Published : 26 Jan 2015 02:04 PM
Last Updated : 26 Jan 2015 02:04 PM

தொழில் முனைவோருக்கு உதவும் சிட்கோ

மாநில அளவிலான தொழில் வளர்ச்சிக்கு என்று தொடங்கபட்டது தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம். இதுதான் சிட்கோ என்று அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாடு அரசால் 1971ல் தொடங்கப்பட்டது. சிறு தொழில்களின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டது. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்கள் மற்றும் சிறு தொழில்களை ஊக்குவித்து கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் தொடங்கப்பட்டது.

ஏன் சிட்கோ

தொழிற்சாலைகளை ஒரே இடத்தில் அமைப்பதற்கு ஏற்ப இடங்களைத் தேர்வுசெய்து அந்த இடங்களை மேம்படுத்தும் வேலைகளை செய்கிறது. தொழில் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கி கொடுப்பதுதான் சிட்கோவின் முக்கிய பணி.

இதற்கான இடங்களைக் கண்டறிந்து அந்த இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, மூலப்பொருட்கள் எளிதாக கிடைப்பதற்கான வழி செய்வது, சந்தைப் படுத்துவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பது போன்றவற்றை சிட்கோ மேற்கொள்கிறது. தொழில் முனைவர்களுக்கு அவ்வப்போதைய வழிகாட்டுதல்களும் சிட்கோ வழங்கும்.

சிட்கோவில் இடம் பெறுவது எப்படி?

சிட்கோ நிறுவனம் தொழிற்பேட்டை அமைக்க உள்ள பகுதிகளில் விண்ணப்பங்களின் அடிப்படையில் கட்டடங்களை அமைப்பது அல்லது அடிப்படை வசதிகளை மேம்படுத்தி உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்கிறது. இது நீண்ட கால குத்தகையாக இருக்கும். இவ்வாறு இட வசதிகளை ஏற்படுத்துவதற்கு முன் தொழில் முனைவர்களின் தேவைகள் குறித்து கருத்தும் கேட்கப்படுகிறது. தொழில் முனைவர்களின் தகுதி மற்றும் கேட்பு அடிப்படையில் தொழிற்பேட்டையில் இடங்களை வாங்க முடியும்.

மூலப்பொருட்கள் விநியோகம்.

சிட்கோ நிறுவனம் முக்கிய மூலப்பொருட்களையும் உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கிறது. மூலப்பொருட்களை சந்தையிலிருந்து மொத்தமாக வாங்குகிறது. சிட்கோ உறுப்பினர்களுக்குத் தேவையின் அடிப்படையில் குறைந்த விலையில் கொடுக்கும்.

சந்தை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள்

சிட்கோ நிறுவனம் வாங்குபவர்கள் விற்பவர்களுக்கான சந்தையையும் ஏற்பாடு செய்கிறது. இதன் மூலம் சிறிய அளவில் தொழில் வியாபாரத்துக்கு உதவுகிறது. தவிர தொழில்நுட்பங்களில் மேம்பாடு சார்ந்த கருத்தரங்குகளை நடத்துகிறது. ஏற்றுமதி சார்ந்த தொழில்களையும் சிட்கோ ஊக்குவிக்கிறது. இதற்கென்று தனியாக இணையதள சேவை மூலம் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சேவை சிறு தொழில் முனைவர்கள் தங்களது விற்பனையை அதிகரிக்க வகை செய்கிறது.

மானியங்கள்

தொழிற்பேட்டையில் தொழிலைத் தொடங்கும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியமும் கிடைக்கும். இந்த நிறுவனங்களின் இயந்திரம் மற்றும் திட்ட மதிப்பிலிருந்து 25 சதவீதம் வரை மானியம் கிடைக்க வாய்ப்புள்ளது. மற்றும் அதிகபட்சமாக 30 லட்சம் வரை கிடைக்கும்,

தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் தற்போது 76 தொழிற்பேட்டைகள் உள்ளன. இதில் இதில் 36 தொழிற்பேட்டைகள் அரசால் நேரடியாக தொடங்கப்பட்டவை. சிட்கோ 44 தொழிற்பேட்டைகளை உருவாக்கியுள்ளது. இந்தத் தொழிற்பேட்டைகள் வெவ்வேறு கிராம மற்றும் பின் தங்கிய இடங்களில் அமைந்துள்ளன.

கிராமப்புற சிறு மற்றும் குறு தொழில்களை வளர்க்கும் பொருட்டுதான் சிட்கோ கொண்டுவரப்பட்டது. தொழில் முனைவர்கள் இதை சரியாக பயன்படுத்திக் கொள்வது வருமானத்தை தேடிக்கொள்வது சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x