பிரதமர் இவருக்குத் துணையாகவே செயல்படுவார். இலங்கையில் அதிபர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.
1972-ம் ஆண்டில் இலங்கை குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. 1978-ம் ஆண்டுதான் அதிபர் ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் அதிபர் தேர்தல் 1982-ம் ஆண்டு நடைபெற்றது.
அதற்கு முன்பு வரை பிரதமர்தான் அதிகாரம் மிக்கவராக இருந்தார். அதிபருக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்ட பிறகு பிரதமரைத் தேர்வு செய்யும் அதிகாரமும் அதிபருக்கே வழங்கப்பட்டது.
வெற்றியும் தோல்வியும்
இலங்கை அரசியலமைப்புச் சட்டப்படி ஒருவர் இரண்டு முறை அதிபர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற நிலை முன்பு இருந்தது.
ஆனால், அதிபராக இருந்த ராஜபக்சே, அதிபர் பதவியில் உள்ள ஒருவர் இருமுறைக்கு மேல் போட்டியிடலாம் என்று அரசியலமைப்பின் 18-வது சட்டப் பிரிவைத் திருத்தித் தேர்தலிலும் போட்டியிட்டார். தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. என்றாலும் முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார் ராஜபக்சே.
ராஜபக்சேயின் பயணம்
2004-ம் ஆண்டில் இலங்கை பிரதமராக பொறுப்பேற்ற ராஜபக்சே, 2005-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெற்று அப்போது முதல் முறையாக அதிபராகப் பொறுப்பேற்றார். முதல் முறையாக அதிபராக இருந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுடனான உள் நாட்டுப் போரில் தீவிரம் காட்டினார்.
இந்தப் போரில் 2009-ம் ஆண்டில் வெற்றியும் பெற்றார். அதை முன்னிறுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே 2010-ம் ஆண்டில் ராஜபக்சே தேர்தலை நடத்தினார். அந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். மூன்றாவது முறை அது நடக்கவில்லை.
கடந்த தேர்தல்கள்
2005-ம் ஆண்டு தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கே களமிறங்கினார். அப்போது தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்ததால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ராஜபக்சே வெற்றி பெற்றார். 2010-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து உள் நாட்டுப் போரை முன்னின்று நடத்திய முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கினார். அந்தத் தேர்தலில் ராஜபக்சே அபார வெற்றி பெற்றார்.
இப்போது நடந்த தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால ஸ்ரீ சேனா களமிறங்கினார். இந்த முறை ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சி வேட்பாளருக்கே இலங்கை மக்கள் வாக்களித்துள்ளனர். குறிப்பாகத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் மைத்ரிபால ஸ்ரீ சேனாவுக்கே ஆதரவு இருந்தது. உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது ராஜபக்சே அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மைத்ரிபாலா.
மைத்ரிபாலா வெற்றியில் முக்கியமான அம்சம் நிறைய இருக்கிறது. இவரை ரணில் விக்ரமசிங்கே, சரத் பொன்சேகா, முன்னாள் அதிபர் சந்திரிகா விஜய குமாரதுங்கா எனப் பலரும் ஆதரித்தார்கள். இதற்காகவே, அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சந்திரிகா 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசியலுக்குத் திரும்பினார். சந்திரிகா, மைத்ரிபாலா, ராஜபக்சே ஆகிய மூன்று பேருமே சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். ராஜபக்சேவை எதிர்த்து இவர்கள் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
சந்திரிகா அதிபராக இருந்தபோது சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு யோசனை முன்வைக்கப்பட்டது. அது தமிழர்களின் நிலையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ரணில் விக்கிரமசிங்கே தமிழர் பிரச்சினையில் மாறுபட்ட அணுகுமுறை கொண்டவர். அவரை பிரதமராக மைத்ரிபாலா உடனே நியமித்துவிட்டார். சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்கே ஆதரவோடு மைத்ரிபால ஸ்ரீ சேனா தலைமையில் ஏற்பட்டுள்ள புதிய அரசால் மாற்றங்களைக் கொண்டுவர இயலுமா?
போருக்குப் பிந்தைய காயங்களை ஆற்ற முடியுமா? தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் கிடைக்குமா? தமிழர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வழி பிறக்குமா? அதிபர் ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.